விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 9 தலைவர்களடங்கிய குழுவினர் இலங்கைக்கு 5 நாள் பயணத்தை மேற்கொண்டு அரசினதும் இராணுவத்தினதும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவரான பேராசிரியர் ரொகான் குணரட்ன கூறியுள்ளார். அரச, இராணுவ உயர் அதிகாரிகளுடன் குறிப்பாக பாதுகாப்பு, செயலாளர் கோதாபய ராஜபக்ஷடன் அவர்கள் பேச்சு நடத்தியதாக ரொகான் குணரட்ன « நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் » பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
“நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விஸ்வநாதன் உருத்திரகுமாரனை தவிர முக்கியமான சகல தலைவர்களும் இலங்கைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
புலிகளின் தூதுக்குழு சந்திப்பை நடத்திய போது தானும் கொழும்பில் இருந்ததாக பேராசிரியர் ரொகான் குணரட்ண தெரிவித்திருக்கிறார். புலிகளின் தூதுக்குழுவினர் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு சென்றதாகவும் அங்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு முயற்சிகளை பார்த்ததாகவும் அங்கு உள்ளூர் தளபதிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நிலைமைகளை எடுத்துக் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு திரும்பி வந்த தூதுக்குழுவினர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக அரசாங்கத்துக்கு கூறியதாகவும் அவை தொடர்பாக கவனத்திற் கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்திருப்பதாகவும் ரொகான் குணரட்ன மேலும் தெரிவித்திருக்கிறார்.
“வட, கிழக்கு அபிவிருத்தி திட்டம்’ என்று அழைக்கப்படும் சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனத்தை அமைப்பதற்கு இந்த விஜயத்தின் மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளது.
வட,கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திடமிருந்து நிதியை இந்த அமைப்பு பெற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் தலைவர்களுடனான இந்தப் பேச்சுவார்த்தைக்கு தடுப்புக்காவலிலிருக்கும் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக