ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

பெரும்பான்மை யாருக்கும் இல்லை : திருமாவளவன்


மின்னம்பலம் : தமிழக ஆளுநர் வித்யாசாகர் ரவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவும் சந்தித்து பேசி இரண்டு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் எந்த முடிவும் எடுக்காதிருப்பது இந்த விவகாரத்தில் ஆளுநர் திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் கூறியதாவது, “தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.கடந்த 5-ஆம் தேதி தேதி அதிமுக-வில் சட்டமன்றகுழுத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

அப்போது தமிழகத்தில் இருந்திருக்க வேண்டிய கவர்னர் மராட்டிய மாநிலத்திற்கு சென்றுவிட்டார். கிட்டதட்ட 5 நாட்கள் கழித்துதான் தமிழகம் வந்தார். இது பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதிமுக-வில் தற்போது அதிகாரம் தொடர்பான ஒரு மோதல் வலுத்திருக்கிறது. யார் முதல்வர் ஆகவேண்டும் என மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் நெருக்கடியின் போது கவர்னருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. கவர்னர் வித்யாசாகர்ராவ் இருதரப்பிடமும் பேசி 2 நாள் ஆகிவிட்டது. எந்த முடிவும் அறிவிக்கவில்லை. இது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கவர்னரின் காலதாமதத்தால்தான் சசிகலா தரப்பு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கென தனி கவர்னரை மத்திய அரசு நியமித்து, தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும். அரசியலமைப்புக்கு எதிரான போக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அதிகாரப் போட்டியால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. பெரும்பான்மை யாருக்கும் இல்லை. எவராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் காலம் தாழ்த்துவது கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தும்”.

கருத்துகள் இல்லை: