வியாழன், 4 ஏப்ரல், 2013

சாதி: இந்த வார்த்தைக்கு அயோத்திதாசர் தரும் விளக்கம் வித்தியாசமானது

அயோத்திதாசர்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மிக முக்கியமான சிந்தனையாளர் அயோத்திதாசர். பாரம்பரியமாக சித்த மருத்துவர்; திண்ணைப் பள்ளியில் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்ற தமிழ்ப் பண்டிதர்; ‘தமிழன்’ என்ற வாரப்பத்திரிகையை 1907 முதல் 1914 வரை தொடர்ந்து நடத்திய பத்திரிகையாளர்; சமத்துவத்தைப் பாதுகாக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பௌத்தமதத்தை பரப்பிய சமயவாதி; திருக்குறளுக்கு உரை, ஔவையின் மூன்று நூற்களுக்கு உரை, இந்திர தேச சரித்திரம் என்ற வரலாற்று நூல், ஆதி வேதம் என்ற புத்தரின் வாழ்க்கை வரலாறு என்று ஏராளமான நூற்களை எழுதிய ஆய்வாளர்; சமதர்மம், பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, திராவிடம் போன்ற இருபதாம் நூற்றாண்டு தமிழக அரசியலை வடிவமைத்த கருத்தாக்கங்களை உருவாக்கித்தந்த சிந்தனையாளர்; ஐரோப்பிய அறிஞர்கள் தமிழின் இலக்கணத்தை கற்றுக் கொள்ள முடியுமே தவிர அதன் ‘இலட்சணத்தை’ உணர முடியாது என்று எழுதிய காலனிய எதிர்ப்பாளர்… அயோத்திதாசரை சுருக்கமாக இப்படி அறிமுகம் செய்யலாம்.

ஆனால், அவரை அறிமுகம் செய்ய இன்னுமொரு எளிதான வழி இருக்கிறது. அப்படி சொன்னால் உங்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள முடியுமாயிருக்கும். இந்தியப் பாரம்பரியத்தில் ஒரு நபரை இப்படித்தான் அறிமுகம் செய்வார்கள்.
‘அயோத்திதாசர் ஒரு தீண்டத்தகாதவர்!’

சொற்களுக்கு புதிய விளக்கங்களைக் கொடுப்பதில் அயோத்திதாசர் கில்லாடி. அது நமக்குத் தான் ‘புதிய விளக்கங்கள்’, அவரைப் பொறுத்த வரை அவை தான் மரபான விளக்கங்கள் மற்றும் சரியான விளக்கங்கள். அவருடைய கை பட்ட வார்த்தைகள் மாய மந்திரம் போல் உருமாறுவதை எல்லாராலும் ரசிக்க முடியும்; அதன் பின் வெளிப்படும் அரசியலை உள்வாங்கிக் கொள்ள முடியும்; அதே போல் தொடர்ந்து அவ்வார்த்தைகளை பயன் படுத்த முடியும். இந்த ரசவாதம் தான் அயோத்திதாசரின் மிகப் பெரிய பலம்.
அதே போல் புதிய கருத்தாக்கங்களை உருவாக்கியதிலும் அவர் தமிழின் மிக முக்கியமான முன்னோடி. தமிழ் சிந்தனை மரபிலிருந்து உருவான கருத்தாக்கங்களைக் கொண்டு ethnic categories அவர் சமூகப் பிரச்சினைகளை அணுகுவது நமக்கு புதியது; தேவையானது.

சாதி: இந்த வார்த்தைக்கு அயோத்திதாசர் தரும் விளக்கம் வித்தியாசமானது. வேறு யாரையும் போல ‘சாதி’ என்ற விஷயமே பிராமணர்கள் உருவாக்கியது தான் என்று அவர் பேசவில்லை. சாதி, இங்கே ஏற்கனவே இருந்த ஒரு சொல் தான். பிராமணர்கள் அதன் அர்த்தத்தை மட்டுமே சிதைத்து திரித்தார்கள்; மற்றபடி அந்த சொல் நமது மரபில் உருவான சொல் தான் என்பது தான் அவருடைய வாதம். அதன் படி, சாதி என்றால் ஒருவன் சாதிப்பது என்று பொருள். சாதிப்பது என்றதும் உடனே தற்கால யோசனையில் தலைகீழாக நடப்பது, மூக்கால் சாப்பிடுவது போன்ற கின்னஸ் சாதனைகளை கற்பனை செய்ய வேண்டாம். எல்லா மனிதர்களும் தத்தமது சிந்தனையை ஒரு ஒரு மொழியால் சாதிக்கிறார்கள் என்றார் அயோத்திதாசர். மொழி தான் உங்களது சிந்தனையையும், செயலையும் வடிவமைக்கிறது என்பது அவரது தீவிர நம்பிக்கை. ஆச்சரியமாக சசூர், சாம்ஸ்கி போன்ற நவீன மொழியியலாளர்களும் இதையே தான் சொல்கிறார்கள். அதன் மூலமே நாமெல்லாம் வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கிறோம். நான் தமிழில் சாதிக்கிறேன்; இன்னொருவர் தெலுங்கில் சாதிக்கலாம்; வேறொருவர் மலையாளத்தில், இன்னும் ஹிந்தியில், மாலதியில், பெங்காலியில், ஒரியாவில் என்று அவரவர் அவரவர் மொழியில் சாதிக்கலாம். இப்படி யார் எந்த மொழியால் சாதிக்கிறார்களோ அதுவே அவர்களது சாதி. எனக்கு தமிழ், இன்னொருவருக்கு தெலுங்கு, வேறொருவருக்கு மலையாளம்…இப்படி, இப்படியே! இதைத்தான் பிராமணர்கள் விளங்கிக் கொள்ளாமல், சாதி அடையாளத்தை மாற்ற முடியாது, அது முன் ஜென்ம பலன் என்றெல்லாம் பிதற்றி பயமுறுத்தி வைத்தார்கள்.
மொழியை ஒருவனின் அடையாளமாகவும், அதுவே அவனது சமூகப் பாத்திரத்தைத் தீர்மானிக்கிறது என்றும் சொல்லும் இந்த விளக்கம் பல்வேறு தளங்களில் புதிய தரிசனங்களையும் வெளிச்சங்களையும் தரவல்லது…
அயோத்திதாசரின் விமர்சனங்களில் மிக முக்கியமான ஒன்று, பிராமணர்களின் மீது அவர் முன் வைக்கக்கூடிய விமர்சனம்.
பிராமண எதிர்ப்பு என்று நாம் இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோமே அதற்கும் அயோத்திதாசரின் விமர்சனத்திற்கும் பாரதூரமான இடைவெளிகள் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஏறக்குறைய தங்களது அரசியல் திருவிளையாடல்களை அரங்கேற்றத் தொடங்கி விட்ட பிராமணர்களை மிகவும் துல்லியமாக எடை போட்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
பிராமணர்களைப் பற்றிய விவாதத்தில் அயோத்திதாசர் கருத்தாக்க இரட்டை எதிர்மறையொன்றை அறிமுகம் செய்கிறார். அது, யதார்த்த பிராமணர் – வேஷ பிராமணர்.
இவை, ஏதோ கதாபாத்திரங்களின் பெயர்கள் போல் தோன்றினாலும் ஆனால் உண்மையில் எதிர் எதிரான கருத்தாக்கங்கள். இந்திய வரலாற்றில்…மன்னிக்க வேண்டும், அயோத்திதாசரின் கருத்துப்படி ‘இந்தியா’ என்று சொல்லக்கூடாது, ‘இந்திரம்’ என்று சொல்ல வேண்டும் – இந்திர தேசம்!
யதார்த்த – வேஷ பிராமணர் என்பதைப் பார்ப்பதற்கு முன் ‘இந்திர தேசம்’ பற்றி சொல்லி விடுவது தான் நியாயம்.
அயோத்திதாசர் ‘இந்திர தேச சரித்திரம்’ என்றொரு நூலை எழுதியுள்ளார். அது தொடர் கட்டுரையாக ‘தமிழன்’ வாரப்பத்திரிகையில் வந்தது. அதன் பின் நூல் வடிவம் கொண்டது. அதன் தலைப்பு சொல்வது போல் அது ஒரு வரலாற்று நூல். தேசத்தின் வரலாற்றை பேசும் நூல். இந்திர தேசத்தின் வரலாற்றை விளக்கும் நூல். இன்றைக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கும் அடித்தள மக்கள் வரலாறு என்ற விஷயத்தை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவர் செய்து காட்டிய நூல்.
அந்த நூலில் தான் அவர் முதன் முறையாக இந்த தேசத்தின் பெயர் இந்தியா அல்ல இந்திரம் என்று தெரிவிக்கிறார். அதற்கு அவர் சொல்லக்கூடிய விளக்கமும் நோக்கமும் தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது.
கௌதம புத்தர் தான் இந்த நிலப்பரப்பின் மிக முக்கியமான அடையாளமாகக் கருதப்பட்டிருந்தார். கட்டுக்கோப்பான நிறுவன தோற்றத்தோடு இறை நம்பிக்கையும், ஒழுக்க விதிகளும் ஒருங்கிணைக்கப்பட முடியும் என்று காட்டியதோடு அதனைக் அரூபமான ராஜ்ஜியம் போலவே நிர்மாணித்து காட்டிய புத்தரின் புகழ் உலகெங்கும் பரவியது.
ஐம்புலன்களையும் அடக்கிக் காட்டியவர் என்ற பெருமையை எல்லோரும் பேசிக் கொண்டனர். ஐந்து திறன்களையும் அடக்கியாண்டவர். ஐந்திறம் உடையவர் என்று சொல்லலாம். ஐந்திறம் கண்டவர், ஐந்திரம் கண்டவர், ஐந்திரர், இந்திரர்…இந்திரர்… என்று புத்தரைக் குறிப்பிடும்பொழுதெல்லாம் ‘இந்திரர், இந்திரர்’ என்று சொல்லத் தொடங்கினர்.
இதனால் புத்தரின் லட்சம் லட்சம் பெயர்களில் இந்திரன் என்பது ஒன்றானது.
பௌத்தத்தின் பிரதி நிதிகள் உலகெங்கும் போய் ‘மூப்பு, பிணி, சாக்காடு’ என்ற மூன்று துயரங்களையும் வெல்லும் வழிமுறைகளை போதித்த போது பல நாட்டினரும், ‘நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? யார் உங்களுக்கு இதையெல்லாம் கற்றுத்தந்தது?’ என்று கேட்கக் கேட்க பிரதிநிதிகள், இந்திரரைப் பற்றியும், அவர் இந்திரராக மாறியதைப்பற்றியும் பெருமையாக சொன்னார்கள்.
கேட்ட மக்கள் அனைவரும், ‘அந்த இந்திரரின் தேசத்திலிருந்தா வருகிறீர்கள்?’ என்று கேட்கக் கேட்க, இந்த நிலப்பரப்பிற்கு இந்திர தேசம் என்ற பெயர் உண்டானது.
வரலாறு கதைகளாலும் கற்பனைகளாலுமே செய்யப்படுகிறது என்னும் போது, மிகப் பொருத்தமாயிருக்கிற இந்தக் கதையை நம்புவதில் எனக்கு ஆட்சேபணையொன்றும் இருக்கவில்லை. உங்களுக்கு?
அயோத்திதாசரின் பிராமண விமர்சனத்தை அடுத்த பதிவில் எழுதுவேன். அதைத் தவிர்க்க வேண்டிய நிர்பந்தம் எதுவும் எனக்கு இருக்கவில்லை. சொல்லப் போனால் அவருடைய பிராமண விமர்சனமே எனக்கு முதன்மையானதும் கூட.
ayothidhasar.com
Dr. T.DHARMARAJ

கருத்துகள் இல்லை: