கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட போராட்ட குழுவினர் இன்று காலை 11 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இதனால் அணுமின் நிலைய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்கார்கள் எல்லை மீறினால், அவர்களை கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்க உள்ளது. இதை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். ஏற்கனவே, இங்குள்ள கிராமங்களில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதை மீறி கூட்டம் கூடினால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ராதாபுரம்கூடங்குளம் சாலை, இடிந்தகரை சாலை, வைராவி கிணறு விலக்கு, தாமஸ் மண்டபம் உள்பட பல பகுதிகளில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் அணுமின் நிலைய பகுதிக்குள் வருவதை தடுக்க இரவில் இடிந்தகரை கிராமத்தில் உள்ள எல்லா தெரு விளக்குகளும் எரியவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முற்றுகை போராட்டத்துக்கு வருபவர்களை தடுக்கும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டிஐஜி வரதராஜூ, எஸ்பி விஜயேந்திர பிதாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேரன்மகாதேவி சப்கலெக்டர் ரோகிணி ராம்தாஸ், ராதாபுரம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் உள்ளனர். போராட்டத்தால் கூடங்குளம் தவிர மற்ற கடலோர கிராமங்களில் கடைகள் மூடப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. முற்றுகை போராட்டத்தில் குடும்பத்தோடு பங்கேற்க வரவேண்டும் என்று போராட்ட குழுவினர் இன்று காலை 9.45 மணிக்கு இடிந்தகரை சுனாமி காலனி கோயில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர். அதன்பின், ஏராளமான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை நோக்கி புறப்பட்டனர். இடிந்தகரையில் அனைவரும் கூடியதும் வெள்ளை கொடியுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில், போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். 10 ஆயிரம் பேர் இங்கு வந்துள்ளனர். எந்த இடத்தில் போலீஸ் தடுக்கிறதோ, அங்கேயே அமர்ந்திருப்போம். முதியவர்கள் உள்பட எல்லோரையும் கைது செய்தால்தான் நாங்கள் கைதாவோம் என்றார்.
வைராவி கிணறு வழியாக ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளனர். தடையை மீறி அணுமின் நிலையத்தை நோக்கி வருபவர்களை கைது செய்ய கூடங்குளம், வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் 110க்கும் அதிகமான அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தாமல், கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு ஐஜி ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டுள்ளார். கூடங்குளம் முற்றுகை போராட்டத்தில் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு எதிர்ப்பாளர்கள்தான் பொறுப்பு என்று போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு நெல்லை கலெக்டர் செல்வராஜ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுகுறித்து உதயகுமார் கூறுகையில், கலெக்டர் கூறுவதை ஏற்க முடியாது. இங்கு எது நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு என்றார். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக