திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளம்: போராடும் மக்களைவிட அதிக எண்ணிக்கை போலீஸ்!!

Viruvirupu கூடங்குளம் அணு உலையில் எரிபொருளை நிரப்பக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடற்கரையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். நேற்று காலையில் இருந்து போராட்டம் தொடர்வதால், அப்பகுதியில் பதட்ட நிலை தொடர்கிறது.
நேற்று பகல் பொதுமக்கள் அமர்ந்துள்ள இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுவந்த காவல்துறையினர், இரவு தங்களது பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்றால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுப்போம். வெளியில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றனர்.

அணுஉலைக்கு எதிராக கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் எண்ணிக்கை 3,500 முதல், 5,000 வரை கணிக்கப்படுகிறது. இதற்கு காரணம், ஒரேயளவு மக்கள் தொடர்ந்து இருப்பதில்லை. மக்களின் எண்ணிக்கை கூடிக் குறைந்தவண்ணம் உள்ளது.
“அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படாது என்று அறிவிக்கும் வரை கடற்கரையை விட்டு வெளியேற மாட்டோம்” என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் எரிபொருள் (யுரேனியம்) நிரப்ப ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரிஜினல் திட்டப்படி, இந்த வாரம் எரிபொருள் நிரப்பப்பட வேண்டும்.
நேற்று போராட்டம் துவங்கப்பட்ட போது, போலீஸாரால் சாலை வழிகள் எல்லாம் அடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அதையடுத்து, கடற்கரை வழியாக குழந்தைகளுடன் பெண்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து முற்றுகையிட முயன்றனர். பாதி வழியில் போலீசார் மறித்தனர். கலெக்டர் சமரசம் செய்தும் அதை நிராகரித்து, கடற்கரையில் எல்லாரும் அமர்ந்து விட்டனர்.
தற்போது, அணு மின் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் மக்கள் அமர்ந்துள்ளனர்.
கூடங்குளத்தை சுற்றியுள்ள சுமார் 7 கி.மீ. பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ராதாபுரம், கூடங்குளம் சாலை உள்ளிட்ட அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் மத்திய அதிரடிப்படை, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த 10 கம்பெனி சி.ஆர்.பி.எப். வீரர்கள், 4 கம்பெனி தமிழக அதிரடிப் படை போலீசார், 26 கம்பெனி பட்டாலியன் போலீசார் உள்பட சுமார் 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுருக்கமாக சொன்னால், போராட்டக்காரர்களை விட, போலீஸாரின் எண்ணிக்கை அதிகம்!

கருத்துகள் இல்லை: