வெள்ளி, 7 அக்டோபர், 2011

கோஷ்டிப் பூசலில் குழம்பிய Delhi ஜன்பத் இல்லம்

பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சோனியா காந்தி ஆகிய நால்வருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம், இப்போது நாட்டுக்கே தெரிந்துவிட்டது. முதல் மூவருக்குள் யார் நண்பன்... யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வெட்டுக்குத்துகள் கமுக்கமாகவே நடந்துவந்தன. அது, இப்போது மீடியாக்களுக்கு முன்பு வெளிப்படையாகவே நடந்தது. 'எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!’ என்று பிரணாப், சிதம்பரம் இருவரும் சேர்ந்தே சொன்னாலும் 'நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன’ என்பதை அவர்கள் முகங்களே காட்டிக் கொடுத்தன. இத்தகைய அவமானம் இதுவரை எந்த ஆட்சிக்குமே நடந்ததில்லை!
ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் பதற்றத்துடன் டெல்லி திரும்புகிறார். உடல் நலமின்றிப் படுத்திருந்த சோனியா காந்தியை முதலில் ப.சிதம்பரம் சென்று சந்திக்கிறார். அடுத்து பிரணாப் முகர்ஜி போய்ப் பார்க்கிறார். பின்னர் கொல்கத்தா சென்ற பிரணாப் அவசரமாக டெல்லி திரும்பி மீண்டும் சோனியாவை சந்திக்கிறார். அப்போது நான்கு பக்கக் கடிதத்தை சோனியாவிடம் கொடுக்கிறார். 'நியூயார்க்கில் பிரதமரை சந்தித்தபோது அவரிடமும் இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டேன்’ என்கிறார் பிரணாப். இந்த சந்திப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் சோனியாவின் வீட்டுக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் செல்கிறார். இவரைத்தான் 'இந்தியாவின் வருங்காலப் பிரதமர்’ என்று டெல்லிப் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். இப்படி இந்தியாவின் அனைத்து தலைமைத் தலைகளும் சோனியாவை நோக்கி குவியக் காரணமாக நடந்தது, அந்த கோஷ்டி மோதல்!

இதை அம்பலப்படுத்தியது ஓர் அறிக்கை. மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் பி.ஜி.எஸ்.ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு ஓர் அறிக்கையைக் கொடுக்கிறார். அதில், '2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் விற்பனை செய்யலாம் என்று அப்போதைய நிதித் துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஊழலே நடந்திருக்காது!’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்கிறது அந்த அறிக்கை. கடந்த மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட அறிக்கை அது. இதைத் தனக்கான ஆதாரமாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார் சுப்பிரமணியன் சுவாமி. ''ப.சிதம்பரத்துக்கும் இந்த முறைகேட்டில் பங்கு இருக்கிறது என்று நான் சொல்லி வருகிறேன். ஆனால், சி.பி.ஐ. கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதோ ஆதாரம்!'' என்று கர்ஜிக்க ஆரம்பித்தார் சுவாமி. 'சி.பி.ஐ-யின் செயல்பாடுகளில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன’ என்றார் பிரசாந்த் பூஷண். மத்திய அரசு தரப்பு, பதில் சொல்ல முடியாமல் சுப்ரீம் கோர்ட்டில் திணறியது.

ப.சிதம்பரத்தின் மீது நிதி அமைச்சகம் குறை கூறும் அறிக்கையைத் தயார் செய்கிறது என்றால், அவர் மீது பிரணாப் முகர்ஜிக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா? ப.சி-யின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறாரா பிரணாப்? என்று பத்திரிகைகள் கொக்கி போட ஆரம்பித்தன. சிதம்பரத்தைச் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பிரணாப் இந்த அறிக்கையை லீக் செய்ததாகவும் தகவல் பரவியது. ''மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் இருந்து இறங்கினால், அந்த இடம் தனக்குத்தான் என்று பிரணாப் நினைத்தார். ஆனால், அவருக்குக் கொடுக்க மனம் இல்லாத சோனியா அதை ப.சிதம்பரத்துக்குத் தரப்போகிறார். அதைத் தடுப்பதற்கான தந்திரம்தான் இது!'' என்று டெல்லிவாலாக்கள் காரணமும் சொன்னார்கள். பிரணாப் அலுவலகத்தில் ரகசிய மைக் பொருத்தப்பட்டதாக முன்பே வெளியான சர்ச்சைக்கும் இது காரணமாகச் சொல்லப்பட்டது. அந்த மைக் விவகாரத்துக்குப் பிறகுதான் சிதம்பரம் மீது பிரணாப் கோபமானதாகவும் சொல்லப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் சுவாமி, பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரது வாதங்களுக்கும் பதில் சொல்ல அவகாசம் கேட்டார் மத்திய அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ். இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதிக்கு இந்த விசாரணை தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்த விவகாரத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே சோனியாவை ஒவ்வொருவராகப் போய் சந்தித்தார்கள்!

இதை தனிப்பட்ட பிரணாப், சிதம்பரம் மோதலாக இல்லாமல் இந்த ஆட்சிக்கு வரப் போகும் கெட்ட பெயராக சோனியா நினைத்தார். அதனால்தான் உடனடியாக ரியாக்ஷன் காட்டும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு மேலிடத்தில் இருந்து சிக்னல் தரப்பட்டது. ''இப்போது வெளியாகி இருக்கும் குறிப்புகளுக்கு உயிரே கிடையாது. கிரிமினல் இன்வால்மென்ட் இருப்பது பற்றி எதுவும் இதில் குறிப்பிடவில்லை. இதைக் குப்பையில்தான் போடவேண்டும்!'' என்றார். அப்போதே சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது!

பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் கேட்டார் சோனியா. நாலு பக்க அளவில் தயாரிக்கப்பட்ட அந்தக் கடிதத்தில், ''2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்பெக்ட்​ரம் விவகாரத்தில் ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்தன. எனவே, அரசு பிரதிநிதிகளின் பயன்பாட்டுக்காக ஒரு ஃபைல் தயாரிக்கப்பட்டது. அதுதான் பிரதமர் அலுவலகத்துக்கு மார்ச் 25-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஃபைலில் எழுதப்பட்டவை என்னுடைய கருத்துகளோ விளக்கங்களோ அல்ல...'' என்று பிரணாப் கூறி இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு பிரதமர் வீட்டுக்கு சோனியா காந்தி சென்று பேசினார். ''ஆட்சிக்கு மிகப் பெரிய கெட்ட பெயர் இதனால் வரப் போகிறது. எனவே, இந்தப் பிரச்னையை இத்தோடு முடித்துவிட வேண்டும்!'' என்று சோனியா கறாராகச் சொல்ல... பிரணாப், சிதம்பரம் இருவரும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவானது.

''மார்ச் 25-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில் இருக்கும் தகவல்கள், பொருள் விளக்கங்கள் என்னுடைய கருத்துகளுக்கு உட்பட்டதல்ல. 2007 - 2008-ல் ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 2003-ல் டிராய் கொடுத்துள்ள சிபாரிசின்படி எடுக்கப்பட்ட முடிவாகும்...'' என்று பிரணாப் அறிக்கை கொடுக்க சிதம்பரம் முகத்தில் புன்முறுவல் வந்தது. ''எங்களைப் பொறுத்த வரை இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது!'' என்று சிதம்பரம் சொன்னார்.

விவகாரம் முடிந்துவிட்டதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்!

- சரோஜ் கண்பத்

thanks vikatan+chandran

கருத்துகள் இல்லை: