வெள்ளி, 25 ஜூன், 2010

ஜெயலலிதா 500 கைதிகளை விடுதலை செய்யக்கூடாது

500 கைதிகளை விடுதலை செய்யக்கூடாது: ஜெ.
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 சிறைக்கைதிகளை அரசு விடுதலை செய்யப்போவதாக தகவல் வந்தது.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’செம்மொழி மாநாட்டினை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆயுட் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ய தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதை மீறி ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல்.
இது கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது.

கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல்; காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சினை; நாடாளுமன்றத்தில் அமைச்சர் தமிழில் பேசுகின்ற உரிமை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழி ஆக்குவது என எந்த உரிமைகளையும் பெற்றுத்தர முடியவில்லை. தமிழ் நாட்டின் அனைத்து உரிமைகளும் பறிபோய் கொண்டிருக்கின்றன.

தமிழக மக்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமை வாக்குரிமை. அதையும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருகின்ற ஆயுள் கைதிகள் மூலம் பறிக்க நினைக்கும் ஜனநாயக விரோதச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற வகையில் ஆயுட் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: