திங்கள், 4 ஜூலை, 2011

சிறுவன் சுட்டுக் கொலை.பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால்


சென்னை : ராணுவ வீரர் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் மீது ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், தலையில் குண்டு பாய்ந்து  சிறுவன் இறந்தான். துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவனின் உறவினர்களும் பொது மக்களும் மறியல் போராட்டம் நடத்தினர். பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டை அருகில் ராணுவ மையம் மற்றும் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி மரங்கள் அடர்ந்த சோலையாக காட்சியளித்து வருகிறது. இந்த பகுதிகளுக்கு எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது. ஏனென்றால் ஒரு பகுதியில் தலைமை செயலக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் வெளிப்பகுதியில் கூட யாரும் நீண்ட நேரம் நின்று பேச முடியாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதி. இப்பகுதியை சுற்றி குடிசை பகுதிகள் நிறைந்துள்ளது. இதில் ஏராளமான குடிசைவாசிகள் வசித்து வருகின்றனர்.

குடிசை பகுதியில் உள்ள இந்திராகாந்தி நகரை சேர்ந்த குமார் & கலைவாணி தம்பதியரின் மூன்றாவது மகன் தில்சன்(13). இவன் நேற்று மதியம் 1.30 மணிக்கு நண்பர்கள் சஞ்சய், பிரவீன் ஆகியோருடன் ராணுவ குடியிருப்புக்குள் தடுப்புச் சுவர் ஏறி நுழைந்தான். மரத்தில் ஏறி பாதாம் கொட்டைகளை பறிப்பதற்கு சென்றனர். மூன்று சிறுவர்களும் மரத்தில் ஏறி, பாதாம் காய்களை பறிப்பதை பார்த்த ராணுவ வீரர் ஒருவர், நவீன ரக துப்பாக்கியால் சிறுவர்களை நோக்கி குறி பார்த்தார்.

தங்களை மிரட்டுவதாக எண்ணிய சிறுவர்கள் அங்கிருந்து மெதுவாக செல்ல முயன்றனர். ஆனால் அந்த வீரர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சிறுவர்களை நோக்கி சுட்டார்.  வெளியேறிய குண்டு தில்சன் நெற்றியை துளைத்து சென்று மறுபுறம் வெளியே வந்தது. குண்டு பாய்ந்ததால் தில்சன் அலறி துடித்து மயங்கி விழுந்தான். அந்த ராணுவ வீரர் சிறிதும் கண்டு கொள்ளவில்லை இதை பார்த்த மற்ற சிறுவர்கள் அதிர்ச்சியில் ஓடத் தொடங்கினர்.

வேகமாக தடுப்பு சுவரை தாண்டி அங்கிருந்து வெளியே வந்தனர். உடனடியாக இந்திரா காந்தி நகருக்கு சென்று தில்சனின் பெற்றோரிடம் கூறினர். அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ராணுவ குடியிருப்பை நோக்கி வந்தனர். அதற்குள் ராணுவ வீரர்களும் உஷாராகினர். சிறுவனை சுட்ட ராணுவ வீரரை மறைத்து வைத்து விட்டு, பொதுமக்கள் உள்ளே நுழைய முடியாதபடி தடுப்பை ஏற்படுத்தினர். பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் விரைந்து வந்தனர்.

அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. கோட்டைக்கு செல்லும் கொடி மரச் சாலையிலும் மக்கள் திரண்டனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது ராணுவ அதிகாரிகளின் ஜீப் ஒன்று அந்த வழியாக வந்தது. அதை மக்கள் தடுத்து முற்றுகையிட்டனர். உடனடியாக உஷாரான போலீசார், ராணுவ அதிகாரிகளை மீட்டு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே, குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தில்சன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மாலையில் அவன் இறந்தான். இந்நிலையில், அப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆங்காங்கே சாலை மறியல் நடத்தப்பட்டது. போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் ஆக்ரோஷமாக காணப்பட்ட அப்பகுதி மக்கள் கலையாமல் அங்கேயே நின்றனர். பிரச்னை பெரிதாகிக் கொண்டே போனது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்ததால், போலீசாருக்கும்  மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஆத்திரப்பட்டு போலீசார் மீது கல்வீசத் தொடங்கினார். போலீசார் ஒருவரின் தலையில் பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். சிதறி ஓடிய மக்களை தாக்கினர். ஒருவர் அடி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார். தடியடி சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டது.

மருத்துவமனையில் மறியல், கதறல்

குண்டு பாய்ந்த தில்சனை மடியில் கிடத்திக் கொண்டு ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு தாய் கலைவாணி எடுத்துச் சென்றார். உறவினர்களும் மதியம் 1.30 மணிக்கு வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்கூட்டியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சிறுவனை பார்க்க அனுமதி வழங்க கோரி உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மறுத்ததால் சண்டை ஏற்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே மறியலில் ஈடுபட்டனர்.

சிறுவன் இறந்து விட்டான் என்ற செய்தி பரவியதும் உறவினர் மத்தியில் பதற்றம் அதிகரித்தது. அந்த நேரத்தில் சிறுவனை முதல் மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். இறந்ததை அறிவித்தால் பெரிய அளவில் பிரச்னை ஏற்படும் என்று நினைத்து இந்த நடவடிக்கை எடுத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் மருத்துவ ஊழியர்கள், சிறுவன் உடலை பச்சை துணியால் மூடி யாருக்கும் தெரியாமல் பின்புற வழியாக சவக்கிடங்கு அறைக்கு எடுத்து சென்றனர். சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து கதறி அழுதனர்.

அமைச்சர்கள் கார் முற்றுகை

அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சிறுவனை பார்த்தனர். பொதுமக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டனர். ‘‘சிறுவன் நலமாக இருக்கிறான். யாரும் பயப்பட வேண்டாம்’’ என்று கூறிச் சென்றனர். தொடர்ந்து அமைச்சர் உதயக்குமார், பாலகங்கா எம்.பி, பழ.கருப்பையா எம்.எல்.ஏ ஆகியோர் வந்து பார்த்தனர். ÔÔசிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுவன் பிழைத்து விடுவான். டாக்டர்கள் நல்லா பார்ப்பார்கள். அம்மா சொல்லிட்டாங்கÕÕ என்று அமைச்சர் உதயக்குமார் கூறினார்.

தண்ணீர் ஊற்றி ரத்த கறை அழிப்பு

துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், துடிதுடித்துக் கொண்டிருந்த தில்சன் உடல் மேல் அங்கு கிடந்த இலை, தளைகளை போட்டு மூடி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கதறியபடி ஆட்டோவில் ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதற்குள் தரையில் படிந்திருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி அழித்து விட்டனர்.

6 மணி நேரம் நீடித்த பரபரப்பு

பொது மக்களின் சாலை மறியலால் பல்லவன் சாலை, முத்துசாமி பாலம் சாலை, கொடி மர சாலை என 3 சாலைகளும் முற்றிலும் ஸ்தம்பித்தது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கயிறு, தடுப்பு வேலிகள் மூலம் போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் அரண் போல் நின்றனர். ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில், மா, மாதுளை, கொய்யா, புளி, சீத்தா உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன.

கூலி வேலை செய்த சிறுவன்

தில்சன் தந்தை குமார். கூலித் தொழிலாளி. தாய் கலைவாணி. பூ வியாபாரம் செய்து வருகிறார். 6ம் வகுப்பு வரை மட்டுமே தில்சன் படித்துள்ளான். தந்தை சர்க்கரை நோயாளி என்பதால் வேலைக்குச் செல்ல முடியாது.
ஸி 50 ஆயிரத்திற்கும் மேல் கடன் வாங்கி மருத்துவச் செலவு செய்துள்ளனர். கடனை அடைப்பதற்காக தில்சன், தீபிகா, திலீபன் ஆகியோர் படிப்பை விட்டு விட்டு கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

தூக்கிலிட வேண்டும்

சிறுவனின் உறவினர்கள் கூறுகையில், “நாட்டை பாதுகாக்க வேண்டியவர்கள் ராணுவ வீரர்கள். மக்களையும் பாதுகாக்க கூடியவர்கள். ஒரு சாதாரண சிறுவனை இப்படி தீவிரவாதி போல சுட்டுத் தள்ளினால் எங்களைப் போன்ற பாமர மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். இந்த படுபாதக செயலை செய்த ராணுவ வீரரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்’’ என்றனர்.

தவறு செய்தவர்கள் மீது  கடும் நடவடிக்கை

சென்னை : சிறுவன் பலியான சம்பவத்தில், யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
ராணுவ பிரிகேடியர் சசி நாயர் நேற்று அளித்த பேட்டி: ராணுவ வளாகத்தில் யாரும் ஆயுதங்கள் பயன்படுத்துவது கிடையாது. லத்தியோடு மட்டும்தான் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதனால், துப்பாக்கி சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை.

மரத்தில் இருந்து தவறி கம்பியில் விழுந்து அடிபட்டு சிறுவன் தில்சன் இறந்திருக்கலாம். இருந்தாலும் சிறுவன் இறந்தது துயர சம்பவம்தான். இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணை ஆரம்பித்து உள்ளோம். போலீசாரும் விசாரித்து வருகின்றனர். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சசி நாயர் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து கொடி மரச் சாலையில் உள்ள ராணுவ வளாகத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: