செவ்வாய், 22 ஜூன், 2010

மற்ற செம்மொழிகளை விடவும் தமிழ் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள்

உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில், கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம் ஆகியன மட்டுமே செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுள்ளன.
மற்ற செம்மொழிகளை விடவும் தமிழ் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்து இப்போது வளம்பெற்று வருகிறது.சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. பாரசீகம், அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. அரேபிய மொழி, காலத்தால் மிகவும் பிந்தியது. இதுபோன்று, செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும் போது, தமிழ் மொழி மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும் விட உயர் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.
தமிழும், தமிழ்ச் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இலக்கிய வளத்தைப் பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறாத தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.
எந்த மொழியையும் சாரவில்லை: தமிழ் மொழி எந்த மொழியையும் சார்ந்து இருக்காமல் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இது, நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்  அடைந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்போதுதான் 2004-ல்தான் அதுவும் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகே நமக்குக் கிடைத்துள்ளது.
இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.யார் யார் பங்கேற்பு? இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வரவுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உள்ளிட்ட பலரும் வருகின்றனர். அஸ்கோ பர்போலாவுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது அளிக்கப்படுகிறது.
உலகெங்கும் 49 அயல் நாடுகளில் இருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள். குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழா நடைபெறும் புதன்கிழமை மாலை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்

இந்த மாநாட்டுக்கு அனைவரும் வருக என்று தனது உரையின் மூலம் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: