செவ்வாய், 5 நவம்பர், 2013

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுகிறது. இலங்கை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.
விஷ்ணுபுரம் விருது தகுதியான கவனம்பெறாத மூத்த தமிழ்படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்காக அடுத்த தலைமுறை வாசகர்களின் கூட்டமைப்பால் வழங்கப்படுவதாகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை அளிக்கிறது.
இதுவரை ஆ.மாதவன் [2010] பூமணி [2011] தேவதேவன் [2012] ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது
தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.

தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்
இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ உழைக்கப் பிறந் தவர்கள்’ என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.
தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல்சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு .இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப்பதிப்பாக வெளியிடவிருக்கிறது.
தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்
1 காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)
*
பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும்.
இம்முறை விருதுத்தொகை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. ரூ ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும்.
இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார்.
மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார்.
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ,
இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் பேசுவார்கள்
வழக்கம்போல இது ஒரு இரண்டுநாள் இலக்கியக் கொண்டாட்டம். சனியன்றே நண்பர்கள் கூடுவார்கள். நாஞ்சில்நாடன், தேவதேவன், யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களுடன் இளம் படைப்பாளிகளும் இருப்பார்கள். அவர்களுடனான சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து இரவெல்லாம் நடக்கும்.
அனைவரையும் வரவேற்கிறோம்  jeyamohan.in
தொடபுக்கு vijayaragavan.victory@gmail.

கருத்துகள் இல்லை: