தலைப்பை படித்துவிட்டு கோபத்துடன் காறி உமிழத் தோன்றுகிறதா? கொஞ்சம் நில்லுங்கள்.
சந்தேகமே வேண்டாம். வரும் வாரம் வெளியாகும் ஆனந்த விகடன், குமுதம்,
குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரையாக கூடங்குளம்
போராட்டமே இடம் பெறப் போகிறது. அந்தந்த செய்தியாளர்களை பொறுத்தும், அதை ரீ
ரைட் செய்யும் உதவியாசிரியர்களின் இலக்கிய அறிவை கணக்கில் கொண்டும் அந்தச்
செய்திகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருக்கும். புகைப்படக்காரர்கள் எடுத்த
படங்களில் எது ‘மனதை தொடுகிறதோ’, அது செய்தியின் பக்கங்களை அலங்கரிக்கும்.
ஆனால், அனைவருமே சொல்லி வைத்தது போல் மக்களின் பயத்தை அரசு போக்க வேண்டும்
என முடித்திருப்பார்கள். மக்கள் போராட்டம் நியாயமற்றது, அணு உலை தேவை
என்பதை பத்திக்குப் பத்தி உணர்த்தியிருப்பார்கள் அல்லது அணு உலை
ஆபத்தானதுதான் இருந்தாலும்… என இழுத்திருப்பார்கள்.மொத்தத்தில் செய்திக் கட்டுரை எப்படி இருந்தாலும் ஒருபோதும் கூடங்குள போராட்ட புகைப்படம் இந்த இதழ்களின் அட்டையை அலங்கரிக்காது. ஏதேனும் ஒரு நடிகையின் படத்துக்கு கீழே அல்லது ஓரத்தில் அநேகமாக எழுத்தில் மட்டும் போராட்டம் தொடர்பான தலைப்பை பொறித்திருக்கிறார்கள்.www.vinavu.com
விகடன் மட்டும் விதிவிலக்காக கூடங்குளம் போராட்டப் படத்தை அட்டைப்படமாக போட்டு விட்டது.
வெற்றிலையில் மை போட்டுப் பார்க்காமலேயே இதை கணித்துவிடலாம். ஊடகங்களின் லட்சணம் இப்படி. இதழியல் தர்மம் அப்படி. இதற்கு உதாரணமாக சென்ற மாத இறுதியில் வெளியான அனைத்து வார இதழ்களையுமே எடுத்துக் கொள்வோம். போட்டிப் போட்டுக் கொண்டு அனைவருமே நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்த செய்தியையே அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள்.
ராமாநாயுடுவின் பேரனும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகனும், நடிகருமான ராணாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்… மும்பையில் நிச்சயதார்த்தம்… வைர மோதிரத்தை மணமகன் பரிசாக மணமகளுக்கு அளிக்கப் போகிறார்… என்றெல்லாம் செய்திகளை முந்தித் தந்தன. 05.09.12 தேதியிட்ட ‘ஆனந்த விகடன்’, ‘ராணா எனக்கு ரொம்ப ஸ்பெஷல் – த்ரிஷா காதல் கதை‘ என்ற தலைப்பை வைத்திருந்தது என்றால், ‘த்ரிஷாவுக்கு டும் டும் டும்… வைரக்கம்மல் பிளாட்டின மோதிரம் நிச்சயதார்த்த அறிவிப்பு?’ என்ற தலைப்பை 22.08.12 தேதியிட்ட ‘குமுதம்’ வைத்திருந்தது. ஏறக்குறைய தினமுமே சினிமா செய்திகளை ஒரு பக்கத்துக்கு இப்போது வெளியிட ஆரம்பித்திருக்கும் ‘தின மலர்’ தன் பங்குக்கு பெட்டிப் பெட்டியாக இச்செய்தியை தவணை முறையில் பிரசுரித்து துணுக்கு மூட்டையை கடைவிரித்தது.
இதற்கு ஆரம்பம், துபாயில் நடந்த ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது 2012′ (SIIMA) விழாவில் அருகருகே த்ரிஷாவும், ராணாவும் அமர்ந்திருந்தது. சிரிக்கச் சிரிக்க இருவரும் பேசியது. இந்த படங்களை வைத்துத்தான் இந்த ‘திருமண’ செய்திகள் இறக்கைக் கட்டிப் பறந்தன; பறக்கின்றன. இதற்கு முன்பும் இதே இதழ்கள்தான் விஜய், சிம்புவில் ஆரம்பித்து அமெரிக்க மாப்பிள்ளை வரை பலருடனும் த்ரிஷாவுக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கின்றன. த்ரிஷா ராணாவையோ இல்லை வேறு யாரையோ திருமணம் செய்து கொள்ளட்டும். அது ஏன் தமிழ் மக்களின் கூட்டு மனக்கவலையாக வேண்டும்?
இப்படி வாராவாரம் செய்திகளை தங்கள் வசதிக்கு ஏற்ப உப்பு, புளி மிளகாயுடன் சமைக்கும் ஊடகங்களை சார்ந்துதான் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. த்ரிஷாவுக்கு கல்யாணமாம் என பத்து டுவிட்ஸ், மூன்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு கூகுள் ப்ளசில் ஐந்தாறு மறுமொழிகளை போட்டுவிட்டால் அன்றைய கடமை முடிந்தது என்று நினைப்பவர்களே அதிகம்.
அதனால்தான் கூடங்குளம் போன்ற மக்கள் போராட்டங்களும், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பலியான தொழிலாளர்களின் நிலை குறித்து கவலைப்படுவர்களை விட த்ரிஷா திருமணம் குறித்து பேசிக்கொள்பவர்களே இணையத்தில் பெரும்பான்மை. கூடங்குளம், சிவகாசி குறித்து அசட்டுத்தனமாகவோ, திமிராகவோ பேசுபவர்கள்தான் த்ரிஷா திருமணம் குறித்து டீடெய்லாக பகிருவார்கள் என்பது உண்மை. அதனால்தான் தினமலர் கூடங்குளம் போராட்ட உணர்வு குறித்த வெறுப்புணர்வையும், த்ரிஷா குறித்த கிசுகிசு ஆர்வத்தையும் ஒருங்கே பரப்பி வருகிறது. “அனுஷ்கா கொடுத்த ஒயின் பார்ட்டி என்று அனுஷ்கா படம் போட்டிருக்கும் அட்டையில் 90 ரூபாய் கூலிக்கு கருகிய உயிர்கள் – சிவகாசி பயங்கரம் “ என்று போட்டிருக்கிறது குமுதம். குமுதத்தின் ஆபாசமான இந்த அழகியல் உணர்ச்சிதான் உண்மையில் பயங்கரம்.
‘உழைச்சு சம்பாதிச்சு நல்ல நிலைல இருக்கோம்… வாழ்க்கையை அனுபவிக்கிறோம்… அது உனக்கு கசக்குதா?’ என்று கேட்பதும், ‘வேறென்ன செய்ய முடியும் சொல்லுங்கள்’ என பரிதாபமாக கழிவிரக்கத்துடன் நினைப்பதும், இன்றைய வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரைகளும் வேறு வேறு அல்ல. ஒரே கம்பியின் நுனி திரிசூலமாக பிரிந்திருப்பது போல்தான் இந்த மூன்றும்.
கூடங்குளம், சிவகாசி பிரச்சினைகளெல்லாம் ஊடகங்களைப் பொறுத்த வரை உள்ளூர் செய்திகள் மட்டுமே. த்ரிஷாவின் கல்யாணச் செய்தியோ தேசியச் செய்தியாக தலைப்பில் இடம் பிடிக்கும். ஆக சமூகச் செய்திகள் உள்ளூர் செய்தியாகவும், ஒரு மூலையில் இருக்க வேண்டிய சினிமா செய்தி தலைப்புச் செய்தியாகவும் இடம் பிடிக்கிறது என்றால்? இடம் கொடுப்பவனை எதைக் கொண்டு திருத்துவது?
நாட்டு மக்கள் பிரச்சினைகளை விட நடிகைகளில் கல்யாணச் செய்திகள்தான் ஒரு தேசத்தில் அதிகம் பேசப்படுமென்றால் அது அடிமைகளின் தேசமா, அறிவார்ந்தவர்களின் தேசமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக