புதன், 15 பிப்ரவரி, 2017

சிறையில் சசிகலா : கைதி எண் - 9234!


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றபோது பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணா முன்பு சரணடைந்தார்கள்.
முன்னதாக, இன்று காலை போயஸ்கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கும், பின் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும் மரியாதை செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்ட சசிகலாவுக்கு தமிழக எல்லை ஓசூர் வரை தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர். அப்போது, அந்தந்த ஊர்களின் எல்லையில் அதிமுகவினர் சசிகலா கார் வரும்போது தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஓசூரில் இருந்து பெங்களூரு நீதிமன்றம் வரை கர்நாடக காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.

சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் வருவதற்கு முன்னதாக நீதிமன்ற வளாகத்திற்கு முன் சசிகலாவை சந்திக்க அதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை, சசிகலா கணவர் மா.நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாலை 5:30 மணியளவில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணா முன்பு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சரணடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து, நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் சசிகலாவையும், இளவரசியையும் போலீசார் சிறையில் அடைத்தனர். சிறைச்சாலையில், சசிகலாவுக்கு கைதி எண்ணாக 9234-ம், இளவரசிக்கு கைதி எண்ணாக 9235-ம், சுதாகரனுக்கு கைதி எண்ணாக 9236-ம் வழங்கப்பட்டது.
முன்னதாக, சசிகலா சிறையில் தனக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதில், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வேண்டும் என்றும், மேலும் குடிக்க மினரல் வாட்டர், தனி ஏ.சி. அறை, வெஸ்டர்ன் டைப் கழிவறை, 24 மணி நேரமும் சுடுநீர் போன்றவை தனது அறையில் கிடைக்க வசதி செய்யுமாறும் தெரிவித்திருந்தார். ஆனால், அதனை நீதிபதி அஸ்வத் நாராயணா நிராகரித்து விட்டார்.
இந்நிலையில், சசிகலா கார் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் அருகே சென்றபோது, அந்த வளாக த்தில் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது திடீரென மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அங்கிருந்த 3 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முன் கூடியிருந்தவர்கள்மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: