புதன், 5 அக்டோபர், 2011

TNA பொது தொண்டுகள் ஆற்றியதில்லை வெறும் அரசியல் மட்டுமே நடாத்துகிறது

vanni refugeesஇனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவது மட்டும் தமிழ் அரசியல் கட்சிகளின் பணியாகாது.  அதற்கப்பால் மக்களுக்கான மனிதநேயப் பணியாற்றுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
- கிருஷ்ணமூர்த்தி  அரவிந்தன்
வன்னியில் எந்தத் தெருவிலே எந்த வேளையில் நீங்கள் சென்றாலும் அங்கே கையில்லாத, அல்லது காலில்லாத அல்லது கண்களை இழந்த பலரை நீங்கள் சந்திக்காமல் செல்ல முடியாது. அவர்கள் புழுதி நிரம்பிய தெருக்களிலும், இருள் நிரம்பிய வீடுகளிலும், காடும் புதருமாகவிருக்கும் ஊர்களிலும் தங்கள் ஒவ்வொரு நாள் பொழுதைக் கழிப்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீதி விபத்தொன்றில் சிக்கி மயிரிழையில் உயர் தப்பியிருந்தார் ஒருவர்.  அவருக்கு ஏற்கனவே ஒரு கால் இல்லை.  விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்குமிடையில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற ஒரு மோதலின்போது அவருடைய கால் சிதைந்து போயிற்று.  ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகச் செயற்பட்ட அவர், தற்போது விறகு வெட்டியாகிச் சீவியம் நடத்துகிறார்.  சைக்கிளில் விறகை ஏற்றிச்; செல்லும் போதே அவர் விபத்தில் சிக்கியிருக்கிறார்.
இதுபோல, போரிலும் போரின் காரணமாகவும் உடல் உறுப்புக்களை இழந்தோராகப் பல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருப்பதன் மூலமாக எண்ணற்ற இன்னல்களைத் தினமும் இவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே கையை இழந்த பிள்ளை, ஆறுமாதப் பருவத்தில் காலை இழந்த குழந்தை தொடக்கம் முதியவர்கள் வரை பல பருவத்தினரும் அங்கவீனர்களாகியிருக்கின்றனர்.  அது மட்டுமல்ல ஆண், பெண் என்று பால் வேறுபாடுகளின்றிய நிலையில் சகலரையும் போர் பாதித்திருக்கிறது. அவர்களுடைய உடல் உறுப்புக்களை அது தின்றிருக்கிறது.  தின்றுவிட்டு அவர்களை அநாதரவான நிலையில் கைவிட்டுள்ளது.

காலிழந்தவர்கள், கையிழந்தவர்கள், கண்ணிழந்தவர்கள், காது கேட்காத நிலைக்குத் தள்ளப்பட்டோர் என இந்தப்பட்டியல்கள் பல வகையில் உண்டு.  அதிலும் இரண்டு கால்களையும் இழந்தவர்கள், இரண்டு கைகளையும் இழந்தவர்கள், இடுப்புக்குக் கீழே இயங்கமுடியாதவர்கள், கால்களையும் கையையும் ஒருசேர இழந்தவர்கள் என்றிருப்போரின் தொகையும் நூற்றுக்கணக்கில் உண்டு.

இவர்கள் தங்களுடைய சுயகாரியங்களையே பார்க்கமுடியாத நிலையில் சிரமப்படுகின்றனர்.  குளிப்பதற்கு ஒரு வாளி தண்ணீரை அள்ள முடியாத நிலை. சாப்பிடுவதற்கு கூட மற்றவர்களுடைய உதவி தேவை.  உடைமாற்றுவதற்கு, மலசலம் கழிப்பதற்குக் கூட பிறரை எதிர்பார்த்திருத்தல்.  இது போல எல்லாவற்றுக்கும் ஏதோவொரு வகையில் யாரையாவது எதிர்பார்த்து வாழவேண்டிய ஒரு நிலையில் இவர்கள். அதாவது தங்களுடைய சொந்தக் காரியங்களையே பார்க்க முடியாத அவலம்.

இப்படியிருப்போரின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

கடந்த காலத்தின் பலியிடல்கள் நிகழ்காலத்தில் இவர்களை அநாதரவான நிலைக்குத் தள்ளியுள்ளன. இதனால்  இவர்களுடைய நிகழ்காலம்; மட்டுமல்ல, எதிர்காலமும் கேள்விக்குறியின் முன்னேயே நிற்கிறது.      

இலங்கையில் நடைபெற்ற போர் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாட்டில் ltte cadres-5பெரும்பாலான இடங்களிலும் இந்தமாதிரியான அனர்தத்தை ஏற்படுத்தியுள்ளது. படையினர் தொடக்கம் விடுதலை இயக்கங்களின் போராளிகள் வரை இந்தப் பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர்.   ஆனால், வடக்கு கிழக்கில்தான் இதனுடைய பாதிப்பு அல்லது தாக்கம் கூடுதலாக இருக்கிறது.  போரின் காரணமாக பொதுமக்களாக இருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  போர் தீவிரமடைந்தபோது அதன் விளைவை அதிகமாக அனுபவித்தவர்கள் சனங்களே.

இப்பொழுது போர் ஓய்ந்து விட்டது.  போருக்குப் பின்னரான மறு வாழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.  ஆனால், இந்தப் பணிகள் மிக மந்தகதியிலானவை.  அத்துடன் ஒழுங்கமைக்கப்படாதவை.  ஏதோ பேரளவுக்கு என்ற அளவில் நடப்பவை.  எனவேதான் இந்தமாதிரியான உச்சக்கட்ட பாதிப்புக்களுக்கான நிவாரணம் வழங்கப்படாதிருக்கிறது.

அதாவது, பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அங்கவீனர்களைப் பொறுத்து எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எந்தத் தரப்பினராலும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால்,  உடலுறுப்புக்களை இழந்த படையினருக்கான நிவாரண நடவடிக்கைகளை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது. அல்லது அவர்களுடைய சேமநலனைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் ஒரு சிறப்புத்திட்டத்தையும் மக்கள் மட்டத்திலான நிதிச் சேகரிப்பு நடவடிக்கையையும் அரச நிதி ஒதுக்கீட்டையும் ஏற்கனவே செய்துள்ளது.

உடலுறுப்புக்களை இழந்த படையினருக்கான விசேட கொடுப்பனவுகள் முதல் பல விசயங்களிலும் முன்னுரிமைகளில் விசேடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.

ஆனால்,  தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் போரின் காரணமாக ஏற்பட்ட உடலுறுப்பு இழப்பிற்கு  அவர்களுக்கு எத்தகைய உதவித்திட்டங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.  பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளென்ற வகையில், எத்தகைய குறிப்பிடத்தக்க அரச உதவிகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அதைப்போல புலம்பெயர் தமிழ் மக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட நிதியோ மற்றும் வாழ்வாதார உதவிகளோ உள்ளுர் அமைப்புக்களின் உதவிகளோ சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவிகளோ குறிப்பிடக் கூடிய அளவில் கிடைப்பதாக இல்லை.

கிளிநொச்சியிலுள்ள செல்வாநகர் என்ற இடத்தில் ஊனமுற்றோருக்கான தனியான குடியிருப்பே உண்டு. (அப்படி அவர்களைத் தனியாக அடையாளப்படுத்தி ஒரு குடியிருப்பை அமைத்திருப்பதைப் பற்றியே நாம் விவாதிக்க வேண்டும்). ஊனமுற்றோரை மாற்று வலுவுடையோர் என்று பெயரிட்டு, அவர்களுக்கான உதவி அமைப்பொன்றும் கிளிநொச்சியில் முன்னர் இயங்கியது. தற்போது அதனுடைய செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவிக்கிறார்கள். ஆனால், பதிலாக வவுனியாவில் ஒரு மாற்று வலுவுடையோருக்கான உதவி அமைப்பொன்று இயங்குகிறது. என்றாலும் இவை மிக வரையறுக்கப்பட்ட சிறிய பணிகளைச் செய்யும் சிறிய அமைப்புகளாகவே இருக்கின்றன. பொதுவாக நீண்ட கால அடிப்படையில், தேவைகளை நிறைவேற்றக்கூடிய அளவில் இவற்றின் உதவிகள் அமைந்திருக்கவில்லை. 

போரினால் அங்கவீனமடைந்தவர்;களின் நிலமையைக் கருத்திற்கொண்டே 2ம் உலகப் போருக்குப் பின்னர் பல்வேறு உதவி அமைப்புக்களும் உதவித்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன.  ஏனெனில், போர் முடிந்ததற்குப் பின்னரும் போரின் விளைவான அனர்த்தங்களை அதிகளவில் அனுபவிப்பவர்கள் போர்க்காலத்தில் உடலுறுப்புக்களை இழந்தோரே.  ஆகவேதான் அவர்களுக்கான நிவாரணத்தைக் குறித்து  கூடுதல் அக்கறை கொள்ளப்படுகிறது.

போரினால் ஏற்படுகின்ற பிற அழிவுகளை ஓரளவிற்கு புனரமைக்கலாம் அல்லது மீளக் கட்டியெழுப்பலாம்.  ஆனால்,  உயிரிழப்புக்களையும் உடல் உறுப்பு இழப்புக்களையும் எதன் மூலமும் ஈடுசெய்ய முடியாது.

இந்த நிலையில் உடல் உறுப்பு இழப்பு என்பது அவர்கள் வாழும் காலம் வரை அவர்களைத் தொடர்ந்து பாதித்துக்கொண்டிருக்கும் ஒரு பெரிய பிரச்சினை.  இந்தப் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வை காணவேண்டுமாக இருந்தால், நிலையான உதவித்திட்டங்கள் அவசியம்.  அதைப்போல பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு இவர்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான பயிற்சித் திட்டங்கள், உதவித்திட்டங்கள், ஆதாரத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அதற்கு பாதிக்கப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு மிக அவசியம்.  அந்தக் கணக்கெடுப்பில் பாதிப்புகளின் முழு விபரங்களும் இனங்காணப்படும்.  குறிப்பாக குழந்தைப் பிராயம் அல்லது சிறு பிராயத்தில் உடலுறுப்புகளை இழந்தோர், உழைப்பாளிகளாக இருப்போரில் உடல் உறுப்புக்களை இழந்தோர், முதியோரில் உடல் உறுப்புக்களை இழந்தோர் போன்றவை ஒருவகையாகவும், கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தேர், உடலியக்கம் இழந்தோர் என எந்த மாதிரியான பாதிப்புக்களுக்கு உட்பட்டோர் என்ற வகை மாதிரிகளையும் அறியக் கூடியதாக இருக்கும்.

இத்தகைய ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டாலே அதற்குரிய வகையிலான திட்டத்தை வகுத்து அதற்கான நிதியை ஒதுக்க முடியும்.  அல்லது அதற்கான நிதியைப் பெறமுடியும். ஆனால், இந்த ஆரம்பப் பணிகளைப் போல இதுவரையில் அதாவது, போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எந்தத் தரப்பினாலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விசயமாகும். இது உண்மையில் சம்மந்தப்பட்டவர்களின் மீதான கண்டனத்திற்குரியதும் கூட.

அரசாங்கம் இதனைப் பொறுப்புடன் செயற்படுத்தவில்லை என்றால் அரசுக்குச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், பொது அமைப்புக்களுக்கும், ஊடகங்களுக்கும் உரியது.  ஆனால், இவர்கள் கூட இந்த விடயத்தில் மந்தமாக இருந்துள்ளனர். இன்னும் இதுதான் நிலைமை.

என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் விடுதலைப் புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான பலவகையான தொழிற்பயிற்சித் திட்டங்களை அவர்கள், மேற்கொண்டு வந்தனர். போரின் விளைவுகளுக்கு அவர்கள் ஒரு தரப்பின் பொறுப்பாளிகள் என்ற வகையில், அவர்கள் அவற்றுக்கு நிவாரணமாக அதைச் செய்திருக்கலாம்.

இலத்திரனியல் கற்கை, கணினிக் கற்கை, இசை – ஓவியம் - நாடகம் -ஊடகவியல் மற்றும் கலைத்துறைக் கற்கைகள், படகு கட்டுமானம், மின் இணைப்பு, நீர்வழங்கல், விவசாய மேம்பாடு, கட்டுமான கற்கைநெறி, இயந்திரவியல் எனப்பல தொழிற்கல்வி நடவடிக்கைகளும் மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு ஏற்பாடுகளும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் மூலம் உடல் உறுப்புக்களை இழந்தோர் தங்கள் பாதிப்பின்; கனதியை உணராத வகையில் வாழ்வில் இணைந்து செயற்படக் கூடிய உளவுரணையும், செயற்றிறனையும் கொண்டிருந்தனர். 

கடுமையான பாதிப்புக்குள்ளாகி இயங்க முடியாதிருப்போருக்கும் நிச்சயமாக இன்னொருவரின் உதவி தேவைப்படுவோருக்கும் கூட அவர்கள் உரிய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  இதனால், வாழ்வை சுமையெனக் கருதும் உளத்தாக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டோரை அவர்கள் பாதுகாத்தனர்.

புலிகளின் காலத்தில் அத்தகைய தொழிற்பயிற்சிகளையும் கற்கைகளையும் நிறைவேற்றியோர், தற்போது தொழில்களைச் செய்யக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதன்மூலம் அவர்கள் தங்களின் வாழ்வை ஏதோ சமாளித்துக் கொள்ளலாம் என்ற அளவில் இருக்கின்றனர்.

ஆனால், அத்தகைய செயற்றிட்டங்கள் எதுவும் இன்றில்லை. போராளிகளாக இருந்தோருக்கு புனர்வாழ்வு நிலையங்களில் வரையறுக்கப்பட்ட அளவில் சில பயிற்சிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. என்றாலும் அவை போதாது. அவை ஏனைய எல்லாத்தரப்பினருக்கும் கிடைப்பதுமில்லை. 

ஆனால், முன்னரையும் விட இன்று பல திட்டங்கள் விசேடமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றன.  ஏனெனில், இறுதிப்போரின் போதே ஏராளமானோர் அதி யுச்சப் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். அதிலும் கடுமையான பாதிப்புகள்.

பாதிப்புக்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் பாதிப்புக்களின் கனதி குறைந்துவிடுவதில்லை.  மட்டுமல்ல பாதிக்கப்பட்டோருக்கு அந்தப் பேச்சுக்கள் எத்தகைய நன்மைகளையும் ஏற்படுத்தி விடுவதுமில்லை.  

ஆனால், இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதுதான் நடந்துகொண்டிரvanni-210411ுக்கிறது.  அதாவது, ‘வாய்ப் பேச்சு’ என்ற அளவில் பாதிக்கப்பட்டோரைப் பற்றி பேசும் சூழலே இன்று வலுத்துள்ளது. அது ஒரு நாகரீகமாகவும் அதுவே பெரிய மனிதாபிமானப் பணியாகவும் தேசியப் பங்களிப்பைப் போலவும் கொள்ளப்படுகிறது. அதாவது, வெறும் அனுதாபப் பேச்சு.  பாதிக்கப்பட்டவர்களோ அந்தப் பாதிப்புக்களில் இருந்து மீள முடியாத நிலையில் மேலும் மேலும் பாதிப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

வன்னியில் எந்தத் தெருவிலே எந்த வேளையில் நீங்கள் சென்றாலும் அங்கே கையில்லாத, அல்லது காலில்லாத அல்லது கண்களை இழந்த பலரை நீங்கள் சந்திக்காமல் செல்ல முடியாது.

அவர்கள் புழுதி நிரம்பிய தெருக்களிலும், இருள் நிரம்பிய வீடுகளிலும், காடும் புதருமாகவிருக்கும் ஊர்களிலும் தங்கள் ஒவ்வொரு நாள் பொழுதைக் கழிப்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரான்சைச்; சேர்ந்த ‘கன்டிக்கேப்’ போன்ற சில தொண்டர் அமைப்புக்களைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க எந்த அமைப்பும் எத்தகைய உதவிகளையும் எத்தகைய நலத்திட்டங்களையும் அங்கவீனர்களுக்காக மேற்கொள்ளவில்லை.

போரின் காரணமாக, எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் ஏற்பட்ட போர் அனர்த்தத்தினால் மிகச் சிறுவயதிலேயே (குழந்தைப் பராயத்திலேயே) உடல் உறுப்பை இழந்தோர் தங்களின் வாழ்க்கை முழுக்க துயர் தோய்ந்த நிலையில் வாழத்தான் வேண்டுமா?

இந்த நிலமை தொடர்பாக அண்மையில் சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றின் அதிகாhரிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தாங்கள் இத்தகைய பாதிப்புக்களைக் குறித்து கவனமெடுக்க முடியுமென்றும் அதற்கு சரியான புள்ளிவிபரங்கள் தேவையென்றும் அதைச் செயற்படுத்துவதற்கு அரசியல் தரப்பு அல்லது அரச நிர்வாகமே பொறுப்பெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்கள்.

தாம் தனித்து இத்தகைய புள்ளிவிபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்புடையவர்கள் இல்லையென்றும் அது நிர்வாக ரீதியாகவும், பணிரீதியாகவும் பல சிக்கல்களை ஏற்படுத்துமென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எனினும், இந்த நிலமை தங்களுக்கு மிகுந்த துயரத்தைத் தருவதாகவும் இதைத் தாம் புரிந்து கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.   மனமிருந்தாலும் அவர்களால் சில விடயங்களைச் செய்யமுடியாத நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

இந்த இடத்தில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி போன்ற பிரதான கட்சிகளுடன் ஏனைய தமிழ் அரசியலாளர்களும் இதுகுறித்து தீவிர கவனம் எடுக்கவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவது மட்டும் தமிழ் அரசியல் கட்சிகளின் பணியாகாது.  அதற்கப்பால் மக்களுக்கான மனிதநேயப் பணியாற்றுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

     உடுக்கை இழந்தவன் கைபோல் - ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

‘இங்கே உடுக்கை மட்டுமல்ல கையையே இழந்தவர்களுக்கு கைகொடுங்கள்.  கால்களை இழந்தவர்கள் தங்கள் வாழ்வில் பலம் பெறுவதற்கு ஆதாரக் கால்களை வழங்குங்கள்’ என்று மாற்றுவலுவுடையோரின் நிகழ்வு ஒன்றில் இரண்டு கால்களையும் இழந்த பரந்தனைச் சேர்ந்த நாகராசா  என்பவர் விடுத்த உருக்கமான கோரிக்கை எல்லோருக்கும் இந்தக் கட்டுiரையுடன் சமர்ப்பணம் இணைத்துச் சமர்ப்பணம் செய்யப்படுகிறது
.

கருத்துகள் இல்லை: