புதுச்சேரி: குழந்தைகள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக புதுச்சேரி யைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட குழந்தைக்கு போலியான சான்றிதழ் கொடுத்ததாக டாக்டர் ஒருவரும் தேடப்பட்டு வருகிறார்.
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பலர் கைதாகியுள்ளனர். இவர்களில் பலர் பெண்கள் ஆவர். அவர்களில் முக்கியமானவர் லலிதா. இந்தப் பெண்மணி மனித உரிமை அமைப்பின் தலைவியாக வேடம் போட்டுக்கொண்டு குழந்தைகள் கடத்தலை பெரிய அளவில் செய்து வந்தார். கும்பலின் தலைவி போல இவர் செயல்பட்டு வந்தார்.
இவரைக் கைது செய்துள்ள போலீஸார் இவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் கடத்தப்பட்டு விற்கப்பட்ட குழந்தைகளை படிப்படியாக மீட்டு வருகின்றனர்.
லலிதாவின் வீடடிலேயே தேவதர்ஷன், வித்யபாரதி என இரு குழந்தைகளை சமீபத்தில் போலீஸார் மீட்டனர். அப்போது இந்தக் குழந்தைகள் தொடர்பாக போலியான சான்றிதழ் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து லலிதா மீது புதுச்சேரி போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி குழந்தைகள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த லலிதாவை, புதுச்சேரி போலீஸாரும் கைது செய்தனர்.
பின்னர் லலிதாவை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்த முத்தியால்பேட்டை போலீஸார், தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது லலிதா கூறிய தகவல்...
எனது சொந்த ஊர் பண்ருட்டி. எனக்கும், புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து நாங்கள் தர்மாபுரியில் குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தேன்.
லாஸ்பேட்டை கென்னடிநகர், வாணரப்பேட்டை, கேண்டீன் வீதியில் வசித்து வந்தேன். கடைசி 6 வருடங்களாக புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணன் நகரில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் நானும், அவளும் நெருங்கி பழகி வந்தோம். இந்த நேரத்தில் எனது கணவரிடமிருந்து எனக்கு விவாகரத்து கிடைத்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து குழந்தைகளை கிரிஜா புதுச்சேரி கொண்டு வருவார். அந்த குழந்தைகளை என்னிடம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர் வாங்கி சென்று விடுவார். பின்பு அந்த குழந்தைகளை நான் வளர்த்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று விடுவேன். இதில் யாருக்கும் என் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, எனது வீட்டில் நித்யா அன்னை கரங்கள் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தேன்.
மேலும் இந்த குழந்தைகளை அடுத்தவர்களிடம் விற்பதற்கு போலி பிறப்பு சான்றிதழ் கிடைத்தது. எனவே எனக்கு தெரிந்த விபசார புரோக்கர் தமிழ் என்பவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரியும் மதியழகன் (46) என்பவரை எனக்கு தமிழ் அறிமுகம் செய்துவைத்தார்.
இதனால் மதியழகனிடம் நான் பழக்கம் வைத்துக் கொண்டேன். இதை பயன்படுத்தி அவரிடம் போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்கும்படி கூறினேன். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்து 6 குழந்தைகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தார். 6 குழந்தைகளும் எங்கள் மருத்துவமனையில்தான் பிறந்தது என்று கூறி டாக்டர் நெல்லியான் என்பவரும் கையெழுத்து போட்டு கொடுத்தார். டாக்டர் கொடுத்த இந்த சீட்டை பயன்படுத்தி நான் புதுச்சேரி நகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்றேன்.
இந்த நிலையில் எனக்கு கண்ணன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். மேலும் கண்ணனுக்கும், எனக்கும் பிறந்ததாக கூறி 2 குழந்தைகளுக்கு போலி பிறப்பு சான்றிதழ்களும் வாங்கி உள்ளேன். நான் குழந்தைகளை வளர்த்து விற்பது புதுச்சேரியில் யாருக்கும் தெரியாது என்றார்.
இதையடுத்து டாக்டர்நெல்லியானை விசாரிக்க போலீஸார் சென்றபோது நெல்லியான் இல்லை. இதையடுத்து மதியழகனை மட்டும் கைது செய்தனர். நெல்லியானை வலை வீசி போலீஸார் தேடி வருகிறார்கள்.
விபச்சாரப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தை...
லலிதா வீட்டில் மீட்கப்பட்ட வித்யாபாரதி என்ற குழந்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு விபச்சாரப் பெண்ணுக்குப் பிறந்ததாகும். அந்தப் பெண் தனக்குப் பிறந்த இக்குழந்தையை புரோக்கர் தமிழிடம் கொடுத்துள்ளார்.
அவர் லலிதாவிடம் ஒப்படைக்கவே, லலிதாதான் வித்யாபாரதி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். நல்ல விலை கிடைத்தவுடன் விற்கும் திட்டத்தில் இருந்தபோதுதான் சிக்கிக் கொண்டார்.
மேலும் கிரிஜா மூலம் வந்த குழந்தை தேவதர்ஷன். இந்தக் குழந்தைக்காக ரூ இரண்டரை லட்சம் பணத்தை கிரிஜாவிடம் லலிதா கொடுத்துள்ளாராம்.
வித்யபாரதி, தேவதர்சன் ஆகிய குழந்தைகள் தன்னுடைய முதல் கணவர் மோகனுக்கும், தனக்கும் பிறந்ததாக லலிதா போலி சான்றிதழ் தயார் செய்தார். இதே போல் இந்த 2 குழந்தைகளும் 2-வது கணவர் கண்ணனுக்கும், தனக்கும் இரட்டை குழந்தையாக பிறந்ததாக கூறி லலிதா மீண்டும் போலி சான்றிதழ் தயாரித்தார்.
இதற்காக அந்த குழந்தைகளுக்கு சத்தியநாராயணன், சத்தியவதி என்று பெயரை மாற்றினார். மேலும் பண்ருட்டியை சேர்ந்த ஏழை தம்பதியிடம் ஒரு ஆண் குழந்தையை வாங்கிய லலிதா அந்த குழந்தைக்கு சிவா என்று பெயரிட்டு போலி சான்றிதழ் தயாரித்தார். பின்பு சிவாவை அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ. 45 ஆயிரத்திற்கு விற்பனை செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிரிஜா ஒரு பெண் குழந்தையை லலிதாவிடம் கொடுத்தார். அந்த குழந்தைக்கு கலைபிரியா என்று பெயரிட்டு அவர் போலி சான்றிதழ் தயாரித்தார். உடனே கலைபிரியாவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ. 45 ஆயிரத்திற்கு லலிதா விற்றார்.
டாக்டர் நெல்லியான் சிக்கினால் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக