நரிக்குறவர்கள் என்றாலே உங்கள் மனதிற்குள் என்ன தோன்றும்? ஊசிமணி, பாசிமணி விற்பவர்கள், நாம் உண்ணாத பிராணிகளின் மாமிசம் உண்பவர்கள், அரைகுறை ஆடை அணிபவர்கள், சுத்தமில்லாதவர்கள் என நரிக்குறவர்களை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் இருக்கும்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரவியிருந்தாலும், சில பகுதிகளில் உள்ள நரிக்குறவர்களை பார்க்கும் போது புருவங்கள் நெற்றியின் பாதியைத் தொடுகின்றன. ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி போன்ற பகுதிகளில், பட்டப்படிப்பு படித்தவர்களின் பட்டியலை எடுத்தால் நிச்சயம் நரிக்குறவர்களின் பெயர்களும் இருக்கும். அவர்களுக்கு அருமையான வீடு இருக்கும். ஆனால், அனைத்து நரிக்குறவர்களுக்குமே, இப்படி வசதி, வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும், நரிக்குறவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது?
"லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன்களுடன்' நின்றிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து வவ்வால் வறுவலும், மிளகு ரசமும் வரவேற்றது. பன்றிகளும், கருவேல மரங்களும் அடர்ந்த, "மிலிட்டரி' பகுதியில், நான்கு தலைமுறைகளாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர் இவர்கள்.
வீடும், ரோடும் நிறைவேறாத ஆசை:
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் இவர்களுக்கு நீண்ட காலமாக நிறைவேறாத ஆசையாக இருந்து வருவது வீடும், ரோடும் தான். மழை பெய்தால் ஒழுகாமல் இருப்பதற்கு வீடும், சகதியாகாத ரோடும் இவர்களது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. முன்பு போல பெண்கள் அனைவரும் ஊசி பாசி விற்கவோ, ஆண்கள் அனைவரும் வேட்டையாடவோ செல்வதில்லை. குறைந்த அளவிலான மக்களே, குலத்தொழிலை செய்தாலும் பெரும்பாலான மக்கள் நகரத்திற்குள் வந்து, இன்னபிற வேலைகளையும் பார்க்க துவங்கியுள்ளனர். சந்தையில் கடை போடுதல், கட்டட வேலைக்குச் செல்லுதல், பெரிய நிறுவனங்களில் துப்புரவு பணி, இரும்பு சேகரித்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.""எங்கள மாதிரி இருக்கிற குருவிக்காரங்களுக்கு அரசாங்கம் நிறைய சலுகைகளை செய்து தருது. ஆனா, நாங்க இங்க பல வருஷமா இருக்கோம். எங்கள கண்டுக்க மாட்டேங்குது. "அவசரத்துக்கு' காவா பக்கம்தான் ஒதுங்குறோம். இது குழந்தைகளுக்கு பாதுகாப்பா இல்ல. தண்ணீ வசதி சுத்தமா இல்ல. மழை காலத்துல, பாம்பெல்லாம் குடிசைக்குள்ள வந்திருது'' என்று கோபி, மேரி தம்பதியினர் தங்கள் வாழ்க்கை அவலங்களை புலம்பினர்.
அடுத்து பேசிய ராசுக்குட்டி, ""பெரிய கம்பெனியில இருந்து வந்து வேலைக்கு கூட்டிட்டு போறாங்க. போகும் போது ஒரு சம்பளம் சொல்றாங்க. குடுக்கும் போது ஒரு சம்பளம் தர்றாங்க. அந்த சம்பளம் பஸ்சுக்கும், சாப்பாட்டுக்குமே சரியா போயிடுது. அரசாங்கமே எங்களுக்கு ஒரு வேலைய போட்டுக் குடுத்தா நாங்களும் நல்லா பொழச்சுக்குவோம்,'' என்று ஆதங்கப்பட்டார்.
கான்வென்டில் படிக்கும் குழந்தைகள்:
அவர்களுடைய குழந்தைகளைப் பற்றி கேட்ட போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நரிக்குறவர் இன குழந்தைகள் 26 பேர், அருகிலுள்ள புனித தெரசா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வருகின்றனர். எப்படிபடிக்கின்றனர் அடுத்த தலைமுறையினர் என்று, பள்ளியின் தலைமையாசிரியை மரிய பிலோமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இந்த குழந்தைகள் பாடம் கற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால், ஆசிரியர்கள் அதை பொறுமையாக கையாளுகின்றனர். விடுமுறை எடுத்தாலோ, தாமதமாக வந்தாலோ கண்டிப்பதும் கிடையாது. ஏனென்றால், திருவிழா சமயங்களில், பெற்றோர் கூடவே அழைத்துச் சென்று விடுகின்றனர். மேலும், அவர்களைக் கண்டித்தால் பள்ளிக்கும் வரமாட்டார்கள். அதனால் அன்பினாலே அவர்களை வழிநடத்துகிறோம். பள்ளிக் கட்டணத்தைப் பொறுத்தவரையில் கட்டுபவர்களிடம் வாங்கிக் கொள்கிறோம். இல்லாதவர்களிடம் வற்புறுத்துவதில்லை. மாணவர்களுக்கு தேவையான சத்துணவு, சீருடைகளை, நிர்வாகமே வழங்கி விடுகிறது.இம்மாணவர்கள் அனைவரும் ஆரம்பநிலைக் கல்வியில் இருப்பதால், இப்போதைக்கு ஜாதி சான்றிதழ் பற்றிய பிரச்னை இல்லை. சமூகத்திலும், ஜாதி ரீதியாகவும் புறந்தள்ளப்பட்டவர்களை ஆதரித்து அவர்களும் சமூக அந்தஸ்தை பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு எங்கள் பள்ளி செயல்படுகிறது.இவ்வாறு மரிய பிலோமிதெரிவித்தார்.
நான்காம் வகுப்பு நரிக்குறவமாணவர்களான மல்லிக்கு டாக்டராக விருப்பமாம்; வீராவிற்கு போலீசாக விருப்பமாம். சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் இவர்களின் "கனவு மெய்ப்பட வேண்டும்' என்பதே அனைவரின் விருப்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக