வியாழன், 24 ஜூன், 2010

புலிகளிடம் மாதாந்தம் ஊதியம் பெற்று வந்தவர் மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க?

யாழ் பிராந்திய கட்டளைத் தளபதியாகவும் கடமையாற்றி வருபவரும் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதியாக செயற்படுபவருமான மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க புலிகளிடம் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா ஊதியம் பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகியிருப்பதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைக் கொலை செய்யும் சூழ்ச்சி தொடர்பாக 2009ம் ஆண்டு மே மாதம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கேர்ணல் ரஞ்சித் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் அத்துருசிங்க புலிகளிடம் ஊதியம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது என அந்த சிரேஸ்ட இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

கேர்ணல் ரஞ்சித் பெரேரா, அவரது மனைவி கரிமா மொஹமட், வர்த்தகர் ராமசாமி பிரகாரன், சண்முகலிங்கம் நவமணி, சானக்க கல்தேரா ஆகியோர் ஜனாதிபதியின் கொலை முயற்சி தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க கொழும்பு பாதுகாப்பிற்குப் பொறுப்பாக கடமையாற்றியதோடு, வர்த்தகர் ராமசாமி பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் அவர் ஊடாக 80 ஆயிரம் ரூபா தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் கொள்வனவு செய்ய கார் ஒன்றை தனது அலுவலக வாகனமாக பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தான் விரும்பிய வாகனத்தை அலுவலக வாகனமாக பயன்படுத்த முடியும். இதற்காக இராணுவம் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவை வழங்குகிறது. மேஜர் ஜெனரல் அத்துருசிங்கவின் தவணைப் பணமான மேலதிக 50 ஆயிரம் ரூபாவை ராமசாமி பிரபாகரனே செலுத்தி வந்துள்ளார்.

புலிகளின் கொழும்பிற்கான புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள வர்த்தகர் ராமசாமி பிரபாகரன், கொழும்பு பப்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிற்றி சந்தைத் தொகுதியின் உரிமையாளராவார். அவர் பயன்படுத்தி கையடக்கத் தொலைபேசியான 777 398117 என்ற இலக்கத்தைக் கொண்ட தொலைபேசிக்கு அதிகமான அழைப்புக்களை அத்துருசிங்கவே மேற்கொண்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ராமசாமி பிரபாகரன் 2008 ‐ 2009ம் ஆண்டுகளில் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கே.பியைச் சந்தித்து புலிகளுக்கான விநியோக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்றபோது கொழும்பின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக தினமும் தீர்மானங்களை எடுக்கும் கூட்டு நடவடிக்கை தலைவர்களின் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளும் மேஜர் ஜெனரல் அத்துருசிங்க, ராமசாமி பிரபாகரனுடன் மதுபான விருந்துகளிலும் கலந்துகொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். அத்துருசிங்க பொறுப்பாக இருந்தபோது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.

மேஜர் ஜெனரல் அத்துருசிங்க தொடர்பாக முழுமையான விபரங்கள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் அரச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் அமல் கருணாசேக்கர ஆகியோர் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும். இதுவரை வரை அதுகுறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இராணுவத் தலைமையகத்தில் 90ம் ஆண்டு காலப்பகுதியில் கேர்ணலாக பணியாற்றியபோது, அப்போது கப்டனாக மகிந்த அத்துருசிங்க கேர்ணல் ராஜபக்ஸவின் கீழ் பணியாற்றியுள்ளார். அந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரைத் தப்புவிப்பதற்காக கோதாபய ராஜபக்ஸ பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் .

கருத்துகள் இல்லை: