வியாழன், 13 செப்டம்பர், 2012

லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளில் அ.தி.மு.க.!

மற்றைய கட்சிகளை முந்திக் கொண்டு லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளில் அ.தி.மு.க.!

Viruvirupu
மற்றைய தமிழக கட்சிகளை முந்திக்கொண்டு, லோக்சபா தேர்தலுக்கு தம்மை தயாராக்கும் பணியை தொடங்கியுள்ளது அ.தி.மு.க. லோக்சபா தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் வகையில், லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர்.
வரும் 19-ம் தேதி முதல், இந்த நால்வர் அணி தொகுதி வாரியாக கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு முன், தொகுதி வாரியாக தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவேண்டுமென, கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றி, மத்திய அரசில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு, தேர்தல் பணிகளை, அ.தி.மு.க. முடுக்கி விட்டுள்ளது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்த சட்டசபை தொகுதிகளில், செய்ய வேண்டிய பணிகள் எவை என்ற பட்டியல் ஒருபுறமாக எடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் வசம் உள்ள தொகுதிகளின் தேவைகள் குறித்த பட்டியலையும் உடனடியாகத் தயார் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.  நான்கு அமைச்சர் குழு, இந்த விவகாரங்களையும் மேற்பார்வை செய்யுமாம்.
முதலாவது கூட்டங்கள், வரும் 19-ம் தேதி காலை, மதுரையிலும், மாலை, விருதுநகரிலும் கூட்டம் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு இரு லோக்சபா தொகுதிகள் என்ற அடிப்படையில், புதுச்சேரி உள்ளிட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அமைச்சர்கள் குழு பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள், நவம்பர், 9-ம் தேதி வரை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தோல்லியடைந்த பின்னரும், தி.மு.க., மத்தியில் அமைச்சர்களை வைத்திருக்கிறது. அக்கட்சிக்கு டில்லியில் செல்வாக்கும் உள்ளது. அதை, வரும் லோக்சபா தேர்தலுடன் அடித்து வீழ்த்துவது என்பதே, முதல்வரின் திட்டமாம்.

கருத்துகள் இல்லை: