செவ்வாய், 4 அக்டோபர், 2011

தேமுதிக அலட்சியப்படுத்தி விட்டதாக கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு


இந்திய கம்யூனிஸ்டு தனித்து போட்டி: தேமுதிக
அலட்சியப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு
மதுரை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் அலட்சிய போக்குடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதுரை மாநகராட்சியில் 12 வார்டுகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல், வருகிற 17, 19 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.இதில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடப்போவதாக அறிவித்தன.
ஆனால், மதுரை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் வார்டு பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளனர்.

இது குறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு செயலாளர் எம்.என்.மயிலேறி நேற்று செய்தியாளர்களிடம்,
’’மதுரை மாநகாட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், தே.மு.தி.க. கட்சியும் பேச்சு தொடங்கின.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 17 வார்டுகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் மதுரை மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகளின் அலட்சியத்தால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் மதுரை மாநகராட்சியில் 12 வார்டுகளில் தனித்துப் போட்டியிட மதுரை மாவட்ட நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 2, 3, 4, 12, 17, 19, 41, 46, 54, 57, 68, 81 ஆகிய வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கதிர் அரிவாள் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.
மதுரை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கவும், மதுரையை தூய்மையான நகரமாக்கவும் எங்கள் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பாடுபடுவார்கள். மற்ற வார்டுகளில் மாநில தலைமை அறிவுரைப்படி யாரை ஆதரிப்பது என்பது முடிவு செய்யப்படும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் 19, 81, 68, 41, 54 ஆகிய வார்டுகளில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் இந்த வார்டுகளில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையேயும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
மதுரை தவிர, சிவகங்கை, திருப்பூர், விருதுநகர் ஆகிய பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்துப் போட்டியிடுகிறது’’ என்று கூறினார்.
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன்,
’’மாவட்ட அளவில் தே.மு.தி.க.வுடன் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டை செய்துள்ளனர்.

இதில் பல இடங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. அதுபோன்ற இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு தனித்து போட்டியிடுகிறது. அந்தந்த மாவட்டங்களில் இருந்து இப்போது தான் இதுபற்றிய தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் எவ்வளவு இடங்களில் தனித்து போட்டியிடுகிறோம் என்ற முழுவிவரமும் இன்னும் வரவில்லை’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: