சனி, 9 நவம்பர், 2013

கம்போடியாவில் இருந்து 32,000 டன் மணல் இறக்குமதி: தனியார் நிறுவன முயற்சி

சென்னை: கட்டுமான பணிகளுக்கு தேவையான, ஆற்று மணல் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கம்போடியாவில் இருந்து, 32 ஆயிரம் டன் மணலை இறக்குமதி செய்து, புதிய வாய்ப்பை உறுதி செய்துள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்பு, விதிமீறல், பசுமை தீர்ப்பாய தடை, "யார்டு' ஒப்பந்ததாரர்கள் முறைகேடு போன்ற காரணங்களால், தமிழகத்தில் செயல்பட்டு வந்த, 40க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், லாரிகளுக்கு ஒரு லோடு மணல் கிடைக்க இரண்டு நாள்கள் வரை ஆகிறது. அதனால், ஒரு கன அடி மணல், 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இறக்குமதி:

இந்நிலையில், கம்போடியா, மியான்மர் நாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு குறித்து, கட்டுமான நிறுவனங்கள் ஆராய துவங்கியுள்ளன.இதன் முதல்படியாக, கோவையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கம்போடியாவில் இருந்து, 32 ஆயிரம் டன் மணலை, கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் வழியாக, இறக்குமதி செய்ய முயற்சித்தது. கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், கம்போடியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மணல், கொச்சி துறைமுகத்தை அடைந்தது.

சிக்கல்:

ஆனால், மத்திய வேளாண் அமைச்சகத்தின், "பிளான்ட் குவாரன்டைன்' பிரிவு அதிகாரிகள், தங்களிடம் தரச் சான்று பெற வேண்டும் என்று வற்புறுத்தியதால், இறக்குமதி செய்யப்பட்ட மணல், துறைமுகத்திலேயே கிடத்தி வைக்கப்பட்டது. ஆனால், "இறக்குமதி மணலுக்கு இந்த குறிப்பிட்ட தரச்சான்று தேவையில்லை' என, கேரள உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பால், இறக்குமதி மணலை பயன்படுத்த இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.இதனால், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழக நிறுவனங்கள், கம்போடியா, மியான்மர், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மேலும், துறைமுகங்களுக்கும் இதனால் கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் கட்டுமானத்துறையினர் dinamalar.com

கருத்துகள் இல்லை: