சானிடரி நாப்கின் விளம்பரம் வராத சேனல்களே இல்லை. ஒரு பாக்கெட் நாப்கின் குறைந்த பட்சம் 30 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கு வரை கூட விற்பனை செய்யப்படுகிறது. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே சானிடரி நாப்கின் வாங்கி உபயோகிக்கின்றனர். ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் பழைய துணி, சாம்பல், உமி போன்றவைகளை சுகாதாரமற்ற முறையில் உபயோகிப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பள்ளிக்கோ வேறு எங்கும் வெளியிலோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுவதால் 12 முதல் 18 வயதுள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஒரு வருடத்தில் 50 நாட்கள் பள்ளிக்கு செல்வதில்லை. இதனாலேயே 23 சதவிகித பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள் என்று கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றினை ஏ.சி. நீல்சன் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மேற்கொண்டது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வயதுக்கு வந்த 1,033 பெண்களும், 151 பெண் மருத்துவர்களும் பங்கேற்றனர். ஆய்வில் இந்தியாவில் உள்ள 70 சதவிகிதப் பெண்கள் மாதத்தில் குறைந்த பட்சம் 30 ரூபாய் கூட செலவழிக்க வசதியில்லாமல் இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், லக்னோ, ஹைதராபாத், கோரக்பூர், ஔரங்காபாத் மற்றும் விஜயவாடாவில் எடுத்த கணக்கெடுப்பில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் 2.2 நாட்களுக்கு சற்று மந்தமாகவே உள்ளனர். கிழக்கு இந்தியாவில் உள்ள 83 சதவிகித பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு சானிடரி நாப்கின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றனர். 30 சதவிகித வட இந்திய பெண்கள் தாங்கள் பருவம் அடைந்ததும் பள்ளியில் இருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் மூலம் இந்தியப் பெண்களின் சுகாதாரக் கேடு பற்றி தெரிய வந்துள்ளது என்கிறார் பிளான் இந்தியாவின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் பாக்யஸ்ரீ டெங்க்ளே. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் 100 சதவிகிதப் பெண்களும், இந்தோனேசியாவில் 88 சதவிகிதப் பெண்களும், சீனாவில் 64 சதவிகிதப் பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைக்கும் இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்துப் பேசுவது இல்லை. அந்த நேரங்களில் பெண்கள் சமையல் அறைக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் அனுமதிக்கப்படுவதில்லை. சிலர் அந்த சமயத்தில் குளிப்பது கூட இல்லை. மாதவிடாய் நேரத்தில் பெண்கள் 2 தடவைக்கு மேல் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை நாப்கின் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறுநீர் பாதைக்குள் பாக்டீரியா நுழைவதும், கருப்பை பாதிப்பும் ஏற்படக்கூடும் என்கிறார் ஜீவன் மாலா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மால்விகா சபர்வால் கூறியுள்ளார்.
நாப்கின் பயன்படுத்துவதால் இனப்பெருக்க பாதை பாதிப்பு குறையும் என்று மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமானவர்களாக நோய் தொற்று அற்றவர்களாக இருக்கவேண்டும் எனில் சுகாதாரமான முறையினை பின்பற்ற வேண்டும் என்றும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் இப்பொழுதுதான் விழித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் பயன்பெரும் வகையில் இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் உள்ள வயதுக்கு வந்த பெண்களும் சுகாதாரமான முறையில் நாப்கின் பயன்படுத்தினால் மட்டுமே நோய் தொற்று அற்ற பெண்கள் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது உறுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக