சனி, 2 அக்டோபர், 2010

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர நிபந்தனையா?

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற வேண்டும் எனில், அதற்கு முன்னதாக காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை, அமெரிக்கா மறுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் கிரவ்லி கூறியதாவது:ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர இடம் பெற வேண்டுமெனில், அதற்கு முன்னதாக அந்நாடு காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த இரண்டு விவகாரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக பேசித் தீர்க்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா., அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென இந்தியாவும், அமெரிக்காவும், மற்ற பல நாடுகளும் விரும்புகின்றன. இது தொடர்பாக நாடுகள் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பது தொடர்பான பிரச்னை, இந்திய அரசுடன் தற்போது அமெரிக்க அரசு நடத்தி வரும் பேச்சு வார்த்தையிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுமா என, நான் சொல்ல முடியாது. இவ்வாறு கிரவ்லி கூறினார்.

முன்னதாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நிருபர்களிடம் பேசுகையில், ""இந்தியாவை பொறுத்தமட்டில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் விவகாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் சாதகமான முடிவு வரும் என நம்புகிறோம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: