வெள்ளி, 1 அக்டோபர், 2010

இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்

திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸ் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ந் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. சிசிக்சைக்காக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் நினைவிழந்து, கோமா'வில் மூழ்கினார். இதையடுத்து சந்திரபோசை மேல் சிகிச்சைக்காக சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சந்திரபோஸ் உடல்நிலை குறித்து அவரது மகன் வினோத் (28.09.2010) கூறுகையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையாகல் எனது அப்பா ஆபத்தான கட்டத்தை தாண்டினார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதால் நலமாக உள்ளார் என தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை சந்திரபோஸ் காலமானார். சென்னை மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த சந்திரபோஸ் உடலுக்கு தமிழ் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வி.சி.குகநாதன் டைரக்டு செய்த மதுரகீதம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்திரபோஸ். மச்சான பாத்தீங்களா, மாங்குடி மைனர், முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: