திங்கள், 1 ஏப்ரல், 2013

பாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க வாரிசுகளால் செய்யப்பட்டால் தண்டனையில்லை

பிட்டி மொகந்திபாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க பொறுக்கிகளாலோ அவர்களின் வாரிசுகளாலோ செய்யப்பட்டால் அதற்கு தண்டனையில்லை என்ற மசோதாவை நாடாளுமன்றம் அடுத்து முன்மொழியுமா?
    2005-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு பெண்ணை ஒரிசாவின் போலீஸ் தலைமை ஆணையர் வித்யபூஷண் மொகந்தியின் மகனான பிட்டி மொஹந்தி ராஜஸ்தானில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளான். 2006-ல் கைது செய்யப்பட்டு விரைவு நீதிமன்றத்தில் அவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

    படம் உதவி : தெகல்கா
    சிறையில் 7 மாதங்கள் இருந்தவன், தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லையென்று அவர் சாகும் முன் அவரைச் சென்று பார்த்து வர அனுமதி வேண்டினான். போலீஸ்கார தந்தையின் உத்தரவாதத்தின் கீழ் 15 நாள் பரோலில் வெளியில் வந்தவன், மீண்டும் சிறைக்கு திரும்பவேயில்லை. ராஜஸ்தான் மாநிலத்தின் போலீஸார் நடத்திய தேடல் வேட்டைகள் பொய்த்துப் போய், ஒரிசா மாநில அரசிடம் மேல் முறையீடு செய்தும் பலனில்லை. பிற மாநில காவல் துறைகளுக்கு அவனைப் பற்றிய தகவல்களை அனுப்பி கைது செய்யும்படி அறிவித்தது.
    குற்றவாளியை தப்ப விட்டதற்காக வித்யபூஷண் மொகந்தி, 2008-இல் தற்காலிக பணிநிக்கம் செய்யப்பட்டாலும் 2009-இல் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு, ஓய்வூதிய பலன்கள் அனைத்துடனும் 2012 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

    பரோலில் தலைமறைவான பிட்டி மொஹந்தி, ஆந்திரா மாநிலத்தில் உள்ள புட்டபர்த்திக்கு சென்று, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போலி ஆவணங்களின் உதவியுடன், தனக்காக உருவாக்கப்பட்ட புதிய அடையாளமான ‘ராகவ் ராஜனாக’ மாறியுள்ளான். அங்கு, டாக்டர். கிருஸ்த்தய்யா என்பவரின் வீட்டில் தங்கியிருக்கிறான். இப்போது நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், டாக்டர். கிருஸ்த்தய்யா, ‘ராகவ் ராஜன் என்கிற இவனை ராமாராவ் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் தனக்கு  அறிமுகப்படுத்தினார்’ என்று தெரிவித்துள்ளார். ‘ஸ்ரீ சத்ய சாய் பாபா அமைப்பைச் சேர்ந்த செல்வாக்கும், பெயரும் பெற்ற நபர் ஒருவர்தான் பிட்டி என்கின்ற இந்த ராகவ் ராஜனை தனக்கு அறிமுகம் செய்தார்’ என்று ராமாராவ் தெரிவித்துள்ளார்.
    புட்டபர்த்தியில் இருந்தவாறே உலகம் முழுக்க பணக்கார பக்த கேடிகளுக்கு அருள் புரியும் கேடி சாய் பாபாவின் தயவிருக்குமெனில், ஒன்றல்ல ஓராயிரம் அவதாரங்களை அவரின் அரசியல் மற்றும் அதிகார பலத்தின மூலம் எடுக்க முடியும்.
    பல முக்கியமான ஆளும் வர்க்க புள்ளிகளின் துணையுடன் புட்டபர்த்தி வட்டாட்சி வருவாய்த்துறை அலுவலகம் வழங்கியிருக்கும் வாக்காளர் அட்டை, ஜோடிக்கப்பட்ட பெற்றோர்களுடளான ரேஷன் கார்ட், உயர்நிலைப் பள்ளி சான்றிதழ்கள் என்ற அனைத்து ஆவணங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ராகவ் ராஜன் என்கிற பிட்டி, புட்டபர்த்தியில் தினா ஜனோதர்னா பள்ளியில் வேலை பார்த்துள்ளான். பின்பு ஸ்ரீ வித்யா காலேஜில், 11 மாதங்கள் வேலையிலிருந்து விட்டு 2009 ஆம் ஆண்டு மேல் படிப்புக்காக கேரளா வந்திருக்கிறான்.
    ஆந்திராவாசி என்ற அடையாளத்துடன், கண்ணனூரிலுள்ள சின்மயா மிஷனில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளான். சுவாமி சின்மயானந்தா, தன் மானசீக குரு என்று கூறி, ஆன்மீக சீலராக காட்டியிருக்கிறான். 2011 ஆம் ஆண்டு படிப்பு முடிந்ததும், அமிர்தாநந்தா மயி மடத்தினால் நடத்தப்படும் அமிர்தா பொறியியல் கல்லூரியின் இணையவழிக் கல்வித்துறையில் அக்டோபர் 18 2011 – ஜூன் 13 2012 வரை  வேலை பார்த்துள்ளான்.
    புட்டபர்த்தி சாய்பாபாவிலிருந்து வளர்ச்சியடைந்து சின்மயா பக்தனாகி இறுதியில் அமிர்தானந்த மயியின் அருள் பெற்றிருக்கிறான்.
    பின்னர் வங்கி வேலைக்கான போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, கேரள மாநிலத்தின், கண்ணனூர் அருகே இருக்கும் பழயன்காடி பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் அலுவகத்தில் பயிற்சி அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறான்.
    இந்த நிலையில் தன்னை காதலிப்பதாக கூறிய ஒரு சக பெண் ஊழியரிடம், உணர்ச்சி வேகத்தில், தன் கடந்த கால வாழ்க்கையை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளான். சொன்ன தகவல்களை நம்பாத அப்பெண், இணையத்தில் தேடிப்பார்த்தது, உண்மையை புரிந்து கொண்டபின், இரட்டை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு பாலியல் குற்றவாளியை அம்பலப்படுத்த முடிவு செய்திருக்கிறார்.
    கடந்த மார்ச் 6 ஆம் தேதி, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் – மனித வளத்துறை பொது மேலாளருக்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதப்பட்ட கையெழுத்திடாத இரண்டு கடிதங்கள் அனுப்பட்டுள்ளன. இரண்டிலும் பழைய புகைப்படம் முதற்க்கொண்டு ராகவ் ராஜன் பற்றின உண்மை தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வங்கி நிர்வாக மேலாளருக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளது.
    வங்கியின் மனித வளத்துறையின் மூலம் கேரளா போலீஸ், கடிதங்களில் உள்ள விஷயங்களை விசாரிக்க, கண்ணனூர் காவல்துறை கண்காணிப்பாளர் குழு மார்ச் 7 ஆம் தேதி முடுக்கப்பட்டது. தன்னைப் பற்றிய செய்திகள் வங்கியில் பரவுவதை உணர்ந்த பிட்டி வாடகை வீட்டிலிருந்து, லாட்ஜில் அடைக்கலம் புகுந்துள்ளான். இருப்பினும், 24 மணி நேரத்திற்குள் ராகவ் ராஜன் என்ற பிட்டி கேரளா போலீஸ் பிடியில் சிக்கியுள்ளான்.
    தான் பிட்டி மொகந்தியில்லை என்பதை மறுத்த அவன், ராகவ் ராஜன் என்ற்ற அடையாளத்தை உறுதி செய்ய பி.டெக்., எம்.பி.ஏ., உயர்நிலை படிப்பு சான்றிதழ்கள், ரேஷன் கார்ட், வாக்காளர் அட்டை, கோழிக்கோடு மண்டல அலுவலகம் வழங்கிய பாஸ்போர்ட்டைக் கூட காண்பித்து காவல் துறையினரை வாயடைக்கச் செய்துள்ளான். அவனது அடையாளத்தை மரபணு சோதனை மூலம் நிருபிக்கலாம் என்று ராஜஸ்தான் மாநில போலீஸ் முயற்சி செய்கிறது. வித்யபூஷண் மொகந்தியும் அவரின் மனைவியும் தலைமறைவாகி விட்டனர்.
    பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கு ஏற்ப போலீஸ்காரனுக்கு தெரியாத குற்றவியல் நடவடிக்கையா என்பது இங்கு நிரூபணமாகியிருக்கிறது. ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளும், வாரிசுகளும், கொலையே செய்தாலும், அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இச்சம்பவம்.
    இரண்டு மொகந்திகளும் சேர்ந்து உலகை முட்டாளாக்கி விட்டனர். இருவருக்கும் தண்டனை கிடைக்குமா? அல்லது, பாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க பொறுக்கிகளாலோ அவர்களின் வாரிசுகளாலோ செய்யப்பட்டால் அதற்கு தண்டனையில்லை என்ற மசோதாவை நாடாளுமன்றம் அடுத்து முன்மொழியுமா?vinavu.com

    கருத்துகள் இல்லை: