வெள்ளி, 1 அக்டோபர், 2010

சிவாஜியின் கடைசி நாட்களை நம்மிடம் கண்ணீர்மல்க

அக்-1-ம்-தேதி நடிகர் திலகம் சிவாஜியின் 82-வது பிறந்தநாள்
வருகிறது. சிவாஜி சினிமாவைப் போலவே நிஜவாழ்க்கையிலும் சிங்கம் மாதிரி கம்பீரத்தோடு வாழ்ந்தவர். எல்லோரும் அவரை
பார்க்கலாம் ரசிக்கலாம்.. ஆனால் அன்னியோன்யமாக அவர் பழகியது சிலரிடம்
மட்டுமே. கடந்த 40-ஆண்டுகளுக்கு மேலாக செவாலியேயின் நெருங்கிய நண்பராக
இருந்தவர் வி.என்.சிதம்பரம். "வாய்யா சீனா தானா..." என்று வாஞ்சையுடன்
அழைத்து தன்னுடைய பெட்ரூம்வரை வரக்கூடிய உரிமையை சிதம்பரத்துக்கு வழங்கி
இருந்தார் சிவாஜி. நடிகர் திலகம் மரணத்தை தழுவும் முன்பு மாலையில் அப்பலோ
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சிவாஜியிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டு
இருந்தார், சிதம்பரம். சிவாஜியின் கடைசி நாட்களை நம்மிடம் கண்ணீர்மல்க
பகிர்கிறார்.
" ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிப் பெரியவர் தாம்பரம் தாண்டி நடந்து
போயிருக்கார். அப்போது அங்கு ஒட்டப்பப்படிருந்த போஸ்டரை எதேச்சையா
பார்த்ததும் பெரியவாளுக்கு பயங்கர கோபம். தன்னோட உதவியாளர்களை கூப்பிட்டு
"எனக்கு விளம்பரம் பண்றது பிடிக்கதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே
அப்புறம் எதுக்கு என்னோட படத்தை போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கேள்..."
என்று கடுமையாக திட்டியிருக்கார். அப்போது "அந்த போஸ்டர்ல இருக்கறது
நீங்க இல்லை... சினிமா நடிகர் சிவாஜி 'திருவருட் செல்வர்' படத்துல
சாட்சாத் உங்களை மாதிரியே மேக்கப் போட்டுண்டு நடிச்சார். அதைத்தான் நீங்க
போஸ்டராக பார்த்து இருக்கேள்..." என்று சொல்ல... திகைத்துப்போன
பெரியவாள், 'நேக்கு சிவாஜியை பார்க்கணும்போல் இருக்கறது அவரை மடத்துக்கு
அழைச்சுண்டு வாங்கோ...' என்று தனது விருப்பத்தை தெரிவிச்சார். பெரியவாளை
தரிசிக்க எத்தைனையோ பேர் காத்துண்டு கிடந்தப்போ சிவாஜியை பார்க்க
ஆசைப்பட்டது எவ்ளோ பெரிய்ய புண்ணியம். பெரியவாள் கேட்டுக் கொண்டபடி
காஞ்சீபுரம் போய் மடத்துல தங்கி பெரியவாகிட்டே ரொம்பநேரம் மனசுவிட்டு
பேசிட்டு வந்தார், சிவாஜி.
சிங்கப்பூரில் இதயத்தில் பேஸ்மேக் கருவி வைத்தபிறகு பெரும்பாலும்
விமானத்தில் செல்வதை தவிர்த்து விடுவார், சிவாஜி. அங்கே மெடல்டிடெக்டர்
சோதனையின்போது பேஸ்மேக் கருவியால் உபாதை ஏற்படுமென்று செல்லமாட்டார்.
அவசியமாக போகின்ற சூழ்நிலை ஏற்பட்டால் மெடல்டிடெக் பாதை வழியே செல்லாமல்ன்னுடைய ஐடி கார்டை காண்பித்து தனிவழியில் சென்று பயணம் செய்வார்.
கடைசிக் காலத்தில் அடிக்கடி அப்போலோ ஆஸ்பத்திரிக்கு போய் சிகிச்சை
எடுத்துக் கொண்டார். ஒருதடவை சோதித்த டாக்டர் உடம்பு மோசமாக இருக்கிறது
அதனால் கவனமாக இருக்கும்படி எச்சரித்தார். டாக்டர் சொன்னதுபற்றி அறையில்
அமர்ந்து சிவாஜியோடு பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது ராம்குமாருக்கு
பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்விட்டு யூனிபார்மோடு சிவாஜி
அறைக்குள் வந்தது. தாத்தா என்று செல்லமாக ஒடிவந்த குழந்தைகளின் மூக்கில்
வழிந்த சளியை தன்தோளில் கிடந்த துண்டை எடுத்து பாசத்தோடு துடைத்து
விட்டார். இரண்டு பேரில் ஒருவன் "தாத்தா நேத்திக்கு நீ நடிச்ச 'பாசமலர்'
படம் பார்த்தேன். அந்தபடத்துல கடைசியில "நீ உன்னோட தங்கச்சிக்கிட்டே
'கைவீசம்மா கைவீசு... கடைக்கு போயிடலாம் கைவீசு... மிட்டாய் திங்கலாம்
கைவீசு'ன்னு பாடிக்கிட்டே செத்துப்போயி சாமிக்கிட்டே சேர்ந்துடுவியியே.
அப்புறமா எப்போ தாத்தா நம்ம வீட்டுக்கு வந்தே..." என்று அப்பாவித்தனமாய்
கேட்டான். அவன் சொன்னதைக் கேட்டு கதறி அழுத சிவாஜி, " யோவ் சீனா தானா
இந்த மழலைச் செல்வங்களை விட்டுட்டு போயிடுவேன் போலிருக்கேய்யா... இனிமே
எந்த ஜென்மத்துலய்யா இந்த செல்லங்களை பார்க்க போறேன்... என்று வெடித்து
தேம்பி தேம்பி அழுதார், சிவாஜி. அவரை சமாதானபடுத்த முடியாமல்
தடுமாறினேன். உலகில் எத்தனையோ ரசிகர்களை சிவாஜி தன்னுடைய பிரமாதமான
நடிப்பால் அழவைத்து இருக்கிறார். அப்படிப்பட்ட கம்பீரமான சிவாஜியையே
ராம்குமாரின் மகன் அழவைத்த சம்பவம் மறக்க முடியாத துயரம்.
சிவாஜியோட காரை முன்னாடி முருகன் ட்ரைவ் செய்தார் அதன்பின்னர் கடைசிக்
காலத்தில் சிவா கார் ஒட்டினார். வழக்கமாக வீட்டைவிட்டு புறப்படும்போது
காரில்ஏறி விருட்டென்று கிளம்பி விடுவார். கடைசியாக அப்பல்லோ ஆஸ்பத்திரி
போகும்போது காரில்ஏறி அமராமல் நீ...ண்டநேரம் பெருமூச்சோடு அன்னை
இல்லத்தையே வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தாராம் அதன்பின்னர் கண்கள்
கலங்கியபடி காரில் ஏறினார் என்று சிவா சொன்னபோது கண்னீரை அடக்க
முடியவில்லை.
இறந்த பிறகும்கூட கண்ணாடி பெட்டிக்குள் கம்பீரமாய் கண்மூடி சிவாஜி
கிடப்பதைப் பார்த்து, ஒரு பெரிய்ய மனிதர் சுவற்றில் சாய்ந்தபடி தலையில்
அடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார். அவரைப் பார்த்து நான்
அதிர்ந்து போனேன். இறப்பதற்கு சிலநாட்கள் முன்பு அந்த பெரிய மனிதரை
சிவாஜி என்னிடம் அறிமுகபடுத்தினார், "யோவ் சீனா தானா இவர் பேரூ கரந்தை
சண்முகவடிவேலு. ஒரு காலத்துல நானும், மூனா கானாவும் (கலைஞர் கருணாநிதி)
சாப்பாட்டுக்கு வழியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம் அப்போ பசியால தவிச்ச
எங்களுக்கு சோறுபோட்ட புண்ணியவான் இவர்தான்." என்று தழுதழுத்தபடி
கண்ணீர்மல்க சிவாஜி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

கருத்துகள் இல்லை: