சனி, 26 ஜூன், 2010

திருமாவளவன், விடுதலைப்புலி சிவதம்பி என்று முத்திரைக் குத்தி வெளியேற்றப்பட்டார்,ஆனால் இப்போது

இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்ட போது, நீங்கள் (கலைஞர்) உங்கள் உள்ளத்துக்குள் ரத்தக் கண்ணீர் வடித்ததை உணர்ந்தவன் நான் என்று பேசிய திருமாவளவன், ஈழத் தமிழனத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட வேண்டும், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு இரண்டு கோரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 25.06.2010 அன்று எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சிறப்பு கருத்தரங்கில் பேசிய திருமாவளவன்,

தமிழுக்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர், மிகப் பொருத்தமான சூழலில் இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி வருகிறார்.

இம்மாநாடு இன்றையச் சூழலில் மிக மிக அவசியம் வாய்ந்த ஒன்று. இலங்கையில் தமிழினமே அழிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அங்கு தமிழ் மக்கள் அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டிய மோசமான நிலை நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், உலகிலுள்ள தமிழ் மக்களை, தமிழ் இனத்தவரை ஒன்றுகூட்ட வேண்டியது அவசியமாகிறது. மொழியால் ஒன்றுபாட்டால் தான் ஓரினம் ஒற்றுமையாக இருக்கும். அந்த வகையில் இப்போது தமிழினம் ஒற்றுமையாக இருந்து, அந்த இனம் அழியாமல் இருப்பதற்கு இந்தத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வழிவகை செய்திருக்கிறது. இம்மாநாட்டின் மூலம் தமிழினத்தை ஒன்று சேர்த்திருக்கிறார் தமிழக முதல்வர்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வருக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.

ஈழத் தமிழினத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே முதல் கோரிக்கை. அங்கே தமிழினம் அழிக்கப்பட்ட போது, நீங்கள் உங்கள் உள்ளத்துக்குள் ரத்தக் கண்ணீர் வடித்ததை உணர்ந்தவன் நான்.

அப்போது தஞ்சை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு விடுதலைப்புலி என்று முத்திரைக் குத்தி வெளியேற்றப்பட்டார், சிவதம்பி. ஆனால் இப்போது அவரை தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் முன்னிலையில் மேடையிலே பேசவைத்து அழகு பார்த்திருக்கிறீர்கள்.

ஒட்டுமொத்தத் தமிழர்களின் தாயகமாக இருந்தது இலங்கை. இதற்கு ராமாயணமே சாட்சி. ஒட்டுமொத்த தமிழனையும் ஆண்டான், ராவணன். அந்தத் தமிழ் தேசம் இப்போது தமிழனுக்குச் சொந்தமாக இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களுக்குச் சொந்தமான இலங்கை தேசத்தை சிங்களன் கொடுங்கோலாட்சி செய்து வருகிறான். தமிழினத்துக்கு ஏனிந்த வீழ்ச்சி.

தமிழினத்தைக் காக்கக் கூடிய வல்லமை படைத்த முதல்வர், ஈழத் தமிழர்களுக்கு தனி தாயகம் அமைத்து தர வேண்டும்.

தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பது எனது மற்றொரு கோரிக்கை. தமிழை ஆட்சி மொழியாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்தப் பலனும் இல்லை.

இந்தியாவில் ஆட்சிமொழியாக இருக்கிறது, இந்தி. அம்மொழி செம்மொழியா? சமஸ்கிருதத்துக்கு முன்பே வளமான மொழியாக வாழ்ந்திருக்கிறது நமது தமிழ் மொழி.

தமிழை ஆட்சிமொழியாக்கவில்லை என்றால், பல தலைமுறைகளுக்குப் பிறகு தமிழ் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்போது 'செம்மொழித் தமிழ்', 'செத்தமிழ்'மொழியாகிவிடக் கூடாது. எனவே, தமிழை ஆட்சிமொழியாக்க முழுவீச்சில் முதல்வர் நடவடிக்கை வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: