சனி, 26 ஜூன், 2010

நோபல் பரிசே வழங்கலாம் தினமலர் ஆசிரியருக்குஅறிஞர் பாராட்டு




கோவை: டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்று அறிஞர் கணபதி ஸ்தபதி தெரிவித்தார். இவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்த சிற்பி ஆவார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சாத்தனார் அரங்கில் நாணயவியல் தொடர்பாக 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவர் பேசிய பின் உரைக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய கணபதி ஸ்தபதி இக்கருத்தை தெரிவித்தார்.

 தினமலர் ஆசிரியர் பேசியதாவது: பழங்கால நாணயங்கள் தொல்லியல் ஆய்வு செய்பவர்களுக்கு நேரடியாக கிடைப்பதில்லை. அதை தேடி சேகரிக்க வேண்டியுள்ளது. பின்னர் அதை ஆய்வு செய்து சமுதாயத்துக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. கொடைக்கானலில் நாணயம் விற்பவரிடம் தகவல் சேகரித்து மதுரையில் இஸ்மாயில் என்பவரை கண்டறிந்தேன். அவரிடம் இருந்து வைகை ஆற்று மணலில் கண்டெடுக்கப்பட்ட  நாணயங்களை விலை கொடுத்து வாங்கினேன். அவற்றில் இரண்டு நாணயங்கள் பெருவழுதியினுடையது என்பதை சங்க இலக்கிய ஆய்வுக்கு பின் தெரிந்து கொண்டேன். நாம் அனைவரும் மொழியால் வேறுபட்டிருந்தாலும், கலாச்சாரத்தால் ஒன்று பட்டிருக்கிறோம். இவ்வாறு, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்த சொற்பொழிவின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க கால நாணயங்கள் பற்றி தினமலர் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டார். சோழர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதா? என தங்கம் தென்னரசு கேட்டார். சோழர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம், நாணயவியல் சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் விளக்கமளித்தார்.


* கணபதி ஸ்தபதி, சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்த நிபுணர். வரலாற்றின் அருமையையும் கட்டடக்கலையின் பெருமையையும் அறிந்தவர். தொல்லியல், நாணயவியலில் ஆழ்ந்த அறிவும் கொண்டவர். தினமலர் ஆசிரியரின் நாணயவில் கண்டுபிடிப்பை பாராட்டிய அவர், அதற்காக நோபல் பரிசே வழங்கலாம் என்றார். அவருடைய பாராட்டு தினமலர் ஆசிரியருக்கு அவர் அளித்த பெரிய கவுரவம்.

* தினமலர் ஆசிரியர் அரங்கில் பேசிய போது, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருந்தார். ஆசிரியர் பேச்சை மிகவும் ரசித்துக் கேட்ட அவர், ஆசிரியர் மற்றும் அறிஞர்களை கேள்விகள் கேட்டு தன்னை ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

* கருத்தரங்கில் தனது கண்டுபிடிப்புகளை விளக்கிய போது, தினமலர் ஆசிரியர், மேடையிலிருந்து கீழே இறங்கி, புரஜக்டர் திரை அருகே சென்று, பல்கலைக்கழக ஆசிரியர் போல், நாணயத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கினார். நாணயத்திலிருந்து துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கான உத்திகளைப் பற்றி அவர் பேசும் போது, நாணயவியல் துறையினர் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை: