திங்கள், 27 செப்டம்பர், 2010

காலங்கடந்து அரசுடன் இணைந்ததால் பியசேனவுக்கு முழுப் பலன் கிட்டவில்லை : முரளிதரன்

பியசேன காலங் கடந்து அரசாங்கத்துடன் இணைந்தமையால் முழுமையான பலன்களை அவரால் அனுபவிக்க முடியவில்லை. ஆளும் கட்சியில் ஒரு பிரதிநிதியை நீங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்திருந்தால் பல அபிவிருத்திகளை விரைவாகச் செய்யக் கூடியதாக இருந்திருக்கும்.

அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் இல்லை. ஆரம்பத்திலேயே அரசாங்கத்தில் அவர் சேர்ந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்" என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக நேற்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இதன்போது திருக்கோவில் விநாயகபுரத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அவருக்குப் பாரிய வரவேற்பளித்தனர். விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆலய வழிபாடுகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைக் காரியாலயத்தை அவர் திறந்து வைத்தார்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், "உங்கள் வாக்குபலத்தை வீணடிக்கும் செயலை கடந்த தேர்தலில் நீங்கள் செய்திருந்தீர்கள். உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உங்களுடன் இருப்பவர்களுக்கும் சேவை செய்யக் கூடியவர்களுக்கும் வாக்களியுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரை அனுப்புவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வேலைகள் மட்டக்களப்பு, திருமலை, வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து வசதிகளையும் விரைவில் மேற்கொள்வுள்ளேன்.

எதிர்வரும் நவம்பருக்குப் பின்னரே வீடுகள் அமைப்பது போன்ற அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதற்கு முன்னதாக உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தொழில்வாய்ப்புகள், கல்வி நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

யுத்தத்தால் கடந்த 30 வருடங்களாக நாம் பட்ட இன்னல்கள் கொஞ்சங்கொஞ்சமாக களையப்பட்டு வருகின்றன. இப்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது, அதன் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

வீதி அபிவிருத்தி மற்றும் அடிப்படைக் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்துத் தனிப்பட்ட ஒவ்வொருவரையும், மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபடவுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அமைச்சிடம் இருக்கிறது. அதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கான ஆரம்பமாகவே உங்களை இன்று சந்திக்கிறோம். நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் விட்ட தவறுகளை எதிர்காலத்தில் விட்டுவிடாது நமக்காக உழைப்பவர்களை அரசியலுக்குக் கொண்டுவாருங்கள். அதன் மூலம் தான் எமது பிரதேசத்தைப் பொருளாதார முக்கியத்துவம் மிக்கதாக மாற்றியமைக்க முடியும்" என்றார்.

கருத்துகள் இல்லை: