1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம்,
உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக்
கொண்டிருந்தனர்.
அந்த மக்களோடு மக்களாக, வவுனியா, மாரம்பக்குளம் பகுதியில் செல்வராணி என்ற
இளம்பெண் தனது கணவர் பிரான்சிஸ் சேவியர், மகள் திரானி, 1 ½ வயது மகன்
தினேசுடன் தவித்துக் கொண்டிருந்தார்.
தினமும் செத்து.. செத்து.. எத்தனை நாள்தான் வாழ்வது என்று முடிவுக்கு வந்த
செல்வராணி, இனி உயிர் வாழ வேண்டும் என்றால், அண்டை நாடான இந்தியாவில்
தஞ்சம் அடைவோம் என்ற எண்ணத்தில் படகில் ஏறி குடும்பத்துடன் இந்தியா
வந்தார்.
இந்தியா வந்த அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சேவலூர் முகாமில்
அடைக்கப்பட்டனர். கொழும்பில் வங்கி மேலாளராக வசதியாக இருந்த பிரான்சிஸ்க்கு
சேவலூர் முகாமில் குழந்தைக்கு பால் டப்பா வாங்க கூட காசு இல்லாமல்
தவித்தார்.
இந்த கஷ்டத்திற்கு மத்தியில் அந்தத் தம்பதிகளுக்கு மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு டென்னிஸ் என்று பெயரிட்டனர்.
3 குழந்தைகள் ஆகி விட்ட நிலையில், செல்வராணி-பிரான்சிஸ் சேவியர்
தம்பதிகளால் குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை. அன்றாட வாழ்க்கையை
நகர்த்துவதற்கே அவர்களுக்கு போதும்.. போதும்.. என்று இருந்தது.
வாழ்ந்த இடத்தில் உயிர் பயம், வாழ வந்த இடத்தில் பசி பயம் என்ற நிலையில்,
குழந்தைகளின் பசியை தீர்ப்பதாக செல்வராணி சவுதி அரேபியாவிற்கு வீட்டு
வேலைக்கு செல்ல முடிவு எடுத்தார்.
இந்த முடிவுதான், அவர்களின் வாழ்க்கையை திசை மாறி இழுத்து சென்றது.
செல்வராணி வெளிநாட்டுக்கு புறப்பட்ட நேரம் அவரது கணவரின் உடல் நலம்
பாதிக்கப்பட்டது. கணவரையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய கடமையில்,
பிரியாவிடை பெற்று செல்வராணி வெளிநாடு சென்றார்.
அதன்பின்னர், நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த பிரான்சிஸ், தனது 3
குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு 1995-ம் ஆண்டு, சென்னையில் தெரிந்த
பாதிரியார் ஒருவரை பார்க்க 1995-ம் ஆண்டு வந்தார்.
அப்போது, குழந்தைகளுக்கு சென்னையில் முக்கியமான இடங்களை எல்லாம்
சுற்றிக்காட்டி விட்டு, ரயில் ஏறுவதற்காக ஆவடி ரயில் நிலையம் வந்தார்.
அப்போது அங்கு அதிக நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு ரயிலில் ஏறி குழந்தைகள் 3
பேரும் விளையாடி கொண்டிருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த ரயில் திடீரென புறப்பட்டு சென்று
விட்டது. விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் ரயிலில் இருந்து சத்தம்போட,
பிரான்சிஸ் சேவியரோ பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் அசைவின்றி
அமர்ந்திருந்தார்.
ரயிலில் அப்பாவை தேடி அழுது கொண்டிருந்த குழந்தைகள் 3 பேரிடமும் சிலர்
பேச்சு கொடுத்து தங்களுடன் வருமாறு கூறினார்கள். ஆனால், அவர்களின் எண்ணம்
குழந்தையை யாரிடமாவது பணத்திற்கு விற்று விடலாம் என்பதுதான்.
குழந்தைகளாக இருந்தாலும் அவர்களில் எண்ணத்தை புரிந்துகொண்ட அவர்கள் 3
பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அதன்பின்னர், பாபு என்ற
ரிக்ஷாகாரர் கையில் போய் சேர்ந்தனர். அவர் 3 குழந்தைகளையும் உதவும் கரங்கள்
அமைப்பில் கொண்டுபோய் சேர்த்தார்.
அங்குள்ள நிர்வாகிகள் குழந்தைகளை பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து
கொண்டிருந்தனர். அப்போது மேஜையில் இருந்த ஒரு நாளிதழை பார்த்து குழந்தைகள்
அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், அது குழந்தைகளின் தந்தையான பிரான்சிஸ்
சேவியரின் புகைப்படம் ஆகும்.
அந்த செய்தியை படித்து பார்த்தபோது, ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத
நபர் ஒருவர் இறந்து கிடந்தார் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
குழந்தைகள் அழுவதைப் பார்த்த அந்த நிர்வாகிகள், இறந்தது அவர்களது தந்தைதான்
என்பதை உறுதி செய்தனர். திக்கற்று நின்ற அந்த குழந்தைகளுக்கு தங்கவும்,
படிப்பதற்கும் வசதிகள் செய்து கொடுத்தனர்.
இதற்கிடையே கணவரையும், குழந்தைகளையும் காப்பாற்ற வெளிநாடு சென்ற செல்வராணி,
அங்கிருந்தபடி சேவலூர் முகாமில் உள்ள கணவர்-குழந்தைகளுக்கு பணம்
அனுப்பினார். ஆனால், அங்கு யாரும் இல்லாததால் செல்வராணி அனுப்பிய பணம்
அவரிடமே திரும்பி சென்றுவிட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர், கணவரையும், குழந்தையையும் பார்ப்பதற்காக
எப்படியாவது இந்தியா வந்துவிட வேண்டும் என்று துடித்தார். ஆனால், இவரின்
பாசப்போராட்டம் வெற்றியடையவில்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் இவரால்
அரேபியாவில் இருந்து வெளியேற முடியவில்லை.
அதன்பின்னர், பல போராட்டங்களை தாண்டி 6 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா
திரும்ப செல்வராணி விசா கேட்டார். அதற்கு அங்குள்ள அதிகாரிகள், “நீங்கள்
இலங்கையை சேர்ந்தவர். அதனால் இலங்கை செல்லத்தான் விசா வழங்க முடியும்”
என்று தெரிவித்துவிட்டனர்.
தனது குடும்பம் இந்தியாவில் இருக்கிறது என்றும், தற்போது அவர்கள் என்ன
நிலையில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் செல்வராணி அழுது புரண்ட
பின்னும், அவருக்கு இலங்கை செல்ல தான் விசா வழங்கப்பட்டது.
அதனால், வேறு வழியில்லாமல் செல்வராணி, பூர்வீக இடமான இலங்கைக்கே சென்றார்.
ஆனால், அவரது உள்ளமோ இந்தியாவையே வட்டமடித்துக்கொண்டிருந்தது.
செல்வராணி இலங்கை வந்த நேரத்தில், அங்கு உச்சக்கட்டப் போர் நடந்து
கொண்டிருந்தது. செல்வராணியை பார்த்த இலங்கை இராணுவ வீரர்கள், இவர்
விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர் என கருதி பிடித்து சென்று சிறையில்
போட்டனர்.
இதனால், குடும்பத்தினரை பார்த்துவிடலாம் என்ற செல்வராணியின் கனவு களைந்து
போனது. சிறையிலேயே தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார். பின்னர்
சொந்தக்காரர்களின் உதவியால் மீண்டு வந்தார்.
இதற்கிடையே தாய் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தந்தையை இழந்து தவித்த 3 குழந்தைகளும் படித்து பெரியவர்கள் ஆனார்கள்.
அந்த நேரத்தில், குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்
ஏற்பட்டது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் இலங்கை போரால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சென்ற அட்ரா என்ற என்.ஜி.ஓ. அமைப்பு மூலம்,
சமூக சேவகர் இசபெல்லா என்பவர் இந்த 3 குழந்தைகளின் சிறு வயது படத்தையும்
இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்த குழந்தைகளின் சிறு வயது படத்தை பார்த்த பாலசந்திரன் என்பவர், “இந்த
குழந்தைகள் என் நண்பனின் குழந்தைகள்” என்று அடையாளம் காட்டினார்.
இதற்கிடையே சேவலூர் முகாமில் இருந்து இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு
திரும்பி வந்த ஒருவரிடம், தனது கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து
செல்வராணி கேட்டார்.
அப்போதுதான், கணவர் இறந்தது குறித்தும், குழந்தைகள் உயிருடன் வெவ்வேறு
இடங்களில் படித்துக்கொண்டிருப்பது குறித்தும் தெரியவந்தது. கணவர் இறந்த
செய்தி செல்வராணியை வாட்டியபோதும், குழந்தைகள் படித்துக்கொண்டிருப்பது
அவருக்கு ஆறுதலை தந்தது.
அதன்பின்னர், எப்படியாவது குழந்தைகளை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த
செல்வராணிக்கு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த ஜூலை மாதம் இந்தியா வர
விசா கிடைத்தது.
தமிழகம் வந்த செல்வராணி 3 குழந்தைகளையும் தேடி அலைந்து, ஒரு வழியாக அவர்களை
கண்டுபிடித்தும் விட்டார். தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் குழந்தைகளை
பார்த்து அவர் கட்டியணைத்து அழுதார். குழந்தைகளும் தாயை கண்டு பசுவாக
மகிழ்ச்சியில் திளைத்தனர்.
சிறிது நாட்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்த செல்வராணிக்கு அதற்குள்
விசா கெடு முடிந்தது. அதைத்தொடர்ந்து, அவர் குழந்தைகளை பிரிய மனமில்லாமல்
இலங்கை திரும்பி சென்றார்.
இந்த தாய்-குழந்தைகளின் பிரிவையும், சந்திப்பையும் கேள்விப்பட்ட சென்னை
ராயபுரத்தில் உள்ள அரிமா சங்கமும், எம்.சி.சி.எஸ்.எஸ். என்ற அமைப்பும் அந்த
குடும்பத்தை சேர்த்துவைக்க முடிவு செய்தது.
அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாய், 17 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன், பிள்ளைகள் இன்று நிரந்தரமாக சேர்த்து வைக்கப்படுகிறார்கள்.
செல்வராணியின் 3 பிள்ளைகளையும் இந்த அமைப்பினர் சென்னை சர்வதேச விமான
நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை
அமைப்பின் தலைவர் அரிமா சாதிக்பாட்சா செய்துள்ளார்.
குழந்தைகளின் வருகையை எதிர்நோக்கி, இலங்கையில் செல்வராணி வழிமேல்
விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறார். 17 ஆண்டுகள் நடந்து வந்த
பாசப்போராட்டம் இதனால் முடிவுக்கு வருகிறது. ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக