திங்கள், 5 செப்டம்பர், 2011

மர்ம மனிதன் வதந்தி நடவடிக்கை எடுக்குமாறு-கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவு!

மர்ம மனிதன் விவகாரத்தால் அடிக்கடி ஏற்பட்டுவரும் பதற்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு-கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவு!

யாழ்.குடாநாட்டில் மர்ம மனிதன் விவகாரத்தால் அடிக்கடி ஏற்பட்டுவரும் பதற்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கு பாதுகாப்புச் செயலாளரால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் வதந்தியால் அண்மைக் காலமாக யாழ்ப்பாணம் அல்லோலகல்லோலப்படுகின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும் அச்சத்துக்கு மத்தியிலேயே மக்கள் இரவுப் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் ஏற்படும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகக் கேட்டபோதே கட்டளைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. இங்கு எவ்வித பதற்றமுமில்லை. கிறீஸ் பூதம் என்ற கதையின் மூலம் ஆதாயம் பெற முனையும் தரப்பினரே அவ்வாறான கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.இரவு வேளைகளில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கிராமமட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் என்னுடன் அடிக்கடி தொடர்புகொண்டு கேட்பார். அதுமட்டுமன்றி, நிலைமைகளைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.மர்ம மனிதனுக்கும் இராணுவத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.இராணுவத்தரப்புக்கு சேறுபூச முனைபவர்களே சம்பவங்களைத் திரிபுபடுத்திக் கூறுகின்றனர். மர்ம மனிதன் விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என நான் கருதுகின்றேன் என ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: