ஞாயிறு, 31 மார்ச், 2013

காம்ரேடுகள் இல்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி: தி.மு.க., புது வியூகம்

லோக்சபா தேர்தலுக்கு, "மெகா' கூட்டணி அமைக்கும் வகையில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளை இழுக்க, தி.மு.க., தரப்பு விரும்புகிறது.
நிபந்தனை: ஆனால், தே.மு.தி.க.,வை தவிர மற்ற கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுமானால், கடைசி கட்டத்தில், ஒற்றை இலக்கத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட நிபந்தனைகளுடன், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., புது வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், மத்திய அரசு கவிழும், முன் கூட்டியே தேர்தல் வரும் என்ற யூகங்கள் டில்லி அரசியல் வானில் நிலவுகின்றன. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆதரவில், தற்போது மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், மத்திய அரசு தற்போது முலாயம் சிங் கைப்பிடியில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியை முலாயம் சிங் கடுமையாக விமர்சிப்பதால், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, மத்திய அரசை கவிழ்க்கும் செயலில் முலாயம் சிங் ஈடுபடுவார் என்ற சந்தேகம், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது.
கூட்டணி தீவிரம்: இதனால், மத்திய அரசுக்கு, எந்த நெருக்கடியும் ஏற்படாமல் இருக்க, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகிய இருவரின் ஆதரவை காங்கிரஸ் நாடி வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில், ம.பி., டில்லி, சத்தீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநில சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் முன் கூட்டியே வருமா? என்ற கேள்வியும் உருவாகியிருப்பதால், தமிழக அரசியல் கட்சிகள், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., வெளியேறியதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, டி.ஆர்.பாலு, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மற்றும் தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான், "காங்கிரஸ் கட்சியை கவிழ்க்க மாட்டோம்' என, தி.மு.க., செயற்குழுவில் பொதுச்செயலர் அன்பழகன் பேசினார். கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா போன்ற ஒரு சிலரின் அபிலாஷையின் படி தி.மு.க., மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறி விட்டது. இதனால் என்ன நடந்து விட்டது' என, கேள்வி எழுப்பியுள்ளார். கருணாநிதியின் திடீர் ஆதங்கத்தை பார்க்கும் போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடரும் வாய்ப்பு இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மத்திய அரசின் பல்வேறு கமிட்டிகளில், தி.மு.க.,வினர் உறுப்பினராக இருப்பதால், அவர்கள் யாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவில்லை.


பங்கீடு: இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் பிரச்சனையை மையப்படுத்தி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியது. காங்கிரஸ் வெளியேறினால் தான் தே.மு.தி.க.,வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி பங்கீடு செய்ய முடியும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மற்றும் சிறிய கட்சிகளுடன் ஒருங்கிணைந்து, "மெகா' கூட்டணி அமைக்க முடியும் என, கருணாநிதி தரப்பு விரும்புகிறது. தே.மு.தி.க.,வை தவிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை இழுத்துக் கொள்ளவும், கருணாநிதி தரப்பு திட்டமிட்டுள்ளது. கடைசி நேரத்தில், காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதி பங்கீடு வழங்கி, கொடுக்கிற தொகுதிகளை பெற்றுக் கொள்ள வைக்கும். இதன் எதிரொலியாகத்தான், தி.மு.க., செயற்குழுவில் அன்பழகன் பேசுகையில், "மதவாத சக்திகள் தலை தூக்காமல் இருப்பதற்காக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறோம்' எனக் கூறி, கருணாநிதியின் மனசாட்சியை வெளிபடுத்தினார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: