வியாழன், 30 செப்டம்பர், 2010

தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மறுத்தால் அமெரிக்க தரைப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும்

பாகிஸ்தானில் உள்ள பழங்குடி இனப் பகுதியில் தஞ்சம் புகுந்து இருக்கும் வெளிநாட்டு தீவிரவாதிகள் முகாம்களை தகர்க்க நீங்கள் மறுத்தால், எங்கள் தரைப்படை உங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் என்று அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் டேவிட் எச். பெட்ராயஸ் பாகிஸ்தானை எச்சரித்தார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள நேட்டோ இராணுவத்தின் தளபதியான அமெரிக்க இராணுவ ஜெனரல் பெட்ராயஸ் நிருபர்களிடம் கூறியதாவது,
பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியானது அல்கைதா, தலிபான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் தயங்குகிறது. இது அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தீவிரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தானின் பங்கு இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியான வடக்கு வசீரிஸ்தானில் தீவிரவாதிகளின் கட்டமைப்பை தகர்க்க பாகிஸ்தான் மறுத்தால், அமெரிக்க தரைப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும். தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கம் தாக்குதல் நடத்தாமல் இருப்பதால்தான், அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 நாட்களில் 20 ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஏவுகணைத் தாக்குதல்கள் தவிர, மற்ற வழிகளிலும் போர் விரிவு அடைந்து வருகிறது. அமெரிக்க ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 50 தலிபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக தனி நடவடிக்கை கட்டளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தாக்குதலுக்கான திட்டத்தை வரையறுத்து வருகிறார்கள். இவற்றுக்கு ஒபாமாவின் ஒப்புதல் பெறப்பட இருக்கிறது.
இவ்வாறு தளபதி பெட்ராயஸ் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் 150க்கும் மேற்பட்ட முகாம்களில் தாக்குதல் நடத்தி அவற்றை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: