Viruvirupu
தி.மு.க.
டில்லிக்கு அனுப்பி வைக்கும் அமைச்சர்கள் எல்லோருமே, ‘மெகா’
சாதனையாளர்களாகவே உள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் இருவர் அமைச்சர் பதவிகளை இழந்தனர். இப்போது, தி.மு.க.
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனின் டர்ன்.
தி.மு.க.-வுக்கு அவரால் ஏதோ முடிந்த சேவையாக, மெகா வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் இருந்து சென்ற இந்த இணை அமைச்சர், அதிகப்படியான எண்ணிக்கையில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர்களில், முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மாண்புமிகு இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், 24 முறை தனிப்பட்ட பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். மொத்தம், 253 நாட்களை வெளிநாடுகளில் கழித்துள்ளார். சராசரியாக, நான்கு தினங்களுக்கு ஒரு தினம், ஜெகத்ரட்சகன் இருந்தது, வெளிநாட்டில்தான்!
அவர், பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேடு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கே சென்றுள்ளார்.
இணையமைச்சராக உள்ளபோதே, நான்கு தினங்களுக்கு ஒரு தினம் வெளிநாடுகளில் இருந்தவரை கேபினெட் அமைச்சராக்கி இருந்தால், தீபாவளிக்கு மட்டுமே இந்தியா வந்திருப்பார் என்பதை தி.மு.க. தலைமை புரிந்துகொண்டு, அடுத்த தடவை இவருக்கு கேபினெட் அந்தஸ்து கிடைக்க முயற்சிக்க வேண்டும்.
மத்திய அமைச்சரவையில், தி.மு.க. சார்பில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சரான ஜெகத்ரட்சகன், நிலக்கரி ஒதுக்கீடு ஊழலில் சிக்கியதை அடுத்தே, அவரது பெயர் டில்லி வட்டாரத்தில், பிரபலமானது. இவருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனத்துக்கு, எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டிருப்பது, பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
அதையடுத்து அவரைப் பற்றிய தகவல்களை அனைவரும் கிளறத் துவங்குகின்றனர்.
அந்த வகையில், தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கிடைத்துள்ள பதிலே, நம்ம தி.மு.க. அமைச்சரின் மெகா பயண விபரங்கள். தி.மு.க.-வில் ஜெகத்ரட்சகனுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளவர் நெப்போலியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக