சனி, 15 செப்டம்பர், 2012

தம்பி இனி எல்லாம் வெற்றி தான்: கட்சியினருக்கு ஜெ., கடிதம்

சென்னை:"அரசியல் களத்தில், இனி எல்லாம் வெற்றி தான்' என, அண்ணாதுரையின், 104வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தொண்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடித விவரம்:கட்சி உறுப்பினர்களை, தம்பி என, அழைத்து, கொள்கை, கோட்பாடுகளை, கடிதங்கள் மூலம் நாள்தோறும் பகிர்ந்து கொண்டவர், அண்ணாதுரை.பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை, அகற்ற வேண்டும்; மூட நம்பிக்கைகளால், மனிதனை மனிதனே தாழ்த்தும் கொடுமை, ஒழிய வேண்டும் என, உறுதி கொண்டார். இதற்காக, ஈ.வெ.ரா.,விடம் பயிற்சி பெற்று, சமூக போராளியாக, களத்தில் இறங்க உறுதி பூண்டார். சமூக நீதியையும், சமூக சீர்திருத்தத்தையும், ஆட்சி அதிகாரம் மூலம் சாதிக்க முடியும் என, தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆரை இணைத்து, குறுகிய காலத்தில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சி செய்த, இரண்டு ஆண்டு காலத்தில், பல்வேறு சாதனைகளை புரிந்தார். நம் மாநிலத்துக்கு, தமிழ்நாடு என, பெயர் சூட்டினார். ஏழை, எளிய மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஒரு ரூபாய்க்கு, ஒரு படி அரிசித் திட்டத்தை அமல்படுத்தினார். சுய மரியாதை திருமணங்களுக்கு, சட்ட ரீதியான அங்கீகாரம் அளித்தார்.
அயராது உழைத்த அண்ணாதுரை, உடல் நலம் குன்றி இறந்தார். இதன்பின், எம்.ஜி.ஆரின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி, ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. அண்ணாதுரையின் கொள்கையை பின்பற்றுவதாக, வெளி வேடம் போட்டு, இயக்கத்தையும், ஆட்சியையும், குடும்ப குபேர வாழ்வுக்கு பயன்படுத்தினார். இந்த துரோகத்தை ஏற்றுக் கொள்ளாத, எம்.ஜி.ஆர்., அண்ணாதுரையின் உண்மையான கொள்கைகளை நிலைநாட்ட, தனி இயக்கம் துவக்கி, மக்களின் பேராதரவோடு, ஆட்சியைக் கைப்பற்றினார். அண்ணாதுரையின் கொள்கைகளை காப்பாற்றினார். எம்.ஜி.ஆருக்கு பின், அவரது ஆசியோடு, நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அண்ணாதுரையின் லட்சியங்களான, ஏற்றத் தாழ்வற்ற சமூகம், ஆணுக்கு பெண் சமம் என்ற புதிய பாதையை வகுத்து, அயராது உழைத்து வருகிறேன்.

அண்ணாதுரையின் லட்சியங்களைக் காக்கவும், எம்.ஜி.ஆரின் கனவுகளை நனவாக்கவும், எதிர் வரும் அரசியல் களங்களில் எல்லாம், அ.தி.மு.க., இனி, வெற்றியே பெறும். அதை உறுதி செய்ய, அண்ணாதுரையின் பிறந்த நாளன்று, அனைவரும், தூய உள்ளத்துடன், மக்கள் பணியாற்ற வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: