வியாழன், 6 அக்டோபர், 2011

திருமாவளவன்:எம்பியாவேன் என நினைத்து பார்த்ததில்லை: வேட்பாளர்களை ஊக்கப்படுத்திய திருமா


சென்னை எழும்பூரில்  (05.10.2011) விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

எப்போதும் இல்லாத இந்த உள்ளாடசித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே களம் இறங்கியுள்ளன. தேமுதிகவும்
கம்யூனிஸ்ட்டுகளும் கூட்டணி வைத்தன. அதுவும் சிக்கலில் முடிந்துவிட்டது. ஆனால் இஸ்லாமிய சகோதர அமைப்புகளும், விடுதலைச்சிறுத்தைகளும் கூட்டணி அமைத்து மக்கள் ஜனநாயக கூட்டணி என்ற அமைப்பு உருவாகி உள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் தான் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளோம். திராவிட கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்டோரையும், தலித்துக்களையும் ஒரு ஏணிப்படியாக பயன்படுத்தி வந்துள்ளன. இதுவரை ஓட்டுப் போட மட்டுமே நாம் பயன்பட்டு வந்துள்ளோம்.
இன்று மக்கள் முன் ஓட்டு கேட்க நாம் தயாராகி உள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகளின் ஒற்றுமை தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அடிப்படை தேவையாகி விட்டது.

இஸ்லாமியர்களும், தலித்துக்களும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் நாம் இணைந்தால், மத்தியில்
பிரதமராக ஒரு தலித்தோ, ஒரு இஸ்லாமியரோ தான் வரமுடியும். அதை எந்த சத்தியாலும் மாற்ற முடியாது. பாஜக, பிராமண சமூகத்தினர் போன்றவர்கள் எல்லாம் பிரதமர் பதவியை நினைத்து பார்க்க முடியாது. அதற்கு முதலில் தமிழ்நாட்டில் நாம் ஒன்றிணைவோம். அதை இந்திய அளவில் பின்பற்றுவோம்.

வேட்பாளர்கள் நம் கூட்டணி வெற்றி பெறுமா என்று நினைக்க வேண்டாம். நாம் ஒன்றிணைந்ததே வெற்றி பெற்றதாக அர்த்தம். மற்றவர்கள் பணம் கொடுக்கிறார்கள். பொருள் கொடுக்கிறார்கள். நாம் எதுவும் செய்யாமல், மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்களா, ஜெயிப்போமா என்று என்ன வேண்டாம். நீங்கள் உங்கள் வார்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து ஒருவருக்கு இரண்டு பிட் நோட்டீஸ் வீதம் கொடுத்து வாக்கு கேட்டாலே போதும். மற்றவர்களை பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நாம் தான் வெற்றி வேட்பாளர். நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற எண்ணம் எந்த நேரத்திலும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் ஜெயிப்பது உறுதி.

அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நிற்பதால் கட்டாயம் ஓட்டுகள் சிதறும். நம் கூட்டணி வேட்பாளர் தான் மேயர். இதை மாற்ற
முடியாது. இன்று முதல் உங்களுக்கு நவராத்திரி என்று வைத்துக்கொள்ளுங்கள். தேர்தல் அன்று தான் தசரா விழா. அதுவரை இரவு பகல் பாராமல் சென்று வாக்காளர்களை சந்தியுங்கள். வெற்றி நமக்கே.

சேரியில் பிறந்த நான், என்னுடைய குடும்ப சூழ்நிலைக்கும், பொருளாதார வசதிக்கும் எம்பியாகி நாடாளுமன்றத்திற்கு போவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான் பார்த்து வந்த அரசு வேலையில் கிடைத்த சம்பளத்தில் தான் தமிழ்நாடு முழுக்க கட்சியை வளர்க்க பாடுபட்டேன். ஐயா மூப்பனாரின் அறிவுரைப்படி விருப்பமில்லாமல் அந்த வேலையை வேண்டாம் என்று எழுதிகொடுத்துவிட்டு முழு மூச்சுடனும், நம்பிக்கையுடனும் முயற்சித்தேன். அதனால் தான் நான் இந்த நிலைமைக்கு வரமுடிந்தது. ஆகவே வேட்பாளர்களாகிய நீங்களும கடினமாக உழைத்து முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்றார்.

படங்கள்: அசோக்

கருத்துகள் இல்லை: