செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஏன் தி.மு.க.வுக்கே ஆதரவு! கி.விரமணி அறிக்கை!


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
12 9 2011 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படி, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது உரிய நேரத்தில் அறிவிக்க கழகத் தலைவர் அவர்களின் முடிவுக்கு விடுவது என்பதற்கேற்ப, நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திராவிடர் கழகம் கீழ்க்கண்ட வகையில் முடிவு எடுத்துச் செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் தேவையில்லை என்று திராவிடர் கழகம் கருதினாலும், நடைமுறையில் அதற்கு மாறான சூழ்நிலையே தற்போது இருந்து வருகிறது என்ற நிலையில், நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்களுக்கு வழிகாட்டும் கடமை திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது.
சமுதாயப் பார்வையே முதன்மையானது
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் சமுதாயப் பார்வையைத்தான் முதன்மையாகக் கொண்டதாகும்.
அந்த நிலையில், இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் அ.இ.அ.தி.மு.க. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வகுத்த அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான திசையில் பயணிக்கிறது என்பது கசப்பான உண்மையாகும்.
ஆட்சித் தொடக்கத்திலேயே சமச்சீர் கல்விக்கு எதிரான முடிவை எடுத்து, தேவையில்லாது பள்ளி நாள்களை வீண் செய்ததன் மூலம் மாணவர்களின் கல்விப் பாதையில் பெரும் முட்டுக்கட்டையைப் போட்டது.
பார்ப்பனீயத்துக்குத் துணை!

இரண்டாவதாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வழிகாட்டிய தமிழ் உணர்வு, தமிழர் உணர்வு, தமிழர் பண்பாட்டு உணர்வுகளுக்கு முற்றிலும் விரோதமாக தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற தி.மு.க. ஆட்சியில் கலைஞர் தலைமையிலான ஆட்சியின் சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கின்ற  புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, பார்ப்பனீயத்துக்குத் துணை போகக் கூடியது என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டுவிட்டது.
ராமன் பாலமும் அ.இ.அ.தி.மு.க.வும்
மூன்றாவதாக, தமிழ்நாட்டு மக்கள் மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ; ஆரிய கற்பனைப் பாத்திரமான ராமன் பெயரால் ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதன் மூலம் இந்த ஆட்சி தமிழர் உணர்விற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிரானது என்பதையே காட்டிக் கொண்டுவிட்டது.

நான்காவதாக குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முளிலீம் மக்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்ததற்குக் காரணமாக இருந்தவரும், இந்து ராஜ்ஜியத்தை இந்தியாவில் அமைக்கவேண்டும் என்ற வெறிபிடித்துத் துள்ளுகிற பா.ஜ.க.வின் அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் என்று கருதப்படக் கூடியவருமான நரேந்திர மோடி மேற்கொண்ட உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து, அந்த உண்ணாவிரதத்தில் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளச் செய்ததன் மூலம் தனது இந்துத்துவா மனப்பான்மையை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதல் அமைச்சருமான செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் எதற்கெடுத்தாலும் முந்தைய தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவைகளை தலைகீழாக மாற்றுவதில் முனைப்புக் காட்டி வருவது ஒரு ஆட்சி என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சி என்கிற, உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் கூட அண்மையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஜனநாயகக் கோட்பாட்டுக்கும் விரோதமாகும். மேலும் அரசியல் பழிவாங்கும் போக்கு இவ்வாட்சியில் மிகுந்து காணப்படுகிறது. உண்மையில் தவறு செய்த எவருக்கும் எக்கட்சியினருக்கும் வக்காலத்து வாங்குவது நமது பணியல்ல. குற்றமிழைத்தோரில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பாராமல் நடவடிக்கை வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்து

ஆட்சி திருந்திடவும் . .
இந்த நிலையில், எந்த வகையிலும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் திராவிட இயக்கப் பார்வை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வகுத்துச் சென்ற கொள்கை இவற்றிற்கு முற்றிலும் விரோதமான சிந்தனை கொள்கையே ஆட்சியாக   கட்சியாக அ.இ.அ.தி.மு.க. வும் அதன் தலைமையும் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்பட்டு வருவதால், அதற்கு எதிரான நிலையை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் கடந்த 5 மாதகால அ.தி.மு.க. ஆட்சியின் மீதான அதிருப்தியைத் தெரிவிப்பதன் மூலம் திருந்திச் செயல்படும் வாய்ப்பும் ஆட்சிக்கு ஏற்படும். தமிழக ஆட்சியாளர் தங்கள் போக்கையும் மாற்றிக் கொள்ள, அவர்களையும் மறு சிந்தனைக்கு ஆளாக்கவும் நமது முடிவு உதவுவதாகவே அமையவேண்டும்.
தி.மு.க.வுக்கே ஆதரவு!
நமது கொள்கைகள், கோட்பாடுகள் சமுதாயச் சிந்தனைகள் இவற்றில் தி.மு.க. நமக்கு மிக அருகில் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருச்சி மேற்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கும் இக்காரணங்கள் பொருந்தக்கூடியவையே என்கிற முறையில் தி.மு.க.வுக்கே திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலிலும் ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.
திமுக வெற்றிக்குப் பாடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: