வெள்ளி, 25 ஜூன், 2010

ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை குமரிக் கண்டத்தை ஆராய வேண்டும்

கோவை: குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:

தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்த்து அமைந்திருந்த லெமூரியா எனும் குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றியிருக்க வேண்டும். இன்றும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் திராவிடக் கலாச்சாரப் பண்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மூரில் மறைந்துவிட்ட வழக்கங்கள் கூட அங்கிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சிலப்பதிகாரத்தில் குமரிக் கண்டம் மூழ்கியது குறித்த தகவல்கள் காணக்கிடைக்கின்றன. தமிழர்கள் வாழ்ந்த இந்த பூர்விக இடத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த 38 ஆண்டுகளாக, குமரிக் கண்ட ஆய்வுப் பணிகள் நின்றுவிட்டன. நம் கப்பல் படையே இந்த ஆய்வை நடத்த முடியும். அவ்வாறு ஆய்வு நடத்தும் பட்சத்தில் உலகின் வரலாறு தெரியும். நாம் இந்த ஆராய்ச்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு. ராக்கெட் தயாரிக்கும் பணியை 1983ல் இந்தியா துவக்கிய போது, நாம் உலக அளவில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று விண்வெளியில் சர்வதேச அளவில் சாதனை நடத்தியிருக்கிறோம். அதற்கு தமிழரான அப்துல் கலாமுக்கே பெருமைகள் சேரும்.

பிரம்மோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்து கப்பல் இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து கப்பலில் உள்ள இலக்கைத் தாக்கவும் பயன்படுகிறது. இது செலவு குறைந்த தொழில்நுட்பம். அதே சமயம் துல்லியத் தன்மையும் புதுமைகளையும் கொண்டது.

தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி. பாரதியின் தொலைநோக்குப் பார்வைகள் நம் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் அறிவியல் துறையில் வர வேண்டும். அறிவியல் சிந்தனை அதன் வழி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: