வியாழன், 7 நவம்பர், 2013

மாயாவதியின் தம்பி மிகவும் கஷ்டப்பட்டு சேமித்த 400 கோடியை வருமான வரி துறையினர் திருப்பி கொடுத்தனர்,


புதுடெல்லி: உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதியின் சகோதரரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 400 கோடியை வருமானவரித்துறையினர் திருப்பி கொடுத்துள்ளனர். இந்தப் பணம் தொடர்பாக மாயாவதி சகோதரர் அளித்த விளக்கத்தை, வருமானவரித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த ஆண்டு சி.பி.ஐ வாபஸ் பெற்றது. மத்தியில் உள்ள ஐ.மு.கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் ஐ.மு.கூட்டணியிலிருந்து விலகியதை தொடர்ந்து பகுஜன் கட்சியின் ஆதரவு அதிக முக்கியத்துவம் பெற்றது. இதற்கு பிரதிபலனாக சொத்து குவிப்பு வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக பா.ஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் உ.பி.யில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். குசாம்பி ஓட்டலில் நடைபெற்ற சோதனையில் ரூ.400 கோடி பெறுமானமுள்ள வங்கி டெபாசிட்கள் மாநில அரசின் நகர வளர்ச்சி கழகத்திடம் அடமானமாக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரூ. 400 கோடி டெபாசிட் உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாருக்கு சொந்தமானது என்ற அதிர்ச்சி தகவலை வருமானவரித்துறை கண்டுபிடித்தது. இதை தொடர்ந்து ரூ.400 கோடிக்கான டெபாசிட்டை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனந்த் குமாருக்கு  நொய்டா மற்றும் டெல்லியில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. ரூ.400 கோடியை அவரது நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் வேறொரு நிறுவனத்துக்கு அடமானம் வைக்க கொடுத்தது ஏன் என்பது குறித்து வருமானவரித்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.

பணத்துக்கான கணக்கு குறித்து ஆனந்த்குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரூ.400 கோடிக்கான வருமான வரி செலுத்தியதற்கான ஆதாரங்களையும், பணத்துக்கான கணக்கினையும் ஆனந்த்குமார் ஆடிட்டர் மூலமாக சமர்ப்பித்தார். இவை அனைத்தும் முறையாக இருந்தன. இதையடுத்து ரூ.400  கோடி நேற்று ஆனந்த் குமாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மாயாவதிக்கு ரூ.400 கோடி விவகாரம் புதிய தலைவலியாக இருந்தது. தற்போது இந்த பிரச்னையிலிருந்தும் மாயாவதி விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. dinakaran,com

கருத்துகள் இல்லை: