வியாழன், 30 செப்டம்பர், 2010

முன்னாள் இராணுவத் தளபதிக்கு 30 மாதகால கடூளிய சிறைத்தண்டனைக்கு ஜனாதிபதி அனுமதி.


நாட்டுமக்களுக்கு உண்மை முகத்தைகாட்டிய ராஜபக்சவிற்கு நன்றி என்கின்றார் அனோமா.
முன்னாள் இராணுவத் தளபதி இராணுவ கேள்விப்பத்திரக் குழுமத்தில் இருந்தபோது தவறு செய்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இரண்டாவது இராணுவக் குற்றவியல் நீதிமன்று அவருக்கு 3 வருட சிறைத்தண்டனையை பரிந்துரை செய்திருந்தது. ஐ.நா வின்அமர்வுகளில் கலந்து கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி பரிந்துரையின் பிரகாரம் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 வருட கடூளிய சிறைத்தண்டனையை நிறைவேற்றுமாறு ஆணையிட்டுள்ளார்:

இத்தண்டனை தொடர்பாக கறுப்பு சேலை அணிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா,
இலங்கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், இத்தீர்ப்பிற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு போலிமுகத்தினை ஜனாதிபதி காட்டிக்கொண்டிருந்ததாகவும், இத்தீர்ப்பினூடாக மக்களுக்கு தனது உண்மை முகத்தினை வெளிப்படுத்தியமைக்காக நன்றி எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கை இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் ஆட்கொள்வதாகவும், அரச உயர்மட்ட அதிகாரிகளின் நூல் பொம்மைகளாக இராணுவ அதிகாரிகள் மாறியுள்ளதாகவும் அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இத்தீர்ப்பினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை. உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டு தீர்ப்பு தொடர்பாக கடும் கண்டனத்தை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் மாநாடொன்றில் இவ்விடயம் தொடர்பாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதற்கு எதிரான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி
மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பரி போகக்கூடும் என சந்தேகங்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. இது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடலாம், என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இராணுவச் சட்டத்தில் எந்த இடத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லையென ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுக் குறிப்பிட்டார். அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அகற்ற சிவில் நீதிமன்றினால் மாத்திரமே முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். எனினும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காவிடின் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இருந்த போதிலும் பாராளுமன்ற செயலாளர் தங்களுடைய கடிதத்தை ஏற்றுக் கொள்வாரா? இல்லையா? என்பது குறித்து தங்களுக்கும் தெரியாதென அவர் கூறியுள்ளார்.

எனினும் இராணுவ சட்டத்தின் 79ஆவது சரத்தின்படி தீர்ப்பை பரிசீலிக்குமாறுக் கோர முடியுமெனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அதன் முடிவினை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் எதிர்பார்ப்பதாகவும் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: