வியாழன், 6 அக்டோபர், 2011

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். apple's steve jobs dead

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொழில் நுட்ப சாதன தயாரிப்பில் புகழ் பெற்றதாகும். 1976ல் தமது நண்பர் வோஸ்னியாக்குடன் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். உடல்நலக்குறைவுக் காரணமாக ஆப்பிள் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆகஸ்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் விலகினார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த 56 வயதான ஸ்டீவ் ஜாப்ஸ் கலிபோர்னியாவில் உயிரிழந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. 
ஆப்பிள் பளபளப்பாக வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாடிக்கொண்டிருந்தார். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளைக் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைத்திருந்ததுபோல் தன் அந்தரங்க வாழ்க்கையையும் அவர் ரகசியமாகத்தான் வைத்திருந்தார். தன்னைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வெளிவருவதைக்கூட அவர் விரும்பவில்லை.
ஒரு முறை, ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஒரு புத்தகத்தைஒரு பதிப்பம் வெளியிட்டது. வேண்டாம் என்று பலமுறை மறுத்தபிறகும் இந்தப் புத்தகம் வெளிவந்தது. அந்த பதிப்பகத்தாரின் புத்தகங்கள் பல ஆப்பிளின் இணையக் கடையில் நல்ல லாபத்துக்கு விற்பனையாகிக்கொண்டிருந்தன. ஆனாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் கொதித்துப்போனார். இணையம் மூலமாக விற்றுக்கொண்டிருந்த அந்தப் பதிப்பகத்தாரின் அத்தனை புத்தகங்களையும் இரவோடு இரவாக தூக்கி எறிய உத்தரவிட்டார். ஸ்டீவ் ஜாப்ஸின் கோபம், குணாதிசயம் அவ்வளவு விசித்திரமானது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். தன் தாயைப் பற்றியும் அவர் தத்து கொடுத்ததைப் பற்றியும் இவர் பின்னர் அறிந்துகொண்டார். எப்படி என்று தெரியவில்லை. தத்து கொடுக்கப்பட்டது மிகவும் நல்ல விஷயம் என கருதும் ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தன் நிஜ தாய் மீது பெரிதாக கோபமில்லை.  ஆனால் அவர் தந்தையைத் தெரிந்துகொண்ட பிறகும் அவருடன் உறவு கொண்டாடவில்லை.
ஸ்டீவ் ஜாப்சின் தங்கை மோனா சிம்ப்சன் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். பிரிந்து சென்ற தந்தையை வைத்து ஒரு நாவல், ஸ்டீவ் ஜாப்சை வைத்து ஒரு நாவல் என்று நிஜத்துக்கு மிக அருகே எழுதினார். அந்த நாவல்கள் சூப்பர் ஹிட் ஆயின. Regular Guy என்னும் நாவல் அச்சு அசல் ஸ்டீவ் ஜாப்ஸின் சுய சரிதம். கதாநாயகனின் குணாதிசயமும் என் குணாதிசயமும் சுமார் 25 சதவிகிதம் ஒத்துப்போகிறது என்று ஸ்டீவ் ஜாப்ஸ் மிகவும் பகிரங்கமாக ஓப்புக்கொண்டார். ஆனால் குறிப்பாக எந்த குணாதிசயம் என்று எல்லாம் சொல்லமாட்டேன் என்றார். தன்னைப் பற்றி மிகவும் பகிரங்கமாக எழுதியதற்காக தங்கையைக் கோபித்துக்கொண்டது உண்மையா என்னும் கேள்விக்கு பாசமலர் அண்ணன் விடையளிக்கவில்லை..
மணமாகாத பெற்றொருக்குப் பிறந்து, தாய் தந்தை யார் என அறியாமல் துன்புற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் தன் மகளையும் அவ்வாறு அலைக்கழித்ததை என்னவென்று சொல்வது? கல்லூரியில் இருந்த காலத்தில் [படித்த காலம் என்று எல்லாம் சொல்லி படிப்பை கேவலப்படுத்த வேண்டாம்] கிரிஸ் ஆன் என்ற பெண்ணுடன் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முதல் காதல். ஆனால் அந்த காதலிக்கு சக்களத்தியாக அதே சமயத்தில் இன்னொரு காதல், ஆப்பிள். ஆதலினால் முதல் காதலியின் கருவைக் கலைக்க ஸ்டீவ் ஜாப்ஸ் வற்புறுத்தினார். கிரிஸ் ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.
கோபித்துக்கொண்டு கிரிஸ் ஆன் சென்ற இடம் அவர்கள் பழகிய அதே ஆப்பிள் தோட்டங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் வசந்த காலத்தைக் கழித்த இடமாகக் கருதி தன் கம்பெனிக்கு பெயர் வைக்க காரணமாக இருந்த அதே ஆப்பிள் தோட்டம். அங்குதான் ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் பெண் லிசா பிறந்தார். அப்பொழுது ஆப்பிளுக்கு வயது இரண்டு. ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 23. அவர் பிறந்தபோது அவர் பெற்றோருக்கு இருந்த அதே வயது. ஸ்டீவ் ஜாப்ஸ் கிரிஸ் ஆனை மணம் செய்யவில்லை!
குழந்தை பிறந்த சில நாட்கள் கழித்து அங்கு ஆஜரான ஸ்டீவ் ஜாப்ஸ் குழந்தைக்கு லிஸா என பெயர் வைத்தார். காரியம் முடிந்தது என கிளம்பி விட்டார். குழந்தையை வளர்க்கக் காசு வேண்டும். இருபதாயிரம் தந்தால் சமாதானம், இல்லை என்றால் சண்டை என்று கிரிஸ் ஆன் சொன்னதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. இத்தனைக்கும் அது அவருக்கு பிசாத்துப் பணம். விளைவு? வீட்டுப் பிரச்னை நீதிமன்றம் சென்றது.
கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு எனக்கு ஆண்மையே இல்லை என்று அறிவித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இருபத்தெட்டு சதவீத அமெரிக்க ஆண் மக்கள்தொகையில் யார் வேண்டுமானாலும் இந்தக் குழந்தைக்குத் தந்தையாக இருக்கலாம் என்றார். மரபணு சோதனை நடந்தது. 94.97 சதவீதம் அவர்தான் தந்தை என்று ரிப்போர்ட் வந்தது. அப்போதும், செட்டில் பண்ணாமல் இழுத்தடித்தார்.
ஆப்பிள் பங்குச்சந்தையில் அறிமுகமாக ஆயுத்தமாகிக்கொண்டிருந்த வேளை அது. அதாவது அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரராக ஸ்டீவ் ஜாப்ஸ் மாறும் வேளை. ஆனால் அவர் குழந்தை அரசாங்க மானியத்தில் வளர்ந்துகொண்டிருந்தது. வெளியே விஷயம் தெரிந்தால் பிழைப்பு கெட்டுவிடும், மதிப்பு சரிந்துவிடும் என்று அஞ்சி பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் சமரசத்துக்கு ஒப்புக்கொண்டார். தன் மகளை அப்போதும் அவர் பார்க்கவில்லை. விரும்பவில்லை. என்றாலும், தன்  மேற்பார்வையில் உருவாகிக்கொண்டிருந்த கணிப்பொறிக்கு அவர் வைத்த பெயர், லிஸா.
சில சமயங்களில், கிரிஸ் ஆன் கூடுதல் பணம் கேட்டு அனுப்புவார். ஸ்டீவ் தரமாட்டார். லிஸாவுக்கு பத்து வயது இருக்கும் போது, அதுவும் அவளே ஓட்டிக்கொண்டு வந்த வண்டியில் ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டு வாசலில் வந்து நின்றதாகவும், ஸ்டீவ் பாய்ந்து வந்து கட்டியணைத்துக்கொண்டதாகவும் கதைகள் உள்ளன.  லிஸா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து இன்று எழுத்தாளராக இருப்பதெல்லாம் தற்காலக் கதை.
குழந்தை பிறந்து, சண்டையில் கிரிஸ் ஆன் பிரிந்த பின்பு ஸ்டீவ் ஜாப்ஸ் தனி மரம் ஆனார். ஆனால் பணக்காரத் தனி மரம். மன்மத மரம். கூடு கட்டிய பறவைகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை. காட்ஃபாதர் போன்ற படங்களில் நடித்து ஆஸ்கர் வாங்கிய டயான் கீய்ட்டன் ஒரு நாள் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, போனை வைக்கும் முன், எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது உங்கள் முழுப் பெயர் என்ன என்று கேட்டு அவரை அதிர வைத்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸுடன் சுற்றியவர்களில் மிக முக்கியமானவர், ஜோயன் பேய்ஜ் என்ற புகழ் பெற்ற பாடகி. ஒரு பெண்ணொடு உறவு கொண்டிருக்கிறேன் என்று அந்த காலத்திலேயே பேட்டி கொடுத்தவர். ஸ்டீவ் ஜாப்ஸுக்கு பிடித்த பாடகரான பாப் டைலனின் முன்னாள் காதலி இவர் என்பதால்தான் ஸ்டீவ் இவரோடு இணைந்திருந்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரைவிட பாடகிக்கு 15 வயது அதிகம் என்பதால் அவர் மூலம் வாரிசு இல்லாமல் போகலாம் என்று ஸ்டீவ் பயந்தார் என்று சொல்வார்கள்.
அப்போதுதான் ஸ்டீவ் ஜாப்ஸை காதல் தாக்கியது. கல்லூரி படிப்புக்கூட முடிக்காத ஸ்டீவ் ஜாப்ஸை கல்லூரிகளில் பேசக் கூப்பிடுவார்கள். அப்படி ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் மாணவர்கள் கூட்டத்தில் பேசச் சென்ற போது,  ஸ்டீவ் ஜாப்ஸ் காதல் வயப்பட்டார்.
கூட்டம் முடிந்தபிறகு அந்தப் பெண்ணிடம் தன் பிரத்தியேக தொலைப்பேசி எண்ணைக் கொடுத்தார். ஒரு முக்கியமான மீட்டிங்குக்கு கிளம்ப வேண்டியவர் சட்டென்று திரும்பினார். ‘லாரன் பவுல், டின்னருக்கு வருவாயா?’ அன்று வந்தவர் இன்றுவரை ஸ்டீவ் ஜாப்ஸுடன்தான் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
இப்படி அடிக்கடி டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்த காரணத்தால் லாரனுக்கு தலை சுற்றலும் வாந்தியும் வர ஆரம்பித்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் திருமணத்துக்குச் சம்மதித்தார். திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்களை அவர் கூப்பிடவில்லை. தேவைப்பட்டபோது மட்டுமே அவர் மீடியாவை பயன்படுத்திக்கொண்டார்.  மிக எளிமையாக நடந்து முடிந்தது திருமணம். பௌத்த ஜென் குரு கொபின் ஸைனொ என்பவர் தலைமையில் ஊதுபத்தி வாசனையில் மடாலய மணிகள் முழங்க யோஸ்மைட் தேசியப் பூங்காவில் திருமண விழா நடைபெற்றது. ஸ்டீவைவிட ஒன்பது வயது குறைந்த லாரன் பவுல், மேக் விளம்பரத்தில் வரும் மாடல் பெண்ணைப் போல் இருந்ததை என்னவென்று சொல்வது!
மாளிகையைப் போல வீடு இருந்தபோதும், தன் கல்லூரிக்குப் பக்கத்தில் ஒரு சிறிய வீடு அமைத்துக்கொள்ளலாம் என்றார் லாரன். ஸ்டீவ் ஒப்புக்கொண்டார்.
ஸ்டான்போர்டில் படிக்கும் உங்கள் மகளைப் பார்க்கவரும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஸ்டீவ் கேட்டுக்கொண்டதால் அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் ஸ்டீவின் பழைய மாளிகையைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். ஸ்டீவ் சுத்த சைவம் என்பதால் மாளிகையில் தங்கிய கிளிண்டனுக்கும் சைவ உணவே அளிக்கப்பட்டது.
முதன் முதலாக தான் காலடி எடுத்து வைத்த கல்லூரியின் நினைவாக முதல் குழந்தைக்கு ரீட் (Reed) என்று பெயர் வைத்தார்கள் ஸ்டீவ் தம்பதியினர். ஸ்டீவ் ரொம்பவும் நல்லவராகிவிட்டார் என்று பலர் கூற ஆரம்பித்தார்கள். ரீடுக்குப் பிறகு இரு குழந்தைகள், லிஸா என்று வீடு குழந்தைகளால் நிரம்பியிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஸ்டீவ் நல்லவராக மாறிய அதே சமயம், அவர் உடல்நிலை மோசமடைய ஆரம்பித்தது.
(தொடரும்)
- அப்பு www.tamilpaper.com

கருத்துகள் இல்லை: