புதன், 3 ஏப்ரல், 2013

விஜயகாந்த் "தேர்தல் புறக்கணிப்பு' அறிவிப்பில் "பல்டி'

சென்னையில் நேற்று முன்தினம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த, தே.மு.தி.க., கண்டன பொதுக் கூட்டம், முறையான திட்டமிடல் இன்றி, சொதப்பலாக முடிந்தது. இதனால், கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஆறு பேர், சட்டசபையில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு மாவட்டங்களில், கடந்த, 30ம் தேதி, கட்சி சார்பில், பொதுக்கூட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக, சென்னை எம்.ஜி.ஆர்., நகரில், நேற்று முன்தினம், கண்டன பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்தை வரவேற்க, அவருடைய விருகம்பாக்கம் வீட்டு வாசலில் இருந்து, எம்.ஜி.ஆர்., நகர் மேடை வரை, இருபுறமும், கடைகள் அனைத்தையும் மறைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், மின்விளக்கு மற்றும் கட்சி பேனர்கள் வரிசையாக, ஏராளமான அளவில், வைக்கப்பட்டிருந்தன; இரவு, 7:00 மணிக்கு கூட்டம் துவங்கியது.கூட்டணிக்கான பேச்சு தொடங்குவதால் தன்மானம் ஒன்றும் போய் விட போவதில்லை. அரசியல் நடத்த வேண்டுமென்றால் தைரியமாக இறங்கி தான் ஆக வேண்டும். அதிமுக மந்திரிகளை போல மற்ற கட்சியினர் வீட்டுக்கு வந்து கெஞ்சி கூத்தாடுவார்கள் என்று எதிர் பார்த்தால் உள்ளதும் போச்சுடா,,,,,தான்.


இரவு, 8:00 மணிக்கு...: விஜயகாந்த் வருவதற்கு முன், மாவட்ட நிர்வாகிகள் பேசினர். நேரம் கடந்துக் கொண்டே இருந்ததால், எம்.எல்.ஏ.,க்கள் பேச வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.,க்கள், பார்த்திபன், வெங்கடேசன் பேசிக் கொண்டிருந்த போது, பண்ருட்டி ராமச்சந்திரன் வந்தார். அவரை தொடர்ந்து, 8:10 மணிக்கு, விஜயகாந்த் மேடைக்கு வந்தார். "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அமர்வதற்காக, முன் வரிசையில், நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், சந்திரகுமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, முருகேசன் ஆகியோர் மட்டுமே, அங்கு அமர்ந்திருந்தனர். விஜயகாந்த் வந்த, சில நிமிடங்களுக்குப் பிறகே, செந்தில்குமார், அருட்செல்வன் ஆகியோர் வந்தனர்.

வேட்டியை இழுத்து...: நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது என்பதற்தற்காக, பேச்சை நிறுத்துமாறு, வெங்கடேசனிடம், விஜயகாந்த் சைகை காட்டினார். அவர் கண்டு கொள்ளாததால், மாவட்ட செயலர்கள் பின்பக்கமாக, அவரது வேட்டியை பிடித்து இழுத்து, பேச்சை முடித்து வைத்தனர். அவரைத் தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரன், பத்து நிமிடங்கள் பேசினார். 8:20 மணிக்கு, விஜயகாந்த் பேசத் துவங்கினார். எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து, விஜயகாந்த் அறிவிப்பார் என்ற ஆர்வத்துடன், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால், அதைப்பற்றி விஜயகாந்த் விரிவாக பேசவில்லை. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களை பேசவிடாமல் தடுப்பதற்காகவே, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர் என்று மட்டும் கூறினார். மின்வெட்டு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம், மதுபான கடைகள் விவகாரத்தை திரும்ப, திரும்ப பேசிக் கொண்டிருந்தார்.

சப்ஜெக்ட்டை மறந்தார்: திடீரென, இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுத்த விஜயகாந்த், "லோக்சபா தேர்தலை, தே.மு.தி.க., புறக்கணிக்கும்' என, தடாலடியாக அறிவித்தார். உடனே, அதை மறந்துவிட்டு, "லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பாடம் கற்பிப்பேன்; பிரச்சாரம் செய்ய, மக்களை சந்திக்க வரும்போது, இன்னும் பல விஷயங்களை பேசுவேன்' என்றார். இதனால், தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து பேசியவர், "வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு எதுவும் செய்யவில்லை. ஆய்வு என்ற பெயரில், அமைச்சர்கள், டூர் சென்றனர்' என்றார். அப்போது, மேடையின் வலது புறம், போதையில் இருந்த தொண்டர் ஒருவர், "நான், தஞ்சாவூரில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு, அரசு நிவாரணம் வழங்கவில்லை' என, குரல் எழுப்பினார். உடனே விஜயகாந்த், "அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வாங்குங்கள். அதைக் காட்டினால், உங்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்' என்றார். அதற்கு அந்த தொண்டர், எதையோ சொல்ல வர, அருகில் இருந்த மற்ற தொண்டர்கள், அவரது வாயை மூடினர். தொடர்ந்து சம்மந்தமே இல்லாமல், சினிமா விஷயங்கள் குறித்தும், விஜயகாந்த் பேசினார்.

வடிவேலு நடித்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த, "காதில் ரத்தம் வரும்' நகைச்சுவை காட்சியை விஜயகாந்த் நினைவு கூர்ந்தார். "சட்டசபைக்கு சென்றால், எனக்கும் இந்த நிலை ஏற்படும் என்பதால், அங்கு செல்லவில்லை' என்றார். "தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் ஜெயலலிதா எழுதி வைத்து படிப்பார். படித்த பிறகு, அந்த காகிதத்தை, ஒன்றன் பின் ஒன்றாக, கீழே போட்டபடி இருப்பார். ஆனால், நான் மனதிற்கு பட்டதை மட்டுமே பேசுவேன்' எனக் கூறிய விஜயகாந்த், சொன்னதையே சொல்லி, தொண்டர்களை சோர்வடைய வைத்தார். விஜயகாந்த் பேச்சைக் கேட்டு, முன்வரிசையில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் நெளிந்தனர். பின் வரிசையில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள், ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்தபடி இருந்தனர். இரவு, 9:00 மணிக்கு விஜயகாந்த், "பேச்சை முடித்துக் கொள்ளட்டுமா?' என, மேடையில் இருந்தவர்களிடம் கேட்டார். உடனே, எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, அவரிடம் சென்று, தனியார், "டிவி' சேனல்களில், "தே.மு.தி.க., கட்சி, லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு' என, "பிளாஷ்' செய்தி போடுகின்றனர்' என, கிசுகிசுத்தார். சுதாரித்த விஜயகாந்த், "தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், லோக்சபா தேர்தலை புறக்கணித்தால், தே.மு.தி.க.,வும் புறக்கணிக்கும்' எனக் கூறி, குழப்பத்துடன் பேச்சை முடித்தார். முறையான திட்டமிடல் இல்லாததால், ஒரு மணிநேரம் கூடுதலாக பேச, போலீஸ் அனுமதி இருந்தும் "சஸ்பெண்ட்' எம்.எல்.ஏ.,க்களுக்கு கூட, பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த தொண்டர்கள், ஏமாற்றத்துடன் புறப்பட்டனர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: