சனி, 2 அக்டோபர், 2010

யாழ்ப்பாணம் இறுதியில் மறுபடியும் வெளிஉலகத்துடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால் ஆளுகையின்

யாழ்ப்பாணம் இறுதியில் மறுபடியும் வெளிஉலகத்துடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால் ஆளுகையின் கீழான வாழ்க்கையில் அதன் சொந்த அழுத்தங்கள் உள்ளன.
- (ஆக்கம்: றொஸ் ரியூட்டல்)
30 வருட போரின் பின்பு ஸ்ரீலங்காவின் தமிழ் சமூகம் இறுதியாக மீண்டும் வெளி உலகத்துடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால் ஆளுகையின் கீழான வாழ்க்கையானது தன் சொந்த அழுத்தங்களைக் கொண்டதாக இருக்கிறது. – மீண்டும் ஒரு போராட்டத்திற்கு எப்போதும் சாத்தியம் உள்ளது.
ஒரு காலத்தில் சுதந்திர தமிழ் அரசின் எதிர்காலத் தலை நகரமாகக் கருதப்பட்ட வடபகுதி யாழப்பாணத்தில், பிந்திய ஒரு கோடை நாளில் டசன் கணக்கான உழவு யந்திரங்கள் ஒரு இந்துக் கோவிலின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாகனத்திலும் மேல் நோக்கி மரப் பலகைகள் அதில் இளைஞர்கள் தங்கள் முதுகினதும் கால்களினதும் தசைகளில் பெரிய உலோகக் கொழுக்கிகளால் குத்தி மாட்டப்பட்டு சமாந்தரமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். எண்ணற்ற சனக் கூட்டம் அதைச் சுற்றி நின்று பார்த்தபடி இந்து தேவதையான துர்க்கைக்கு காணிக்கைகள் செலுத்திக் கொணடிருந்தார்கள். அது சாதாரண ஒரு சமயச் சடங்கு, அங்குள்ள தெய்வத்துக்கு வேண்டிச் செய்யப்படும் ஒருவித தவம். சுமார் 3 தசாப்தங்களாகக்  தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் மே 2009 ல் முடிவுறும் வரை பெரிய அளவில் காணக் கிடைக்காத ஒரு காட்சி.
ஒரு வருடம் கடந்து விட்ட பின்பு, சாதாரண வாழ்க்கையின் லயம் மெல்லத் திரும்பி வருகிறது. இரவு நேரங்களில் அமல் படுத்தப் பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இப்போது நீக்கப் பட்டு விட்டது. ஊர்ச் சந்தைகளில் சுறு சுறுப்பாக வியாபாரம் நடைபெறுகிறது. வீதிகளில் உழவுயந்திரங்கள், உந்துருளிகள், பேரூந்துகள், பாதசாரிகள், ஏன் இடந்தேடி அங்கிங்காக ஓடும் கால்நடைகள் என பரபரப்பான போக்குவரத்துகள். குடியிருப்பாளர்கள் முன் ஜாக்கிரதையுடன் கூடிய நன்னம்பிக்கையுடன் இப்போது இருக்கிறார்கள். ஏறக்குறைய 100,000 உயிர்களைக் காவு கொண்டு, இலட்சக் கணக்கானோரை இடம் பெயர வைத்த 1983 ல் தொடங்கிய யுத்தம் இப்போது நிறைவடைந்து விட்டது.
யாழ்ப்பாணம், அதிக இன்னல்களை அனுபவித்த ஒரு குடாநாட்டு நகரம் ஸ்ரீலங்காவின் வடமுனையில் அமைந்துள்ளது. நாட்டில் மிக அதிகமான தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நகரம். யாழ்ப்பாணம் தமிழப்;புலிகளின் தலைநகரமாகப் பிரிவினை வாதக் கிளர்ச்சியின் போது இருந்தது. அதன் காரணமாக அது கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வந்த போரின் போது முக்கியமான முற்றுகையின் கீழோ அல்லது இராணுவ சுற்றிவளைப்பிலோ வாழ்ந்து வந்தது. மூடிய பாதைகளும், சோதனைச் சாவடிகளும் அதை நாட்டின் மறு பாகத்தோடு வெட்டித் துண்டித்து தனிமைப் படுத்தியிருந்தது. சிதறலான நிலக் கண்ணி வெடிகளின் அபாயம் மக்கள் தொகையினை தொடர் அச்சத்தில் வைத்திருந்தது. பொருளாதாரம் விகாரமடைந்திருந்தது. மின்சார வெட்டு ஒரு தொடர் நிகழ்வு.பொருட்களுக்கெல்லாம் தட்டுப்பாடு. அவை கிடைத்தாலும் அநேகமாக அறா விலையாக இருந்தது. 1995ல் புலிகள் சக்தியாக வெளியேற்றப் பட்டிருந்தனர்.ஆனால் பிரிவினைவாதத் தலைமைத்துவம் கடந்த வருடம் முற்று முழதாக அழிக்கப்படும் வரை அங்கு சமாதானம் திரும்பவில்லை.
கொழும்பில் இருக்கும் ஸ்ரீலங்கா அரசின் திடமான குடிமுறை சார்ந்த நிர்வாகக் கட்டுப் பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் உள்ளது. உள்ளுர் வாசிகளும் வரவேற்கும் பாதுகாப்பு ஏவற் பயன்கள் கொண்ட ஒரு சூழ்நிலை. ஆனால் தமிழர்களுடனான நீண்டகால அரசியல் தீர்வு அமைதியை நோக்கி ஆனால் தவறில்லா அழுத்தமான வழிகளில் இன்னமும் நிறைவேற்றப் படவேண்டும். ”மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்” சொல்கிறார் ஐயாத்துரை சச்சிதானந்தம், ஒரு தமிழ் பத்திரிகையாளர். எங்கும் அச்சம் என்பதேயில்லை ஆனால் எங்கே அரசியல் தீர்வு.? அது இல்லாமல் சமாதானம் நீண்டகாலம் நிலைக்காது என்பதை அவர் ஆதரிக்கிறார்.
ஸ்ரீலங்கா அரசுடனான ஆயத மோதல்களில் பெரும்பாலான தமிழர்கள் பங்கு பெறவில்லை.ஆனால் பெரும்பாலான தமிழர்கள் போருக்குப் பிந்திய அரசியல் நடைமுறைகளில் திருப்தியற்றவர்களாய் உள்ளனர். கொழும்பு அரசாங்கம் தமிழர்களை மதிக்காததும், அவர்களின் மொழி கலாச்சாரம் என்பனவற்றை அங்கீகரித்து கௌரவிக்காத குறைபாட்டால், நிண்ட காலமாகவே அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான குறைகளால் அவதியுற்று வருகிறார்கள். அவர்கள் இன்னமும் சமமான உரிமைகளையும் தகைமைகளையும் தேடுகிறார்கள். சச்சிதானந்தம் சொல்கிறார். அவர்களின் பெரிய இலட்சியம் அவர்களின் கற்பனையில் காணும் கனடாவை ஒத்த பல இனங்களின் கூட்டிணைவான ஒரு அமைப்பு, தமிழ் குடியேற்றப் பகுதிகளான நாட்டின் வடக்கு கிழக்கில் உள்ளக மட்டத்திலான ஒரு சுயாட்சி முறை. ஒரு அரசியல் இணக்கப்பாடு கூடிய விரைவில் சமர்ப்பிக்கப் படலாம் எனத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுதான் அரசியல் தீர்வைச்சமர்ப்பிக்க மிகவும் வாய்ப்பான தருணம். சொல்கிறார் பாரபட்சமற்ற அமைப்பான மாற்றுக் கொள்கை நிலையத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஆராய்ச்சியாளர், மிராக் ரஹீம் அவர்கள். இது ஸ்ரீலங்காவிலுள்ள ஒரு அரச சார்பற்ற நிறுவனம். போரை வெற்றி கொண்டதில் மகிந்த ராஜபக்ஸ மிகவும் பரந்தளவில் பிரபலமடைந்துள்ளதை அனுபவித்து வருகிறார். ரஹீம் மேலும் குறிப்பிடுகிறார், தமிழர்களும் அதேபோல மற்ற ஸ்ரீலங்காவினரும் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது, அவரின் அரசியல் தலைமைத்துவத்தின் உந்து சக்தியைக் கொண்டு அவருக்கு வாய்த்துள்ள நல்லதருணத்தில் நிலையான சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்பதைத்தான்.
யாழ்ப்பாண வாழக்கையைச் சீர்தூக்கிப் பார்த்ததில் போர் முக்கியமாக முடிவடைந்து விட்டாலும், தமிழ் சுயாட்சி என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது. முதல் காரியமாக எவரும் காண்பது நகரமெங்கும் நிறைந்து வழியும் இராணுவ பிரசன்னத்தையே. சில மதிப்பீடுகளின்படி 40,000க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் அச் சிறிய குடாநாட்டில் உள்ளனர். ஒரு ஐரோப்பிய அபிவிருத்தி அதிகாரியின் கூற்றுப்படி எப்படியாயினும் அதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது, முன்பு சாதாரணமாக 20 மீட்டர் தூரத்துக்கு ஒரு இராணுவ வீரர் இருப்பார்,இப்போது அது 50 மீட்டராகி விட்டது இப்படி அவர் சொல்கிறார்.ஆனால் அவர்களின் அந்தப் பிரசன்னமானது கொழும்பின் உத்தரவுக்கு தமிழர்கள் கட்டுப் படவேண்டும் என்பதை உறுதிப் படுத்தும் ஆணையை நினைவு படுத்துகிறது.
உறுதியாக இந்த வீரர்கள் தாமாகவே இப்போது ஒரு புதுப்பிக்கப் பட்ட தமிழ் எதிர்ப்பினைத் தூண்டிவிடக் கூடும். யாழ்ப்பாணத்தில் அதிகமான தமிழ் பகுதிகளில் அளவிலும் தரத்திலும் கூடிய காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. தமிழர்களுக்குச் சொந்தமான பதினெட்டு விகிதமான குடாநாட்டு நிலப்பரப்பு அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போதைய தோற்ற நிலையில் இராணுவச் சீருடை இல்லாத எவருக்கும் அது தடை செய்யப் பட்ட ஓரிடமாகும். இந்த காணிகள் அபகரிப்பு கூட 30 வருட கலவர காலத்தில் அந்த இடங்களை விட்டு வெளியேறியவர்களுக்கும் பலவந்தமாக வெளியேற்றப் பட்டவர்களுக்கும் மீள் குடியேற்றத்தினைச் கிக்கலாக்கியுள்ளது. சிலர் வேறு இடங்களில் குடியமர்த்தப் பட்டுள்ளனர். ஆனால் பல்லாயிரக் கணக்கானோர் இன்னமும் தற்காலிக அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளார்கள். இது பெருமளவு தமிழ்சமூகத்தினரையும் அதே போலச் சர்வதேச மனித உரிமை அவதானிப்பாளர்களையும் சீற்றமடைய வைத்துள்ளது.
இராணுவ வீரர்களும் நாட்டின் ஆதிக்கச் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் தமிழ் பேசமுடியாதவர்களாய் இருப்பதும் தமிழர்களை மேலும் சோர்வடைய வைத்துள்ளது. உண்மையில் அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் மொழி அவர்களின் பொதுவான வந்தேறு குடிப் பாஷையான ஆங்கிலம் மட்டுமே.
இராணுவ வீரர்களால் தமிழர்களுக்கு மிகவும் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர்களின் கவனத்தை தவிர்ப்பதற்கு வேண்டி அவர்கள் மிகுந்த வலிகளை எதிர் கொள்கிறார்கள். உள்ளுர்வாசிகள் தங்கள் விருந்தாளிகளிடம் அங்குள்ள இராணுவ வீரர்களின் கண்களில் படும்படியான வகையில் தமிழ் போராளிகளின் நினைவுச் சின்னங்களை புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறார்கள். யாழ்ப்பாணவாசிகள் முச்சக்கர வாகனத்தையோ வாடகைச் சீருந்துகளையோ வாடகைக்கு அமர்த்தும்போது வயதான சாரதிகளுக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். ஏனெனில் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களிடத்தில் இளைஞர்கள் தமிழ் போராளிகளாக இருப்பார்களோ என்கிற ஒரு சந்தேகம் எப்போதும் தயார் நிலையிலே இருக்கிறது. சிதிலமடைந்து பாழான நகரின் உட்கட்டுமானங்கள் போரின் மரபுரிமை எச்சங்களுக்கு சாட்சியாக உள்ளன. குண்டு தாக்கியதும் ரவைகள் துளைத்ததுமான கட்டடங்கள் நகரமெங்கும் பரவிக் கிடக்கின்றன. யாழ்ப்பாண மத்திய தொடரூந்து நிலையம் இப்போது மிகவும் பாழடைந்து போயுள்ளது. ஒரு காலத்தில் பெருமையுடன் நின்ற செயற்கை நீருற்று இப்போது பரிதாபகரமான நிலையில் உடைந்துபோய் பள்ளமான கட்டிட அத்திவாரம் மட்டும் 1980 – 1990 காலப்பகுதியின் போர்த்தள எச்சமாகக் காணப்படுகிறது.
கொந்தளிக்கும் அழுத்தங்களுக்கும் காலங்கடந்த அழிவுகளுக்கும் புறமே யாழ்ப்பாண மக்கள் இன்னும் சுற்றித் திரிபவர்களாகவே இருக்கிறார்கள். சிலவேளைகளில் மற்ற எல்லாவற்றையும் விட தங்கள் சுதந்திர நடமாட்டத்தைத் தான் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் போலும்.முதல்முறையாக 30 வருடங்களின் பின் நாங்கள் கொழும்பு வைத்தியசாலைக்குச் செல்லக் கூடியதாக இருக்கிறது.” ஒரு உள்ளுர் வாசி தெரிவித்தார். உணவுச்சாலைகளும் தங்கும் விடுதிகளும் பல தசாப்த தேக்கங்களின் பின் தங்களின் வியாபாரநிலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கினறன. தை மாதமளவில் யாழ்ப்பாணத்தை நாட்டின் மறுபாகங்களுடன் இணைக்கும் பாதை திறக்கப் பட்ட பின்னர் உளநாட்டு, வெளிநாட்டு பயணங்களில் நிச்சயமாக ஒரு கூர்மை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட நகரமாயிருந்த யாழ்ப்பாண நகரை புதுமையான இந்தச் சுற்றுலா வரவு செங்குத்தாகச் சாய்த்து தேய்வடையச் செய்து விடுமோ என இங்குள்ள சிலர் கவலையடைகிறார்கள்.
துரதிருஷ்டவசமாக கொழும்பு யாழ்ப்பாணத்தின் நீண்ட காலத்தேவைக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான வளங்களையோ, சக்திகளையோ வழங்குவதில் மிகவும் தாமதம் காட்டுகிறது. அபிவிருத்தி என்ற வகையில் மாற்றுக் கொள்கை நிலையத்தைச் சேர்ந்த ரஹீம் கூறுகையில் உள்ளுர் தமிழ் மக்களின் கவலைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஆலோசனைக் குறைவினையும் பங்களிப்பின் குறைவினையும் அவர்கள் உணர்கிறார்கள். மொத்தத்தில் அதிகாரமளிக்கப் படாத ஒரு தன்மையே இங்கு நிலவுகிறது. தமிழர்கள் உடனடி சமாதானத்தின் அறுவடையை அனுபவிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்குமே தெரியும் இது ஒரு நொறுங்கக் கூடிய அமைதி என்று. சச்சிதானந்தன் அவரது நிருபர் பணிகளுக்கிடையே தான் பணிபுரியும் பத்திரிகையில் தினசரி சோதிட பலன்களையும் எழுதி வருகிறார். அவர் மீள் உறுதிக்கு பலன்கள் குறைவாகவே இருப்பதாக ஆரூடம் கூறுகிறார். யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் சுயாட்சிக்கோ,பருளாதார கௌரவத்துக்காகவோ வன்முறையற்ற வகையில் போராட்டம் நடத்த விரும்புவார்கள: ஆனால் அவர் சொல்கிறார், “போராட வேண்டி வந்தால் நிச்சயம் போராடுவார்கள”.
(நன்றி: The Foreign Policy Magazine)  தமிழில்: எஸ்.குமார்.

கருத்துகள் இல்லை: