திங்கள், 29 மே, 2017

ஜி எஸ் டி வரி உயர்வுக்கு எதிராக தென் இந்திய ஓட்டல்கள் அனைத்தும் வேலை நிறுத்தம் .. நாளை மறுநாள்.


சென்னை: ஜி.எஸ்.டி.வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் ஓட்டல்கள் அடைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்க வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) முறையை அமல்படுத்த மத்திய அரசு சமீபத்தில் இறுதி ஆலோசனை செய்து பட்டியலை வெளியிட்டது. இதன்படி, நான்கு அடுக்காக 0, 5, 12, 18 சதவீதம் என பிரித்தது. இதில் உணவுப்பொருட்களுக்கு வரியில்லாமல் விட்டு விட்டு, சினிமா டிக்கட், சிகரெட், கார் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி அதிகம் விதிக்கப்பட்டது. பொருட்களுக்கு விதித்தது போல, சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கல்வி, மருத்துவம் சார்ந்த சேவைகளுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டது. சொகுசு ஓட்டல்களுக்கு அதிக வரி விதித்தது. இதன்படி,  இதுவரை அதிகபட்சமாக 5 சதவீதம் வரையில் வரியை கட்டி வந்த ஓட்டல்கள், இனி ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் வரி கட்ட வேண்டும்.
இப்படி பல மடங்கு அதிகரித்துள்ளதால் தங்களால் தொழில் செய்ய முடியாது; சாதாரண ஓட்டல்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த கட்டண உயர்வை நாங்கள் ஏற்க முடியாது; இதை வாடிக்கையாளர்கள் மீது தான் நாங்கள் ஏற்ற வேண்டியிருக்கும் என்று ஓட்டல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள்(30ம் தேதி)தென்மாநிலங்கள் முழுவதும் ஓட்டல்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியதாவது: ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யும் சிறிய ஓட்டல்களுக்கு தற்போது அரை சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை வரி உள்ளது. இதனை வாடிக்கையாளர்களிடம் நாங்கள் வசூலிப்பதில்லை. உணவகங்களே ஏற்று வந்தன. ஆனால், தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பால் வரி 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 10 மடங்கு அதிகம் ஆகும். அதே போல் ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் சாதாரண உணவகங்களுக்கு 2 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது. இதற்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 6 மடங்கு அதிகம் ஆகும். ஏ.சி. வசதி உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி 2 சதவீதம், மத்திய அரசின் சேவை 6 சதவீதம் என 8 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இரண்டு மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு உயர்வான வரியை நாங்கள் செலுத்த முடியாது. இந்த தொகையை வாடிக்கையாளர்களிடம் தான் வசூலிக்க வேண்டிய நிலை வரும். அதாவது ரூ.100க்கு உணவு சாப்பிட்டாலே ரூ.118 பில் கட்ட வேண்டும். இப்படி வாடிக்கையாளர்களிடம் தொகையை வசூலிக்க முடியாது.  இதனால், தேவையில்லாமல் பிரச்னை ஏற்பட தான் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த வரி விதிப்பால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாத பட்சத்தில் வரும் 30ம் தேதி அதாவது நாளை மறுநாள் ஓட்டல்களை அடைக்க முடிவு செய்துள்ளோம். இந்த  போராட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரியில் உணவகங்கள் மூடப்படும்.

தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் ஓட்டல்களும், தென்மாநிலங்களில் 5 லட்சம் ஓட்டல்களும் மூடப்படும். சென்னையில் 15 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்படும். நாளை இரவு அடைக்கப்படும் ஓட்டல்கள் நாளை மறுநாள் முழுவதும் அதாவது 36 மணி நேரம் இயங்காது. மீண்டும் 31ம் தேதி தான் ஓட்டல்கள் திறக்கப்படும். மீண்டும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக வருகிற ஜூன் 3ம் தேதி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிறகும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால் எங்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து இந்தியா முழுவதும் ஓட்டல்களை மூடி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் தங்கி வேலை பார்ப்போர் மற்றும் கல்லூரி உள்ளிட்ட மேற்படிப்பை படித்து வருவோர் பெரும்பாலும் ஓட்டல்களில் தான் மூன்று நேரமும் சாப்பிட்டு வருகின்றனர். ஓட்டல்கள் மூடப்பட்டால் அவர்கள் உணவுக்காக திண்டாடும் நிலை ஏற்படும். ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில், “ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்த்து தமிழக வணிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் முதல்கட்டமாக நாளை மறுநாள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

மருந்து கடைகள் ஸ்டிரைக்


தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மத்திய அரசு ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்துக்கு அனுமதி தரப்போவதாக தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் உயிர்காக்கும் மருந்துகள் பெறுவதில் சிரமம் ஏற்படும். இதனால் போலி மருந்துகள் அதிகளவு வரும் அபாயம் உள்ளது. நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். இளைஞர்கள், மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து, கருத்தடை மாத்திரைகள் தாராளமாக கிடைக்கும். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும்.

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஆன்லைனில் வாங்கும்போது ஒவ்வாமை ஏற்பட்டால் மாற்று மருந்து எழுதிக்கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதை கண்டித்து மே 30ம் தேதி(நாளை மறுநாள்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் 33 ஆயிரம் மருந்துக்கடைகள் உள்ளன. இதில் 30 ஆயிரம் கடைகள் பங்கேற்கும். 3,000 மருந்துக்கடைகள் மருத்துவமனைகளில் உள்ளதால் அவை கடையடைப்பில் பங்கேற்காது. நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக்கடைகள் அடைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  தினகரன்

கருத்துகள் இல்லை: