திங்கள், 4 நவம்பர், 2013

வீரமணி : மோடி மஸ்தான்கள் பின் சென்றால் இந்தியா கைபர் ஸ்தான் ஆகிவிடும் !

ஆரிய ஆதிக்கத்தின் சனாதனத்தை வீழ்த்திட இந்தியா கைபர்ஸ்தான் ஆகாமல் தடுத்து நிறுத்தப்பட திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு
 நவம்பர் 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள திராவிடர் எழுச்சி மாநாட்டின் அவசியத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருச்சியில் நடைபெறவிருக்கும் திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கு (நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை) இன்னும் 5 நாள்கள்தான் உள்ளன.
மோடி மஸ்தானின் அரசியல் மாநாடல்ல!
திருச்சி தோழர்கள் கடுமையாக உழைக்கின்றனர்; காரணம் இம்மாநாடு, மற்ற மோடி மஸ்தான் வித்தைக்கான அரசியல் மாநாடல்ல.
கோடி கோடியாக செலவழித்து, தேடித் தேடிப் பிடித்து உயர் ஜாதி ஊடகங்களின் ஒத்துழைப்புடன் அவர் களை ஊதி ஊதி விளம்பரம் தந்து, மீண்டும் ஒரு மனுதர்ம ராஜ்யத்தை நாட்டில் உருவாக்கக் கால்கோள் விழாவுக்கான கடப்பாறை வீர தீர சூரர்கள் ஏற்பாடு செய்தது போன்ற மாநாடு அல்ல.
மாறாக, எளிய முறையில், சிக்க னத்தோடு சீமான்களும், பூமான் களும், பன்னாட்டுத் தொழில் அதிபர் களின் பண மழை கொட்டி ஏற்பாடு செய்யப்படும் மாநாடு அல்ல.
மாநாட்டின் நோக்கம்
காலங் காலமாய் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஓரினம் தனது உரிமைக் குரலை உயர்த்தி, அறிவு ஆசான் தந்தை பெரியார்தம் அரிய தொண்டால், திராவிடர் இயக்க தலைவர்களான டாக்டர் சி. நடசனார், சர். பிட்டி தியாக ராயர், டாக்டர் டி.எம். நாயர், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், அறிஞர் அண்ணா போன்ற மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் என்றும் நிறைந்துள்ளவர்களின் அரிய வழிகாட்டுதல்களால் உருவான புத்தாக்கம் பொலிவுடன் உலா வருவதைக் கண்டு, அதை நலிவுறச் செய்து, காணாமற் போகச் செய்யவே நச்சு ஆறான நயவஞ்சக ஆரியம் காவி உருவத்தில், மக்களின் அதிருப்தியை மூலதனமாக்கி, மீண்டும் வர்ண தர்மத்தினைக் கோலோச்ச திட்டமிடுவதை மக்களுக்கு எடுத்துக் கூறி, எச்சரிக்கை மணி ஒலிக்கும் ஏற்றமிகு மாநாடுதான் திராவிடர் எழுச்சி மாநாடு! தலைமுறைகளைக் காக்கும் மாநாடு!!
ஆரிய சனாதனத்தைக் கொண்டு வர சூழ்ச்சி!
மதச் சார்பின்மை, சமதர்மம், ஜனநாயகம் என்பதனைப் பெயர்த்தெறிந்துவிட்டு, அந்த இடத் தில் ஆரிய சனாதனத்தைக் கொண்டு வர கடும் முயற்சி நடந்து வருகிறது ஆரியம்! ஹிந்துத்துவ ராஜ்யம், குலதர்மம் என்ற மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டும் ராஜ்யம், ஜனநாயகத் திற்குப் பதில் ஹிட்லரின் பாசிசத்திற்கு பராக் பராக் கூறி பட்டாபிஷேகம் நடத்த முயலும் ராஜ்யம் - ஆகியவை களைக் கொணர, ஏமாந்த மக்களைப் பயன்படுத்திடும் ஜாதிவெறி, மதவெறிச் சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகப் போகிறீர்களா என்று மக்களை எழுப்பிடும் எழுச்சி மாநாடு!
திராவிடர்களே, நீங்கள் கடந்த பல நூற்றாண்டுகளில் இழந்தவைகளை கடந்த ஒரு நூற்றாண்டில் பெரியார் சகாப்தத்தில் பெற்றுத் தந்த உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளாமல், இழந்து விட்டு, மீண்டும் நிரந்தரமான தஸ்யூக்களாக மிலேச்சர் களாக, சூத்திரர் - சற்சூத்திரர்களாக, பஞ்சமர்களா கவே ஆக, விழி திறந்தே  குழியில் விழப் போகிறீர்களா?
கைபர்ஸ்தான் - எச்சரிக்கை!
இளைஞர்களே உங்களுக்கு வரலாறு தெரியாது என்ற மமதையில் 18 வயது வாக்குரிமையாளர்களான புதிய தலை முறையினரை, காவி மதப் பரப்புதலுக்குப் பலியாக்கிடத் திட்டம்! தற்போது நிலவும் அதிருப்தியையே நம்பிக்கை முதலாகக் கொண்டு, மோ(ச)டி வித்தைகளை காட்டி ஜெயித்து விட்டு, பிறகு நாட்டையே காவிக் கோலமாக்கி கைபர்ஸ்தான் ஆக்கிட திட்டுமிட்டு சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் தடுத்திட - விழிப்புணர்வு என்னும் சங்கொ லிப்பதற்கே கூட்டப்படும் முற்போக்காளர்கள் கூட்டும் முழுமையான முயற்சிதான் திருச்சியில் ஏற்பாடாகியுள்ள திராவிடர் எழுச்சி மாநாடு!
இந்தியாவா - ஹிந்துயாவா?
அனைத்து முற்போக்கு மனிதநேய சிந்தனையாளர் களும், இந்தியாவைக் காப்போம்; இந்தியா காணாமற் போய், அவ்விடத்தில் ஹிந்துயா வந்து அமர்ந்து விட்டால், ஒவ்வொரு பெரும்பான்மை மக்களின் நெற்றி யிலும் சூத்திரப் பட்டத்தை பச்சை குத்திக் கொண்டு, குற்றேவல் செய்யும் அடிமைகளின் ராஜ்யத்தில் வாழுபவர் களாலும், சிறுபான்மையினர் அவர்களைவிட மிகவும் கேவலமாக, மதிக்கப்படாமல் மிதிக்கப்படும் நிலைக்கும் ஆளாகும் அபாயம் வரவிருக்கிறது!
இன்றைய தற்காலிக அதிருப்திகள் -குறைகளை எடுத்துக்காட்டி, நம்மை நிரந்தர அடிமைகளாக, தாசர்களாக, பெண்களை தீவிர அடிமைகளாக ஆக்கும் வர்ணாசிரம வன்கொடுமை ஆட்சியை அமைக்க சூழ்ச்சித் திட்டங்கள் உருவாவதைச் சுட்டிக் காட்டி, எச்சரிக்கை செய்தெழுப்பும் குரலாக (Wake up Call) திருச்சி திராவிடர் எழுச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாரீர் திராவிடர்களே!
எனவே, குடும்பம் குடும்பமாக வாருங்கள்! கூடுவோம், நாடுவோம், நல்லதோர் எதிர் காலத்தை, உருவாக்குவோம்! எழுச்சியா? வீழ்ச்சியா எதை நோக்கி நீங்கள்? - இதைத் தான் திருச்சி மாநாடு திக்கெட்டும் பறைசாற்ற விருக்கிறது.
வாரீர்! வாரீர்!! திராவிடர்களே, இது மலைபோல் காட்டப் பெறாத; மாறாக, சிற்றுளி போல் சிறப்புடன் ஒளிரும் மாநாடு -  எனவே திரண்டு வாரீர்!
கி.வீரமணி

கருத்துகள் இல்லை: