செவ்வாய், 5 நவம்பர், 2013

167 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை ! 74 பேர் பலியான வங்கதேசக் கலவரம்

 டாக்கா: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் 74 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 167 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில், 57 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 74 பேர் கொல்லப்பட்டனர். இக்கலவரம் தொடர்பாக ஆயிரக்கணக்கான வீரர்கள் கைது செய்யப்பட்டனர். 74 பேர் பலியான வங்கதேசக் கலவரம்: 167 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை டாக்காவில் உள்ள 3-வது கூடுதல் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கிளர்ச்சி செய்த வீரர்களில் 167 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதுதவிர 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும், 251 பேருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி கட்சியின் முன்னாள் எம்.பி. நசிருதின் அகமது பின்டு, அவாமி லீக் தலைவரும் முன்னாள் படைவீரருமான டோரப் அலி ஆகியோரும் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வழக்கில் 242 பேர் நிரபராதிகளாக கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 846 பேரில் 26 பேர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: