திங்கள், 27 செப்டம்பர், 2010

ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகாவுக்கு எதிரான சதித்திட்டங்களை

தேசத்தைப் பாதுகாத்த இராணுவத்தளபதிக்கு துரோகமிழைக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகாவுக்கு எதிரான சதித்திட்டங்களை அம்பலப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.யுத்த வெற்றிக்கு அரசாங்கமோ, ஜனாதிபதியோ துளியளவு உரிமை பாராட்ட முடியாதெனவும் படையினரின் உறுதியான நடவடிக்கையே வெற்றிக்கான காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை காப்பாற்றும் வேலைத்திட்டத்தை களனியில் ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளர் பெவன்பெரேராவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வைபவத்தில் களனி, பியகம, மஹர, வத்தளை ஆகிய தொகுதிகளிலிருந்து பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது;
ஜனாதிபதித் தேர்தலில்எதிர்த்துப் போட்டியிட்ட ஒரே காரணத்துக்காக ஜெனரல் பொன்சேகா மீது பழிதீர்க்கும் வகையில் அவருக்கு எதிராக சதித்திட்டம் வகுக்கப்பட்டது. இந்த சதித்திட்டத்தின் பின்னணியிலிருப்பவர்கள் உட்பட சதித்திட்டம் தொடர்பான பல இரகசியத் தகவல்கள் தற்போது எமக்குக் கிடைத்த வண்ணமுள்ளன. அவற்றை மிக விரைவில் நாம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.
சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டவிரோதமானதாகும். இந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டாமென நான் ஜனாதிபதியிடம் கேட்டிருக்கின்றேன். நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து காப்பாற்றிய தளபதிக்கு துரோகமிழைக்கக்கூடாது. அதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது தொடர்பில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவிருக்கின்றேன். சரத் பொன்சேகா மீது பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்துவேன்.
இதனையும் மீறி ஜனாதிபதி செயற்பட முனைந்தால் சரத் பொன்சேகாவை காப்பாற்றுவதற்காகப் பலமுனைப் போராட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றோம்.இராணுவ நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இரண்டு சாட்சியங்களில் ஒன்று பொய்யானதாகும். மற்றது குற்றச்சாட்டுக்கு எரானதாகவே அமைந்துள்ள்து. மகியங்கனை பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன அளித்த சாட்சியம் உண்மைக்குப் புறம்பானதாகும். அதனை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் எம்மிடம் இருக்கின்றன.
அதேபோன்று சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனதிலகரட்ண தொடர்பில் இராணுவ நீதிமன்றம் கம்பனிகள் பதிவாளர் நாயகத்தின் சாட்சியத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. அவரது சாட்சியத்தில் தனுனதிலகரட்ண என்ற பெயரில் தமது திணைக்களத்தில் எந்தவிதமான ஆவணமும் கிடையாது எனத் தெரிவித்திருக்கின்றார். ஹைகோப் தொடர்பில் எந்தவித ஆவணமும் கம்பனிகள் பதிவாளர் அலுவலகத்தில் கிடையாதெனவும் அந்த சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை வைத்தே இராணுவ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திட்டமிட்ட துரோகச் செயலாகும்.
அரச ஊடகங்கள் உட்பட மற்றும் சில தனியார் ஊடகங்கள் என் மீது சேறுபூசுவதற்கு எடுக்கும் முயற்சிகளில் ஒரு சிறிதளவையேனும் சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேச முடியாதா எனக் கேட்க விரும்புகின்றேன்.சரத் பொன்சேகாவுக்காகப் பேசிய பலரும் அரசியல் இயக்கங்களும் தேசப்பற்றுள்ள இயக்கங்களும் இப்போது வாய்மூடியுள்ளனர். ஆனால்,எம்மால் அவ்வாறு செயற்பட முடியாது. அவருக்கு நீதி கிட்டும்வரை போராடுவோம். மக்களுக்கு உண்மைகளைக் கூறி எம்மோடு அணிதிரட்டிக் கொள்வோம். சரத் பொன்சேகாவை மீட்டெடுக்கும் விடயத்தில் எந்தச் சவாலையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராகவேயுள்ளேன்.
முதலாவது இராணுவ நீதிமன்றம் அவரது பட்டங்களையும் பதவிப் பெயரையும் ஓய்வூதியத்தையும் பறித்து சாதாரண பிரஜையாக்கிவிட்ட பின்னர் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்குவது சட்டத்துக்கு முரண்பட்ட விடயமாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: