ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அழகிரி-வீரபாண்டி கூட்டணி?ஊஹித்து எழுதப்பட்டுள்ளதா?

கட்சித் தலைமைக்கு தெரியாமல், அழகிரி தலைமையில், சேலத்தில் கூட்டம் போட முடிவு செய்து, அதற்கான பணிகளை, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முடுக்கி விட்டதால், கருணாநிதி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதன் எதிரொலியாக, ஸ்டாலின், கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து, வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து சமாதானப்படுத்தியுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவர். கட்சித் தலைமையை அடிக்கடி விமர்ச்சிப்பதோடு, தன்னைக் கேட்டுத்தான், தலைமை, முடிவுகளை எடுக்க வேண்டும் என்கிற மனப்பக்குவம் கொண்டவராக கருதப்படுகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் சிக்கிய வீரபாண்டி ஆறுமுகம், அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொடர் வழக்குகள் போடப்பட்டு, அதன் உச்சமாக, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார். ஆளுங்கட்சியின் இந்த நடவடிக்கைக்கு, தி.மு.க., தலைமை பெரிய, "ரியாக்ஷன்' எதுவும் காட்டாததால், வீரபாண்டி தரப்பு கோபமானது.
இந்த தகவல் கருணாநிதிக்கு தெரிய வர, தமிழக அரசைக் கண்டித்து, சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தார். இதன்மூலம், தனக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக, வீரபாண்டி ஆறுமுகம் அப்போது திருப்தியடைந்து கொண்டார்.


இவரை புழல் சிறையில் சந்திக்க, கருணாநிதி திட்டமிட்ட நிலையில், திடீரென வேலூர் சிறைக்கு வீரபாண்டி மாற்றப்பட்டார். அதன்பிறகு, ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோர், சிறையில் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து, ஆறுதல் கூறி வந்தனர். இருந்தாலும், அவரின் கோபம் குறையாமல் இருந்துள்ளது. "தனக்கு எதிராக, நான் செயல்படுவதாக நினைத்து, ஸ்டாலின் என்னை புறக்கணிக்கிறார்' என்று தனது ஆதரவாளர்களிடம், வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். அதே நேரத்தில், அழகிரிக்கு ஆதரவாக அவர் கருத்துக்களை கூறியதால், அவரது ஆதரவாளர்களும் அழகிரி ஆதரவாளர்களாக மாறினர். ஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்ட முல்லை வேந்தனை, சிறையில் சந்திக்க அனுமதித்த வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலின் ஆதரவாளரான, எம்.பி., செல்வகணபதி சந்திக்க வந்தபோது, பார்க்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, சிறையில் தன்னை சந்தித்த அழகிரியிடம், கருணாநிதி தன்னை வந்து பார்க்கவில்லை என்று வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, அழகிரி தலைமையில், சேலத்தில் கூட்டம் ஒன்றை நடத்தவும், அப்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி, கருணாநிதிக்கு எட்டியதும், ஸ்டாலினை அனுப்பி, வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்து உடல்நலம் விசாரிக்கச் செய்துள்ளார். அப்போதும், "தலைவர் வந்து என்னை பார்க்காதது, வருத்தமாக உள்ளது' என்று, வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். இந்த வருத்தத்தை, கருணாநிதியிடம், ஸ்டாலின் கூறியதும், கருணாநிதியின் வேலூர் பயணம் உடனடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில், வீரபாண்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கருணாநிதியிடம் பேசியதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு குறித்து தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: தனக்கு எதிராக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், எம்.பி., செல்வகணபதி போன்றோரை ஸ்டாலின் வளர்த்து விடுவது முதல், இளைஞர் அணி அமைப்பாளர் விவகாரம் வரை, வீரபாண்டி ஆறுமுகம், கட்சித் தலைமையிடம் முழுமையாக தெரிவித்துள்ளார். அதன்பிறகும், ஸ்டாலின் தரப்பிற்கும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இணக்கம் ஏற்படவில்லை. இந்த நிலையில், தன் மீது அக்கறை செலுத்தும், அழகிரியை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய, வீரபாண்டி ஆறுமுகம் முயற்சித்தார். இதன் உச்சமாக, அழகிரி தலைமையில், சேலத்தில் ஒரு கூட்டத்தை நடத்த, ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களால் இந்த கூட்டம் நடத்தப்பட்டு இருக்குமானால், கட்சி தலைமை மீதும், ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு, அது பெரிய புயலை ஏற்படுத்தி இருக்கும். இதை தடுக்கவே, முதலில் ஸ்டாலினை அனுப்பிவிட்டு, அதன்பின், தானே நேரடி சமாதானம் செய்ய கருணாநிதி வேலூர் சிறைக்கு வந்தார். தனது, வேலூர் பயணத்தால், வீரபாண்டி ஆறுமுகத்தை சமாதானப்படுத்தி, ஸ்டாலின் - அழகிரி மோதலால் ஏற்படவிருந்த புயலை, கருணாநிதி தற்போதைக்கு தடுத்து நிறுத்தியிருக்கிறார். அழகிரியின் ஆதரவோடு, சிறையில் இருந்தவாறே, வீரபாண்டி ஆறுமுகம், காய்களை நகர்த்தி, தன்னைத் தேடி, கட்சித் தலைமையை வரச் செய்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: