புதன், 29 செப்டம்பர், 2010

UNP அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கின்றது

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!!அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கை நிலைப்பாடுகளைக் காலத்துக்குக் காலம் மாற்றிக் கொள்வது வழமை.  இலங்கையில் ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளுமே ஆரம்ப கால நிலைப்பாட்டில் இப்போது இல்லை.    ஆரம்பகால நிலை ப்பாட்டிலிருந்து மாறுபடுவதற்கு எல்லாக் கட்சிகளும்   ஏதாவதொரு காரணத்தைக் கூறுகின்றன.    புறநிலை மாற்றம் போன்ற ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களும் உண்டு.   வெறும் சந்தர்ப்பவாதக் காரணங்களும் உண்டு.
இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சி பிரகடனப்படுத்தப்பட்ட அதன் கொள்கை நிலைப்பாட்டிலிருந்து இப்போது விலகியிருக்கின்றது.     ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையே நாட்டுக்கு வெளியே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஒஸ்லோ அறிக்கை வெளியிடப்பட்டது.
ஐக்கிய இலங்கையில் சமஷ்டி அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே ஒஸ்லோ அறிக்கையின் சாராம்சம். இதுவே தங்கள் தீர்வுக் கொள்கை என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கின்றது.              ஒஸ்லோ அறிக்கையில் கூறியவாறான     சமஷ்டித் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி இப்போது கைவிட்டுவிட்டது. ஒஸ்லோ அறிக்கையில் சொல்லப்பட்ட  தீர்வை   நடைமுறைப்படுத்துவதற்கு   எவ்வித நடவடிக்கையையும் பதவிக் காலத்தில் மேற்கொள்ளாத போதிலும் அடிக்கடி அதை நினைவூ ட்டி வந்தனர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர்கள் சமஷ்டித் தீர்வு பற்றி அதிகம் பேசினார்கள்.   சமஷ்டித் தீர்வைக் கைவிட்டுவிட்டதாக இப்போது ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க லண்டனில் பி. பி. சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த அறிவிப்பைச் செய்தார்.
சமஷ்டித் தீர்வு என்ற நிலைப்பாட்டைக் கைவிடுவதற்குத் திஸ்ஸ அத்தநாயக்க கூறிய காரணம் சிரிப்புக்கிடமானது. புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி அதன் நிலைப்பாட்டை மாற்றியதாம்.    இப்போது ஆயுதப் போராளிகள்   இல்லாததால்  அதிகாரப் பகிர்வுக்கான தேவை இல்லை என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்.
இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக் காணும் நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கவில்லை என்பதையும் புலிகள் இயக்கத்தைத் திருப்திப்படுத்து வதற்கான தந்திரோபாயமாகவே ஒஸ்லோ அறிக்கையைக் கட்சி ஏற்றுக்கொண்டது என்பதையும் திஸ்ஸ அத்தநாயக்க கூறிய காரணம் வெளிப்படுத்துகின்றது.
ஒஸ்லோ அறிக்கை வெளியாகிய நாளிலிருந்து இவ்வளவு காலமும் ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டி பற்றிப் பேசித் தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றது என்பதும் இப்போது தெளிவாகிவிட்டது.
எல்லாக் காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.      இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை என்ன என்பதை ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்கமாக முன் வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.    அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில் சிறுபான்மையினர் மத்தியிலுள்ள கொஞ்சநஞ்ச ஆதரவும் முழுமையாக இல்லாது போவதைத் தவிர்க்க முடியாது

கருத்துகள் இல்லை: