சனி, 8 அக்டோபர், 2011

ராசாவின் பிரஷரை எகிறவைக்கும் Reliance அப்ரூவர்

புதுடில்லி, இந்தியா: திகார் சிறையில் இருக்கும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், சீக்கிரமாகவே ராசாவின் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் குழம்பிப் போயுள்ளது தி.மு.க. தரப்பு.
சமீப நாட்களாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் இடம்பெற்று வருவதால், ஆ.ராசா உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சில விஷயங்களைச் சொல்வது அவசியம் என ராசா மற்றும் கனிமொழியின் வக்கீல்கள் திட்டமிட்டு இருந்தனராம். உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும்போது ராசா, முக்கியமான சில விஷயங்களை இழுத்து விடுவதாக முடிவு செய்திருந்தார் என தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகின்றன.காங்கிரசுக்கு மேலும் நெருக்கடிகளை ராசாவின் வாதம் ஏற்படுத்தக்கூடும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததே. இந்நிலையில் அது தடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட மேலும் அழுத்தம் கொடுப்பதாக திட்டம் இருந்ததாம்.
ராசா தனது குரலில் கூற திட்டமிட்டிருந்த விஷயங்கள், காங்கிரஸ் கட்சியை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கலாம் என்ற தகவல், டில்லித் தலைமைக்கும் சென்றிருந்ததாம். நிச்சயமாக, அதை டில்லி விரும்பியிராது என்பதைக் கூறத் தேவையில்லை.
அடுத்த திங்கட்கிழமை (10ம் தேதி), சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வரும் அதே தினத்தில்தான் தானும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாதத்தை எடுத்துக் கூற வேண்டும் என்று ராசா மனு செய்திருந்தார். சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவால், அந்த வாய்ப்பு ராசாவுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இதில் ராசா தரப்பு அதிக ஆர்வம் காட்டுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. சி.பி.ஐ.யின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, அநேகர் கவனித்திராத  ‘ஒரு வரி’ விஷயமே அது. “ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகளில் ஒருவர் அப்ரூவராக மாற சாத்தியம் உள்ளது” என்பதே அந்த சிங்கிள் லைன்!
ஷ்பெக்ட்ரம் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பார்ட்டியாக, ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை இல்லை. ஆனால், இந்த ‘அப்ரூவராக மாறும் சாத்தியம்’, வழக்குக்கு புதிய தலைவலிகளை ஏற்படுத்தலாம் என்று ஒரு ஊகம் அடிபடுகின்றது. ராசா தரப்பு அதற்கு பதிலடி கொடுக்கவும் உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்த விரும்பியிருக்கலாம்.
எப்படியோ, ராசா நேரில் ஆஜராக விரும்பிய விரும்பிய 10ம் தேதி, அவர் இல்லாமலேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கப் போகின்றது. அன்று தெரிந்துவிடும் ராசாவின் பதட்டத்துக்கு அர்த்தம் உள்ளதா, இல்லையா என்பது!

கருத்துகள் இல்லை: