திருச்சி:இலங்கையில் இருந்து வழிபாட்டுக்கு வந்த அப்பாவி, இலங்கை
யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, சாதாரண பிரிவுகளில்
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இலங்கை, புத்தளம் மாவட்டம், சிலாவம் பகுதியைச் சேர்ந்த, 65 ஆண்கள், 83 பெண்கள், 36 குழந்தைகள் என, 184 பேர், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, நான்கு குழுக்களாக, கடந்த, 2ம் தேதி, விமானம் மூலம் தமிழகம் வந்தனர்.தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே, பூண்டி மாதா கோவிலுக்கு பிரார்த்தனைக்கு சென்றனர். தகவலறிந்த, ம.தி.மு.க., - வி.சி., நாம் தமிழர் உள்ளிட்டவர்கள், பூண்டி மாதா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அன்றிரவே, ஏழு வேன்கள் மூலம் போலீசார் யாத்திரிகர்களை வேளாங்கண்ணிக்கு அனுப்பி வைத்தனர்.மறுநாள் காலை, வேளாங்கண்ணி கோவிலில் பிரார்த்தனை செய்யச் சென்ற போது, மீண்டும் புலிகள் ஆதரவு அமைப்பினர் ஒன்று திரண்டு, அவர்களைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்த போலீசார், இலங்கை நாட்டினரை மீண்டும் நாடு திரும்ப கேட்டுக் கொண்டனர்.அவசர கதியில், அங்கிருந்து வேன்களில் கிளம்பிய அவர்களின் பாதுகாப்புக்காக, நாகையில் இருந்து 20 போலீசார், மூன்று வாகனங்களில், முன்னும் பின்னும் தொடர்ந்தனர். அவர்களின் பின்னே காரில் பின்தொடர்ந்த சிலர், மொபைல் போன் மூலம், ஆங்காங்கே உள்ள தங்களின் ஆதரவாளர்களுக்கு தகவல் கொடுத்தபடியே வந்தனர்.
திருவாரூர் அருகே வேன்கள் மீது செருப்பு வீசப்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே வந்தபோது, திடீரென 20க்கும் மேற்பட்டோர், நான்காவது வேனை வழிமறித்து, தாக்கினர். அவர்களின் தாக்குதலில், நான்கு வேன்களின் கண்ணாடிகள் உடைந்தன.வேனில் இருந்த பெண்களும், குழந்தைகளும் அதிர்ச்சியடைந்து, பயத்தில்அலறினர். பாதுகாப்பு போலீசார் வருவதற்குள், தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல் தப்பியோடியது. "தாங்கள் உயிருடன் ஊருக்கு திரும்புவோமா?' என்ற சந்தேகம், இலங்கைவாசிகளுக்கு ஏற்பட்டதால், கதறியழுதபடியே இருந்தனர்.திருச்சி புறநகர் மாவட்ட போலீசார், பாதுகாப்பாக இலங்கை யாத்திரிகர்களை, திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். கார்கோ பகுதியில் உள்ள அறையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர். தொடர் துரத்தலின் காரணமாக, உணவு மற்றும் தண்ணீருக்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்ட அவர்களுக்கு, உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தரப்பட்டது.இலங்கை தூதரகம் மூலம் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றிரவு, 10.50 மணிக்கு, "மிகின் லங்கா' சிறப்பு விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பினர். ஒருவர் "எஸ்கேப்':
சம்பவம் தொடர்பான நடவடிக்கை குறித்து, திருச்சி மாவட்ட எஸ்.பி., லலிதா லட்சுமியிடம் கேட்ட போது, "திருச்சி ம.தி.மு.க., புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன், ம.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஜான் பிரிட்டோ, மாவட்ட இளைஞரணிதுணைச் செயலர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், சுந்தர்ராஜ், ரங்கராஜ், அன்சாரி, துளசிமணி ஆகியோர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, எட்டு பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சேரனை தேடி வருகிறோம்' என்றார்.
கண்துடைப்பு நடவடிக்கை:
இலங்கை யாத்திரிகர்களை தாக்கியவர்கள் மீது, சட்ட விரோதமாக ஆயுதங்களுடன்
கூடுதல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின்படி
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசை
வலியுறுத்த, மத்திய அரசுக்கு வாய்ப்பிருந்தும், லோக்சபா தேர்தலை மனதில்
கொண்டு, வழக்கம் போல காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக