பீப்ளியால் ஆஸ்கர் வாய்ப்பிழந்த அங்காடித் தெரு!அமீர்கான் தயாரிப்பில் உருவான பீப்ளி லைவ் படத்தால் ஆஸ்கருக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது வசந்தபாலனின் அங்காடித் தெரு.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்ட திரைப்படம் அங்காடித் தெரு. வசூல் ரீதியாகவும் ஐங்கரன் நிறுவனத்துக்கு பெரிதும் கைகொடுத்தது இந்தப் படம்.
சென்னையின் மாபெரும் அடுக்குமாடி ஜவுளிக் கடைகள், சூப்பர் ஷாப்பிங் மால்களில் வேலைக்கு சேர்ந்து, கொத்தடிமைகளாய் அவதிப்படும் பதின்ம வயது இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாய் கண்முன் நிறுத்தி கலங்க வைத்த படம் இது.
வசந்த பாலன் இயக்கியிருந்தார்.
இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் படங்களில் ஒன்றாக அங்காடித் தெருவை தேர்வு செய்திருந்தனர்.
அமீர்கானின் பீப்ளி லைவ் படத்துக்கும் அங்காடித் தெருவுக்கும்தான் கடும் போட்டி நிலவியது. இறுதியில், வறுமையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பீப்ளி லைவ் படத்துக்கு ஆஸ்கர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு தேசத்தின் வாழ்வாதார பிரச்சினை, அதற்கான நிஜ காரணம் போன்றவற்றை பீப்ளி லைவ் விளக்கியிருந்தது. அதுவே அந்தப் படத்தை ஆஸ்கர் வரை கொண்டு சென்றது என்றார் தேர்வுக் குழுவிலிருந்த இயக்குநர் சேது மாதவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக